"என் ஒரு கிட்னியைத் திருடி விட்டார்கள்... ஏதாவது உதவி செய்யுங்கள்" என வயிற்றில் போலி பேண்டேஜுடன் டுபாக்கூர் சோக கதை கூறி ஊர், ஊராக பொது மக்களை ஏமாற்றிப் பணம் வசூலிக்கும் வாலிபரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் நேற்று முன் தினம் வாலிபர் ஒருவர் வயிற்றில் பேண்டேஜுடன், அங்குள்ள டாக்ஸி ஓட்டுனர்களிடம் கண்ணீர் மல்க உதவி கேட்டார். ஓட்டுனர்கள் விசாரித்த போது, அந்த வாலிபர் கூறியதாவது:
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் நேற்று முன் தினம் வாலிபர் ஒருவர் வயிற்றில் பேண்டேஜுடன், அங்குள்ள டாக்ஸி ஓட்டுனர்களிடம் கண்ணீர் மல்க உதவி கேட்டார். ஓட்டுனர்கள் விசாரித்த போது, அந்த வாலிபர் கூறியதாவது:
"என் பெயர் சுடலை மாடசாமி (18). நாகர்கோவில் அருகே புதுகிராமத்தைச் சேர்ந்தவன். கேரள மாநிலம் திருச்சூரில் வேலைக்குச் சேர்த்து விடுவதாக கூறி, என்னையும், 2 நண்பர்களையும் வள்ளியூரைச் சேர்ந்த புரோக்கர் ராஜா அழைத்து சென்றார். திருச்சூரில் ஒரு அறையில் எங்களை அடைத்து வைத்து, முகத்தில் மயக்க மருந்து அடித்தனர். நான் மயங்கி விழுந்தேன். மயக்கம் தெளிந்து கண் விழித்த போது, திருச்சூரில் தெரு ஓரத்தில் கிடந்தேன். வயிற்றின் வலது பக்கத்தில் அறுவை சிகிச்சை செய்து தையல் போடப்பட்டிருந்தது. இதனால், எனது கிட்னியை அவர்கள் திருடி விட்டதாக அறிந்து அங்கிருந்து தமிழக பேருந்தில் ஏறி ஒட்டன்சத்திரம் வந்து சேர்ந்தேன்."
இவ்வாறு அப்பாவித் தனமாக கூறினார்.
பரிதாபமடைந்த டாக்ஸி ஓட்டுனர்கள், அந்த வாலிபருக்குச் சாப்பாடு வாங்கி கொடுத்து சொந்த ஊருக்குத் தங்கள் காரிலேயே அழைத்து செல்வதாக கூறினர். அதற்கு மறுத்த அந்த வாலிபர் "ரூ.200 கொடுத்தால் போதும், நானே ஊருக்குச் சென்று விடுவேன்" என்றார். தொடர்ந்து அவரிடன் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஓட்டுனர்கள், அந்த வாலிபரின் வயிற்றில் இருந்த பேண்டேஜை வலுக்கட்டாயமாக அவிழ்த்தனர். காயம் ஏதும் இல்லை. ஆத்திரமடைந்த ஓட்டுனர்கள் அந்த வாலிபருக்குத் தர்ம அடி கொடுத்து விரட்டினர்.
இதே வாலிபர் கடந்த ஏப்ரல் 1ம் தேதி திருச்சியிலும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. திருச்சி பேருந்து நிலையத்தில் வயிற்றில் பேண்டேஜுடன் சென்ற அவர், கிட்னியைப் பறிகொடுத்ததாக பொய்யான சோக கதையைக் கூறியிருக்கிறார்.
இதை நம்பிய சிலர், திருச்சி காவல்துறை கமிஷனர் மாசானமுத்துவிடம் அழைத்து சென்றனர். காவல்துறை விசாரணையில், அந்த வாலிபர் ஏமாற்று பேர்வழி என்பது தெரிந்தது. காவல்துறையினர் செமத்தியாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் எச்சரிக்கைக்குப் பின்னும் அந்த வாலிபர் ஊர் ஊராக சென்று மக்களிடம் கிட்னி கதையைக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது இரக்கம் கொண்ட பலர் பணம் வசூலித்து கொடுத்து ஊருக்குப் பேருந்து ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர்.
ஒட்டன்சத்திரத்தில் இந்த வாலிபர் மோசடியில் ஈடுபட்டது குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. டுபாக்கூர் வாலிபரை உடனடியாக கைது செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. "அந்த வாலிபர் குறித்து தகவல் தெரிந்தால் அருகிலுள்ள காவல்நிலையங்களுக்குப் பொதுமக்கள் தெரிவிக்கலாம்" என்று காவல்துறை அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக