அல்கொய்தா இயக்கத்தின் நிறுவனரும் அதன் தலைவருமான பின்லேடன் மரணமடைந்ததாக பிபிசி தெரிவித்துள்ளது.
அமெரிக்க செய்தி நிறுவனங்களை மேற்கோள் காட்டி, பிபிசி இவ்வாறு அறிவித்துள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்க உயர் ராணுவ நடவடிக்கைக் குழு அதிகாரி ஒருவர் இதுகுறித்துக் கூறும்போது, ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் நடைபெற்ற தரைவழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். கடந்த வாரமே இது நிகழ்ந்துவிட்டது. இருப்பினும் உறுதிப்படுத்துவதற்காகக் காத்திருந்தோம் என்று தெரிவித்தார்.
பின்லேடன், அமெரிக்காவின் தேடுதல் நபர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் மீது 2001 செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதல் உள்பட பல்வேறு தாக்குதல்களுக்கு காரணகர்த்தாவாக, சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2001ஆம் ஆண்டுத் தாக்குதலுக்குப் பிறகு பின்லேடனைப் பிடிக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. அவர் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மலைப் பகுதியில் பதுங்கியிருப்பதாகத் தெரியவந்ததும், அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டது. ஆனால், இதுவரை அவர் பிடிபடவில்லை.
2001 செப்.11 தாக்குதலுக்குக் காரணமான பின்லேடனைப் பிடித்து தண்டனை வழங்குவோம் என்று உறுதியாகச் செயல்பட்டார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யு. புஷ். ஆனால், தற்போது வெளியாகியுள்ள செய்தி, அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும், அமெரிக்க தேசிய பாதுகாப்புக் குழுவுக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவும் ஆறுதலாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது. அண்மைக் காலமாக அமெரிக்க மக்களிடையே சிறிது சிறிதாகச் சரிந்துவரும் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு, இந்த அறிவிப்பின் மூலம் சற்றே நிமிரக்கூடும் என்று தெரிகிறது...
இந்த தாக்குதல் குறித்து அமெரிக்காவின் ஏபிசி நிறுவனம் வெளியிட்ட செய்தி:
அமெரிக்காவில் நடந்த மிக பயங்கர தாக்குதலின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்ட ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார் என அந்நாட்டின் அதிபர் ஒபாமா அறிவித்தார்.
பின்லேடன் கொல்லப்பட்டது அல்-காய்தாவை வீழ்த்தும் முயற்சியில் குறிப்பிடத்தக்க சாதனை என்று அவர் வர்ணித்தார்.பாகிஸ்தானின் அப்போட்டாபாதில் உள்ள ஒரு வீட்டில் பின்லேடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அவர் மீது தாக்குதல் நடத்த உகந்த நேரம் தீர்மானிக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டதாக ஒபாமா தெரிவித்தார்.அமெரிக்கர்கள் அடங்கிய சிறிய குழு ஒன்று இந்த தாக்குதலை நடத்தியது என ஒபாமா தெரிவித்தார். துப்பாக்கிச்சூட்டுக்குப் பின் பின்லேடனை அமெரிக்கப் படையினர் கொன்று அவரது உடலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என ஒபாமா தெரிவித்தார்.மரபணு பரிசோதனையில் அது பின்லேடன் உடல்தான் என உறுதிப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிஐஏவுடன் இணைந்து சிறப்பு கூட்டு நடவடிக்கை படையினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த தகவல்கள் தெரிவித்தன.அமெரிக்காவும், பாகிஸ்தானும் இணைந்து நடத்திய தாக்குதல் இது என பாகிஸ்தான் உளவுப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 1.30 மணியளவில் இஸ்லாமாபாதில் இருந்து 100 மைல்கள் தொலைவில் உள்ள அப்போட்டாபாதுக்குள் 2 அமெரிக்க ஹெலிகாப்டர்கள் அதிரடியாகச் சென்று தாக்குதல் நடத்தின.அந்த 2 ஹெலிகாப்டர்களில் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்த பாகிஸ்தான் அதிகாரி தெரிவித்தார்.
அதிபர் ஒபாமா அறிவிப்பதற்கு சற்று முன்பு வரை இந்த தாக்குதல் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.பின்லேடனின் மரணம் குறித்து ஒபாமா தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குறிப்பிடத்தக்க சாதனை அமெரிக்காவுக்கும், உலகில் அமைதியை விரும்பும் மக்களுக்கும் ஒரு வெற்றி என ஜார்ஜ் புஷ் தெரிவித்தார்.இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவத்தினருக்கும், உளவுப் பிரிவினருக்கும் புஷ் வாழ்த்து தெரிவித்தார்.
பின்லேடன் இறந்த தகவல் பரவியதும், வெள்ளை மாளிகைக்கு வெளியே 200-க்கும் மேற்பட்டோர் அமெரிக்கக் கொடிகளுடன் கூடினர். யுஎஸ்எ, யுஎஸ்ஏ என அவர்கள் கோஷம் எழுப்பினர்.
நன்றி : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக