மழை நீர் தேங்கிய பகுதிகளில் ஏற்படும் தொற்று நோயை தடுக்க தண்ணீரை கண்டிப்பாக காய்ச்சி குடிக்க வேண்டும் என்று அரசு டாக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஒவ்வொரு காலி மனைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் உற்பத்தியாகும் கொசு மூலம் மலேரியா, மஞ்சள் காமாலை, டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது.
மழை நீர் தேக்கம் காரணமாக குடிநீரில் கழிவுநீர் கலந்துவிட அதிக வாய்ப்புள்ளது. கழிவுநீர் கலந்த தண்ணீரை குடிக்கும்போது காலரா, வயிற்றுப்போக்கு ஏற்படும். இதுபோன்ற மழை காலங்களில் ஏற்படும் நோயில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் மோகனசுந்தரம் கூறியதாவது:மழை பெய்யும்போது ஏற்படும் வெள்ள நீர் தாழ்வான பகுதிகளில் சென்று கலக்கிறது. அப்போது தண்ணீர் ஓடும் பாதையில் ஏதாவது மிருகங்கள் இறந்து பல நாட்களாகி கிடக்கும்போது அதில் உள்ள கிருமிகள் தண்ணீருடன் கலந்து விடுகிறது. அதேபோன்று பொது இடங்களில் சிறுநீர், மலம் கழிக்கப்பட்டு இருந்தாலும் மழை நீருடன் கலந்து விடுகிறது. இதுபோன்ற கிருமிகளால் பாதிக்கப்பட்ட தண்ணீர் வீடுகளுக்கு வரும் குடிநீர் குழாயிலும் கலந்து விடும். இந்த தண்ணீரை பிடித்து பொதுமக்கள் குடிக்கும்போது காலரா, வயிற்று போக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதனால் மழை காலங்களில் கண்டிப்பாக தண்ணீரை 100 சதவீதம் காய்ச்சி குடிக்க வேண்டும். இப்படி காய்ச்சி குடிக்கும்போது அதில் உள்ள கிருமிகள் தண்ணீர் கொதிக்கும்போது இறந்துவிடும்.
குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடாமல், லேசாக சூட்டுடன் உணவுகளை சாப்பிட்டாலும் உடலுக்கு நல்லது. இருமல் காரணமாக தும்மல் ஏற்பட்டால் கைக்குட்டையை வைத்து வாய் மற்றும் மூக்கு பகுதியை மூடி தும்மினால் கிருமிகள் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முடியும்.
அதேபோன்று வீட்டின் மொட்டை மாடிகள் மற்றும் மழை நீர் அதிகம் தேங்கிய நல்ல தண்ணீரில் இருந்து உருவாகும் கொசுக்களால் டெங்கு கொசுக்களும், சாக்கடை நீரில் இருந்து உருவாகும் கொசுக்களால் டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும். அதனால் வீடு மற்றும் சுற்றுப்பகுதியில் நீண்டநாள் தண்ணீர் தேங்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். கால்நடைகள் மற்றும் எலிகளின் கழிவுகள் மழைநீருடன் கலந்து, அந்த தண்ணீரில் நாம் நடக்கும்போது கால் நகம் போன்ற பகுதிகளில் ஊடுருவி எலி காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக