வேலூர் கோட்டை வளாகத்தில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான மஸ்ஜிதும், இந்துக்களின் வழிபாட்டுத்தலமான ஜலகண்டேஸ்வரர் கோயிலும் இருக்கின்றது. இந்த கோட்டை முழுவதும் தொல்லியல்துறையின் அதிகாரத்தில் உள்ளதாகும். எந்த ஒரு கட்டிடத்தை தொல்லியல்துறை கையகப்படுத்தி விட்டதோ அக்கட்டிடத்தி தொல்லியல்துறையின் அனுமதியின்றி யாரும் பயன்படுத்த முடியாது. ஆனால் இந்த கோட்டையின் உள்ளே அமைந்துள்ள கோயில் மக்களின் பயன்பாட்டில் உள்ளதோடு அந்த கோயிலை இந்து அறநிலையத்துறையும் தன் வசம் எடுத்துக் கொண்டுள்ளது. ஆனால் முஸ்லிம்களின் வழிபட்டு உரிமை மட்டும் ஆண்டாண்டு காலமாக மறுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜலகண்டேஸ்வரர் கோவிலின் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறை எடுத்துக்கொண்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ''வேலூர் கோட்டை இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இடத்தில் உள்ள கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாது. எனவே அந்த உத்தரவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதி கே.சந்துரு விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வேலூர் கோட்டை வளாகம் உள்ளது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால், அங்கு ஆலயம் கட்டப்பட்டு, அங்கு மக்கள் வழிபடும் நிலையில், அந்த கோவில் நிர்வாகத்தில் தலையிடும் உரிமை இந்து சமய அறநிலையத்துறைக்கு வந்துவிடுகிறது. பொதுமக்களிடமிருந்து காணிக்கையாக நிதி வசூலிக்கப்பட்டு, அதை வைத்து கோவில் நிர்வாகத்தை நடத்துவதால், அந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை தன்வசம் எடுத்துக்கொண்டதில் சட்டவிரோதம் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் அறிவது என்ன? இந்துக்களின் ஒரு வழிபாட்டுத்தலத்தை தொல்லியல்துறை கையகப்படுத்தினாலும் அந்த வழிபாட்டுத்தலம் மக்கள் பயன்பாட்டில் இருக்குமானால், அங்கே நிதி வசூலிக்கப்படுமானால் அந்த வழிபாட்டுத்தலத்தை தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்ளலாம் என்கிறது. மேலும் தொல்லியல்துறையின் கைவசம் உள்ள இக்கோயிலில் மக்கள் வழிபாடு நடத்துவது தவறு என்றோ, அதை தடுக்கவேண்டும் என்றோ நீதிமன்றம் கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்த அடிப்படையில் வேலூர் கோட்டையில் அமைந்துள்ள பள்ளிவாசலில் முஸ்லிம்கள் தொழுகை நடத்திட தொல்லியல்துறை அனுமதியளிக்கவேண்டும். அவ்வாறு அனுமதியளிக்காத பட்சத்தில் முஸ்லிம்கள் தாமாக முன்வந்து தொழுகை நடத்த வேண்டும். அப்படி தொழுகை நடத்துவதை தடுத்திட தொல்லியல்துறைக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை இந்த தீர்ப்பின் சாராம்சம் சொல்கிறது. அப்படி தொழுகை நடப்பதை தடுப்பார்களாயின் இந்தியாவில் மதசார்பின்மை என்பது கேலிக்கூத்தாகிவிடும். எனவே சட்டத்தில் ஒரு விசயத்திற்கு அனுமதி உண்டென்றால் அதில் முஸ்லிம்களுக்கும் அனுமதி உண்டுதானே! தடை என்றால் அனைவருக்கும் அந்த தடை பொருந்தும் தானே! இதில் முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்?
மேலும் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதை காப்பாற்ற முனையும் முஸ்லிம் இயக்கங்கள் கண்முன்னே தொல்லியல்துறையின் கயமைத்தனத்தால் காலாவதியாகிவரும் பள்ளிவாசலை மீட்டெடுப்பதில் முனைப்பு காட்டாதது ஏன் என்பதும் புரியாத புதிராக உள்ளது. ஒரு நாள் முற்றுகை என கிளம்பியவர்கள் ரோட்டில் தொழுதுவிட்டு, அறிவிக்கப்படாத நாளில் அறிவிக்கப்படாத முறையில் வேலூர் கோட்டைக்குள் நுழைந்து மஸ்ஜிதில் தொழுகை நடத்துவோம் என்று வீரமாக பேசியதோடு சரி. ஆண்டுகள் உருண்டோடியதுதான் மிச்சம். ஆளைக் காணோம். மற்ற இயக்கங்களின் நிலையும் இதுதான். எனவே முஸ்லிம் இயக்கங்கள் இந்தப் பிரச்சினையை கையிலெடுத்து பள்ளிவாசலில் தொழுகை நடைபெற ஆவன செய்யவேண்டும் என்பதே முஸ்லிம்களின் ஆசையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக