OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 30 மார்ச், 2011

தயவு செய்து சிந்தியுங்கள்!

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்’தின் தேர்தல் ஆதரவு நிலையை தொடர்ந்து பல்வேறு கேள்விகளை முன் வைக்கும் நம் சகோதரர்கள் அனைவரும் இந்த மடலை ஒரு முறையேனும் முழுதாக படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாமெல்லாம் முதன் முதலில் ஓர் அடிப்படையை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

தி.மு.க வாக இருந்தாலும் அது அ.தி.மு.க வாக இருந்தாலும் ரெண்டுமே இஸ்லாமிய சமுதாயத்திற்கு பாதகங்களைத்தான் அதிகம் செய்திருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க இயலாது.

அரசியல் என்றாலே அரசியல்வாதிகள் என்றாலே ஊழல், அவரவர்களுக்கு சொத்து சேர்த்துக்கொள்ளுதல், அடக்குமுறைகள், லஞ்சம், சிறுபான்மை சமுதாயத்தை நசுக்குதல்... இவையெல்லாம் அவர்களோடு ஒட்டி பிறந்த ரெட்டை குழந்தைகள். இதில் அவர்களுக்குள் யாருக்கும் விதிவிலக்கில்லை.

இந்த நாட்டில் சிறுபான்மையாக இருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தில் வாழும் நாம் இந்த அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய போகிறேன் என கிளம்பினால், முழுநேர அரசியலில் ஈடுபட்டால் - முஸ்லிம் அல்லாத மற்ற மற்ற சமுதாயத்தவர்களின் ஆதரவையும் பெற்றால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதற்காக வளைந்து கொடுக்க ஆரம்பித்து; அனைத்து விழயங்களிலும் வளைந்துகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு; இறுதியில் படைத்த இறைவனுக்கு இணைவைக்கும் பகிரங்க வழிகேட்டு காரியங்களும் நம் கண் முன்னே நடக்கும்போது அதை தடுக்க திராணியற்றவர்களாக மாறி,இறுதியில் அரசியல் சாக்கடையில் விழுந்த பன்றிகளாக உருவெடுப்போம்,தள்ளப்படுவோம். நமது ஒரே உயர் நோக்கமான மறுமை வாழ்கையை பாழாக்கி கொள்வோம். மரணத்திற்குப்பின் நிரந்தர நரகத்தில் தள்ளப்படுவோம்.

இங்கே தான் அறிவுள்ள ஒவ்வொரு இஸ்லாமியனும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த தேர்தலில்களில்தான் ஒவ்வொருஅரசியல்வாதியும் மக்களுக்கு என்னென்ன தேவை இருக்கிறது? அதில் எவற்றையெல்லாம் பூர்த்தி செய்தால் (அல்லது) பூர்த்தி செய்வேன் என உறுதி அளித்தால் அவர்களுடைய ஓட்டை நாம் அறுவடை செய்யலாம்,அதன்மூலம் நாம் ஆட்சி அதிகாரத்தில் அமரலாம் என சிந்திப்பார்கள்.

இந்த சந்தர்ப்பத்தைத்தான், இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில், அதே நேரத்தில் நமது இஸ்லாமிய சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் விதத்தில் எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை ஒவ்வொரு இஸ்லாமியனும் சிந்திக்க வேண்டும். அதைத்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருகிறது.


"தி.மு.க வாக இருந்தாலும் அ.தி.மு.க வாக இருந்தாலும் - அரசியல்வாதிகள் செய்யற அனைத்து அட்டூழியங்களைத்தான் நீங்கள் ஒவ்வொருவரும் தவறாமல் மாறி மாறி செய்திட்டு வர்றீங்களே,உங்களை நல்லவங்களா மாத்தறது எங்கள் வேலையுமில்லை,அதற்காக நாங்கள் முழுநேர அரசியலில் ஈடுபட்டு எங்கள் மறுமை வாழ்கையை பாழாக்கிக்கொள்ள விரும்பவுமில்லை. ஆக, எங்கள் இஸ்லாமிய சமுதாயத்துக்கு நீ என்ன செய்வாய் (அல்லது) போன தேர்தல் வாக்குறுதிகளில் செய்யறேன்’னு சொன்னதை இதுவரைக்கும் என்னென்ன செய்து முடித்தாய்; அதை சொல்லு? அதில் உள்ள சாதக பாதகங்களை அலசிப்பார்த்து முஸ்லிம்களாகிய நாங்கள் உனக்கு ஒட்டு போடலாமா வேணாமா என்பதை முடிவு செய்வோம்." என்ற வழிமுறையைத்தான், என்ற அடிப்படையைத்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒவ்வொரு தேர்தலிலும் பின்பற்றி வருகிறது. அனைத்தையும் அல்லாஹ் அறிந்தவன்.


“எங்களுக்கு 3 சீட்டுக்கள் கொடுத்தால் போதும், எங்கள் இஸ்லாமிய சமுதாயத்தின் முன்னேற்றதிற்கு நீங்கள் எவ்வித வழிவகைகளையும் செய்யவில்லையானாலும் பரவாயில்லை, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையானாலும் பரவாயில்லை (அல்லது) எதிர்கால சமுதாய விடிவுக்கான வாக்குறுதிகளே இதுவரை நீங்கள் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை - எங்கள் ஆதரவு உங்களுக்கே” என்று அடிமை சாசனம் எழுதி கொடுக்கும் சமுதாய இயக்கங்கள் மத்தியிலே எங்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டும் நன்மை என்ற ரீதியில் வந்தால் மட்டும் தான் ஆதரவு, மற்றபடி தலைவர்களின் தனிப்பட்ட வேறு எந்த கோரிக்கைகளுக்குமோ துளியளவும் இடமில்லாத காரணத்தால் தான் இறைவனின் மாபெரும் கிருபையினால் இன்றைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் ஒரு தன்னிகரற்ற இடத்தைப்பெற்றுள்ளது என்பதை மறுக்க முடியாது. எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே

யாராக இருந்தாலும் ஏதாவது சமுதாய‌ கோரிக்கை சார்பாக தவ்ஹீத் ஜமாஅத் அழைத்தால், இவர்களை நம்பி போகலாம், இவர்கள் யாருடனும் விலை போக மாட்டார்கள் என்ற ரீதியில் தவ்ஹீத் ஜமாஅத் மீது முழு நம்பிக்கை வைத்து அலைகடலென திரண்டு வருவது என்பது ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் கிடைத்த பாக்கியம். (எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே). சமுதாயப் பணிகளை சளைக்காமலும் சுய நலமில்லாமலும் (அல்லாஹ்வின் மாபெரும் உதவியைக்கொண்டு) செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இதுவரை எதிர்கொண்ட எந்த தேர்தலாக இருந்தாலும் (அல்லாஹ்மேல் தவக்கல் வைத்து) முஸ்லிம் சமுதாயத்தின் நன்மையை மட்டுமே முன்வைத்து எதிர்கொள்ளத் தீர்மானித்து வருகிறது.

2004 இல் "அல்லாஹ்வுடைய மிகப்பெரும் உதவியைக்கொண்டு" நாம் தஞ்சை பேரணியை துவக்கி நம்முடைய மாபெரும் மக்கள் கூட்டத்தை முதன் முதலாக காட்டி, நமது வாழ்வாதார கொள்கையான தனி இட ஒதுக்கீடு கொள்கையை முன் வைத்தோம்; அப்போதைய தி.மு.க - நாம் ஒரே மூச்சாக முன்னெடுத்து சென்ற முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டு கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்ததால் அந்த பாராளமன்ற (M.P.) தேர்தலில் தி.மு.க.வுக்கு ஒட்டுமொத்த ஆதரவு தெரிவித்து40க்கு 40 என்ற கணக்கில் வெற்றி பெற உறுதுணையாக இருந்தோம்.(அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆட்சியை வழங்குகிறான்).


அந்த 2004 பாராளமன்ற (M.P.) தேர்தலில் வெற்றி பெற்ற பின் தி.மு.க. தான் தந்த வாக்குறுதியை வசதியாக மறந்தது.

பின்னர், (நாம் த.மு.மு.க.விலிருந்து விலகிய பின்) 2 ஆண்டுகள் கழித்து, 2006தமிழக சட்டசபை (M.L.A) தேர்தலின் போது கும்பகோணத்தில் "அல்லாஹ்வுடைய மிகப்பெரும் உதவியைக்கொண்டு" மீண்டும் ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தை கூட்டி , நம் வாழ்வாதார கொள்கையான இட ஒதுக்கீடு கொள்கையைத்தான் ஆணித்தரமாக மீண்டும் முன் வைத்தோம்.

அப்போது, ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை வசதியாக மறந்த தி.மு.க., 2006 தமிழக சட்டசபை (M.L.A) தேர்தலில் 234 தொகுதிகளிலும் மீண்டும் வெற்றி பெற செய்யுங்கள், நாங்கள் இட ஒதுக்கீட்டை தந்துவிடுகிறோம் என தனது ஏமாற்றும் வேலையை அரங்கேற்றியது.

அப்போது, ஒரு முஸ்லிம் இரண்டு முறை ஏமாறமாட்டான் என்பதற்கேற்ப தி.மு.க.வின் ஏமாற்று வாக்குறுதிகளுக்கு அடிபணியாமல்; மறுபுறம் இட ஒதுக்கீடுக்கு வழிவகுக்கும் ஆணையத்தை ஜெயலலிதா அமைத்ததால் நாம் அ.தி.மு.க வுக்கு ஆதரவு தெரிவித்தோம்.
இருப்பினும் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது.(அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆட்சியை வழங்குகிறான்).

ஆனால், அந்த 2006 சட்டசபை தேர்தலில் இஸ்லாமிய சமுதாயத்தின் மொத்த ஓட்டுக்களும் அ.தி.மு.க.வின் பக்கம் சாய்ந்ததால் , தி.மு.க. பல தொகுதிகளில் மிக சொற்ப ஓட்டுக்களின் வித்யாசத்திலேயே வெற்றி பெற்று,பெரும்பான்மையை இழந்து, ஒரு மைனாரிட்டி ஆட்சியைத்தான் தமிழகத்தில் அமைக்க முடிந்தது.

இதில் நன்கு பாடம் பெற்ற தி.மு.க. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது. எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

இட ஒதுக்கீட்டை வழங்கிய பின்னும் அதை முஸ்லிம்கள் முழுமையாக பயன்படுத்தாத விதத்தில் அதில் நிறைந்திருந்த பல்வேறு குளறுபடிகளை பல போராட்டங்களின்மூலம் தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எடுத்துக்காட்டிய பின் அதில் உள்ள குளறுபடிகளை ஒத்துக்கொண்ட தமிழக முதல்வர் அதற்கான முறையான ஆவணங்களை செய்வதாக உறுதியளித்தார். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

2009 பாராளமன்ற (M.P.) தேர்தலின்போது, தமிழகத்தில் இட ஒதுக்கீட்டிற்கானவாசலை திறந்து வைத்து அதை முதன் முதலாக வழங்கிய தி.மு.க. வுக்கு - "ஒரு முஸ்லிம் கொடுத்த வாக்குறுதியை ஒழுங்காக நிறைவேற்றுவான்" என்று பறைசாற்றும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவித்து அதன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.(அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆட்சியை வழங்குகிறான்).

2011 தமிழக சட்டசபை (M.L.A) தேர்தல் வரும் முன்னரே; சென்ற வருடம் 2010ஜூலை 4ல் சென்னையில் "அல்லாஹ்வுடைய மிகப்பெரும் உதவியைக்கொண்டு" மீண்டும் ஒரு மிகப்பெரும் மக்கள் வெள்ளத்தை கூட்டி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் படி மத்திய அரசு முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடுத்தகோரிக்கையை ஆக்ரோஷமாக முன் வைத்தது. டெல்லி சென்று பிரதமரையும், சோனியா காந்தியையும் நேரடியாக சந்தித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அதற்குண்டான கோரிக்கை மனுவையும் சமர்ப்பித்தனர். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

இப்பொழுது 2011 தமிழக சட்டசபை (M.L.A) தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில்முஸ்லிம்களுக்கு இப்பொழுது இருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 5சதவீதமாக உயர்த்தி தரும் அணிக்கே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவிக்கும் என; அதாவது ஆளும் தி.மு.க அரசு இடஒதுக்கீட்டு அதிகரிப்பை இப்போதே சட்டமாக்க வேண்டும். அப்படி சட்டமாக்கினால் தி.மு.க.வை ஆதரிப்பது என்ற ஒரே முடிவு. அவ்வாறு நடைபெறாவிட்டால் அ.தி.மு.க அவர்களின் தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டும். தி.மு.க இந்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொன்னால் அ.தி.மு.க.வை ஆதரிப்பது என்ற செயல்திட்டம் சேலம் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. இதை பல மாதங்களுக்கு முன்னரே அரசியல் தலைவர்கள் காதில் விழும் அளவுக்கு பத்திரிக்கை செய்திகள் மூலமாகவும், ஊர் ஊராக போஸ்டர் அடித்தும் ஒட்டியது. இப்பொழுது நடைமுறையில் இருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இருக்கும் குறைபாடுகளை களைய தனி கண்காணிப்பு ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது.

இதில் இட ஒதுக்கீட்டின் சதவீதத்தை இப்பொழுதே உயர்த்தி தரும் இடத்தில(ஆட்சியில்) இருக்கும் தி.மு.க. அதை செய்யாமல், இரண்டாம் கோரிக்கையான வெறும் கண்காணிப்பு ஆணையத்தை மட்டும் அமைத்தது.


இதனால், தி.மு.க.வினர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீட்டை அதிகரித்து சட்டமாக்காமல் சென்றதால் பொதுக்குழு முடிவுப்படி அ.தி.மு.கவை ஆதரிக்கும் செயல்திட்டத்தோடு சென்னை தி.நகரில் அவசர செயற்குழு கூட்டி முடிவு செய்யப்பட்டது (இந்த நேரத்தில் அதிமுக தலைமை தவ்ஹீத் ஜமாத்தோடு இந்த இடஒதுக்கீடு விசயத்தில் நெருங்கி வந்திருந்தது). ஆனாலும் அரசியல்வாதிகள் எப்படி வேண்டுமானாலும் அல்வா கொடுப்பார்கள் என்ற ரீதியில் அதே நிலைபாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதாவது அ.தி.மு.க இடஒதுக்கீட்டை அறிவித்தால் அவர்களுக்கு சீரிய ஆதரவு என்றும், அறிவிக்காவிட்டால் சும்மா கடமைக்கு தார்மீக ஆதரவு என்றும் செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது. செயற்குழு முடிந்தும் கூட தி.மு.க.வினர் தலைமையைத் தொடர்ந்து தொடர்புகொண்ட போதும் அவர்களை நிராகரித்து அனுப்பியது தலைமை. ஆனாலும் அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்தார்கள். அ.தி.மு.க. இரண்டாம் நிலை அமைச்சர்கள் பல தடவை நம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திற்கு நேரடியாக வருகை தந்து ஜெயலலிதா உங்களை சந்திக்க விரும்புகிறார்கள் என கூறினார்கள். ஆனால்,இதை ஏற்றுக்கொள்ளாத நாம் நீங்கள் தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவோம் என அறிவிக்காதவரை நாம் (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்) யாரையும் சந்திக்க வர மாட்டோம் என திட்ட வட்டமாக தெரிவித்து விட்டோம். ஏனென்றால், இட ஒதுக்கீட்டை பற்றி ஒரு அறிவிப்பும் வெளிவராத நிலையில் நாம் போய் ஜெயலலிதாவை சந்தித்தால் அந்த சந்திப்பையே பயன்படுத்தி பத்திரிக்கைகளுக்கு செய்தி கொடுத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அ.தி.மு.க. வையே ஆதரிக்கிறது என பரப்பி விடுவார்கள் என நாம் அஞ்சினோம்.

ஆனால், அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகள் “உங்கள் கோரிக்கையான சமுதாய இடஒதுக்கீடு அதிகப்படுத்தும் செய்தி ஒரு எழுத்து கூட விடுபடாமல் தேர்தல் அறிக்கையில் தயாராகி விட்டது என சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஆனாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய செயற்குழு முடிவை மூடியே வைத்து மவுனம் காத்தது. இந்நிலையில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை முதலில் வெளிவந்தது.வழக்கம் போல் இலவசங்களை அள்ளி வீசும் தேர்தல் அறிக்கையாக அது இருந்தாலும், நம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் விதமாக என்னென்ன அம்சங்கள் கூறப்பட்டிருக்கிறது என்பதை நோக்கும்போது அதில் முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதை பற்றி பரிசீலிக்கப்படும் என தி.மு.க.அறிவித்திருந்தது.


எனினும், நாம் சென்னை செயற்குழுவில் ஏற்கனவே முடிவுசெய்தபடி ஆட்சியில் இருந்தவர்கள், (தி.மு.க.) இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்திஅறிவிக்கக்கூடிய இடத்தில இருந்தவர்கள்; அதை அதிகரித்து சட்டமாக ஆக்காமல் தேர்தல் அறிக்கையில் மட்டும் குறிப்பிட்டிருப்பதால் நாம் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் அமைதியாக இருந்தோம்.

இதன் பின்னர் வெளிவந்த அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை நம்மை மிகப்பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வரிக்கு வரி தி.மு.க.வின் இலவச தேர்தல் வாக்குறுதிகளை இரண்டு மடங்காக காப்பி அடித்த ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை பற்றிய ஒரே ஒரு வாசகத்தை கூட இடம்பெற செய்யாமல்; “இஸ்லாம்” என்றோ “முஸ்லிம்” என்றோ ஒரேயொரு வார்த்தையை கூட அ.தி.மு.க. வுடைய தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்யாதது நமது இஸ்லாமிய சமுதாயத்துக்கு ஜெயலலிதா இப்பொழுதே துணிந்து செய்த ஒரு மிகப்பெரும் துரோக செயலாகவே நமக்கு தெரிந்தது.

இதை பொறுத்துக்கொள்ளாத நாம், நம்மை இடைவிடாது வந்து சந்தித்த அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகளை தொடர்புகொண்டு கேட்டதற்கு , முதலில் மழுப்பிய அவர்கள் பின்னர் இவ்வாறு "முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிப்பதால் அது எங்கு மற்ற சமுதாய ஓட்டுக்களை பிரித்துவிடுமோ என அஞ்சித்தான் அம்மா அவர்கள் இதை தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்யவில்லை" என கூறினார்கள்.

என் அருமை இஸ்லாமிய சகோதரர்களே, இங்குதான் நாம் விழித்துக்கொள்ள வேண்டும். இன்னும் தேர்தலே நடக்கவில்லை அவர்கள் வெற்றியடைவார்கள் என்பதே உறுதி செய்யப்படவில்லை,இப்படி இருக்கும் பொழுது “புதிதாக அல்ல, ஏற்கனவே” எதிர் (தி.மு.க.) அணியினால் அவர்கள் ஆட்சியில் வழங்கபட்டிருக்கிற இட ஒதுக்கீட்டை உயர்த்தி கொடுப்போம் என்ற ஒரு வார்த்தையை (அதுவும் எதிர் (தி.மு.க.) அணி ஏற்கனவே அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் சேர்த்துவிட்ட்ட ஒரு வார்த்தையை) இவர்களுடையதேர்தல் அறிக்கையில் சேர்க்க இவர்களுக்கு மனம் வரவில்லை என்றால், அதை சேர்த்தால் எங்கு மத்த சமுதாய ஓட்டுக்களை அது பிரித்துவிடுமோ என இப்பொழுதே அவர்கள் அஞ்சுவார்கலேயானால்;இப்படிப்பட்டவர்கள் தேர்தலில் ஜெயித்தபின் இட ஒதுக்கீட்டை உயர்திக்கொடுப்பார்கள் என எப்படி ஒரு முஸ்லிம் நம்புவான்?இவர்களை நம்பி எப்படி ஒட்டு போட ஒரு முஸ்லிம் முன் வருவான்?இப்பொழுதே, ஒரு வாக்குறுதி கொடுப்பதற்கே பின் வாங்கும் இவர்கள் நாளை இட ஒதுக்கீட்டை உயர்திகொடுப்பார்கள் என்பது எப்படி நிச்சயம்?

இதையெல்லாம் யோசித்துபார்த்து ஒரு சரியான முடிவை எடுப்பதற்காகத்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீண்டும் அவசரமான பொதுக்குழுவை கூட்டியது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை எந்த வியசத்தையும் தன்னிச்சையாக எடுக்கக்கூடிய தனிநபர் முடிவுக்கு வேலையே இல்லை என்பதை அனைத்து மக்களும் நன்கறிவார்கள். எந்த தேர்தல், சமுதாய பிரச்சனையாக இருந்தாலும், செயற்குழு பொதுக்குழு ஆகியவற்றைக்கூட்டி அப்போது முன்னிருக்கும் பிரச்சனைகளை மக்கள் மன்றத்தில் முன்வைத்து அதில் இருக்கும் சாதக பாதகங்களை விளக்கமாக எடுத்து சொல்லி,சமுதாயத்தின் நலன் கருதி என்னமுடிவு எடுக்கலாம் என்பதை ஒழுங்கான வாக்கெடுப்பை நடத்தி அதில் அதிகமானவர்களின் ஆதரவு பெற்ற கருத்து என்னவாக முடிவுக்கு வருகிறதோ அதைதான் (அல்லாஹ்மேல் தவக்கல் வைத்து) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பின்பற்றி வருகிறது. (அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்).


இந்த பொதுக்குழுவில் - செய்யவே மாட்டேன் என சொல்பவனும்,வாய்ப்பிருந்தால் செய்வேன் என சொல்பவனும் சமமாக மாட்டான். அதே ரீதியில் தான் தி.மு.க.வினரின் இன்றைய நிலையும், அ.தி.மு.க. வினரின் இன்றைய நிலையையும் மக்கள் மன்றத்திலே வைக்கப்பட்டது. சமுதாயத்திற்கு அதிமுக (இப்பொழுதே, தேர்தலுக்கு முன்னதாகவே) செய்த நம்பிக்கை துரோகத்தை விட, திமுகவின் துரோகம் கொஞ்சம் குறைவு என்ற ரீதியிலும், தவ்ஹீத் ஜமாஅத்திடம் வாக்குறுதி கொடுத்து ஒட்டுமொத்த சமுதாயத்தையே ஏமாற்ற நினைத்த ஜெயலலிதாவுக்கு சரியான பாடம்புகட்ட வேண்டும் என்ற ரீதியிலும் இரண்டு விசயங்கள் வாக்கெடுப்புக்குவைக்கப்பட்டன.

1) இந்த தேர்தலில் நம் சமுதாயத்திற்கு யாருமே நன்மை செய்துவிடவில்லை, இரண்டு கட்சிகளுமே துரோகம் தான் செய்தார்கள். எனவே யாருக்கும் ஆதரவு இல்லை. ஜமாஅத் பெயரையும் கொடியயும் பயன்படுத்தி யாருக்கும் வேலை செய்யக் கூடாது. ஆனால் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் சிந்தித்து ஓட்டளிக்கலாம்.

2) திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லி இருப்பதும் ஜெயலலிதா தேர்தல்அறிக்கையில் சொல்ல மறுத்ததும் சமமானதல்ல என்பதால் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது.


என்ற இரண்டு விசயங்கள் மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கு வைக்கப்பட்டன. மக்களுக்கு வாய்ப்பளித்து முதல் கோரிக்கை சராசரியாக 20 % வாக்குகளைப் பெற்றது. அதே போல இரண்டாவது கோரிக்கை மக்களின் ஏகோபித்த தீர்ப்பாக ஏறத்தாழ 80% வாக்குகளைப் பெற்றது.

ஆக, மக்களின் ஏகோபித்த முடிவைத்தான் தலைமையே ஏற்றுக் கொள்ளும் என்ற ரீதியில் திமுக அணியை 234 தொகுதிகளிலும் ஆதரிப்பது என்ற மக்களின் முடிவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அறிவித்தது. இது எந்த நிலையிலும் தன்னிச்சையான முடிவு அல்ல. அனைத்தையும் அல்லாஹ் அறிந்தவன்.

கருத்துகள் இல்லை: