‘அலங்காரங்களை வெளியே காட்டாதீர்!’
என இஸ்லாம் உத்தரவிடுகிறது:
ﭧ ﭨﮞ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا
‘அவர்கள் (உடலில் பெரும்பாலும்) வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர்த்து தங்கள் அழகையும், (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத்தையும் வெளியே காட்டாது மறைத்துக் கொள்ளவும்.’(அல்குர் ஆன் 24:33) இந்த தொடரில் வரும் ‘அழகைக் காட்ட வேண்டாம்’ என்ற வசனத்திற்கு தப்ஸீர் கலை விற்பன்னர்கள் பின்வருமாறு பொருள் விரிக்கிறார்கள்:
1. முக அழகையும், உடல் அழகையும் காட்டுவது,
2. ஆபரணங்களின் அழகைக் காட்டுவது,
3. நடை உடை பாவனைகளால் பிறரை ஈர்த்து நிற்பது.
இவற்றுள் எதையும் மார்க்கத்தில் அனுமதிக்கப்படவில்லை. இவையாவும் ஹராமாக்கப்பட்டவை (தடுக்கப்பட்டவை) ஆகும். ‘
ஒரு பெண்ணின் உடல் முழுவதும் மறைக்கப்பட வேண்டியதாகும். அவள் தன் மேனி எழிலையோ, தலை முடியையோ, கால்கள், கழுத்து, நெஞ்சுப்பகுதியையோ தோள் பகுதியையோ வெளியே காட்டுவது மார்க்கப்படி குற்றமாகும்.’
மேற்கூறப்பட்ட வசனத்தில் வரும் ‘ஸீனத்’ என்ற சொல்லுக்கு குர்ஆன் விரிவுரையாளர்கள் தரும் விளக்கங்கள் சிந்தனைக்குரியதாகும்.
இமாம் குர்துபீ(ரஹ்) கூறுகிறார்கள்.
அழகு என்பது இருவகைப்படும். ஒன்று இயற்கையானது, மற்றொன்று செயற்கையானது. இயற்கையான அழகு என்பது ஒரு பெண்ணின் எழிலைக் காட்டும் முகமாகும். செயற்கையான அழகு என்பது ஆடை ஆபரணங்களால் மேனியை அலங்கரித்துக் கொள்வதாகும்.
வேறு சில விரிவுரையாளர்கள்:
‘ஸீனத்’ என்ற சொல்லை உள் அலங்காரம், வெளி அலங்காரம் என இருவகைப்படுத்துகின்றனர்.
உள் அலங்காரம் என்பது, காதணிகள், கழுத்தணிகள், கொலுசுகள், தண்டைகள், பாதத்தில் பூசப்படும் மருதாணி போன்ற வர்ணனைகளை குறிக்கின்றன என ஹஜ்ரத் இப்னு மஸ்வூது(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
வெளி அலங்காரம் என்பது, மோதிரம், கண்ணிலே போடு;ம் சுர்மா போன்ற மைகள் என ஹஜ்ரத் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும்,
‘முகம் இரு முன் கைகள்’ என ஹஜ்ரத் ஹஸன்(ரலி) அவர்களும் பொருள் தருகின்றார்கள்.
இவற்றை ஆதாரமாகக் கொண்டு ‘வெளியே தெரியும் பகுதியைத் தவிர’ என்ற குர்ஆன் வசனத்திற்கு மேற் கூறப்பட்ட வெளி அலங்காரங்களைத்தவிர உள்ளவைகளை நீங்கள் மறைத்துக் கொள்ளுங்கள் என விளக்கம் தருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக