தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பல்வேறு தேர்தல் கட்டுப்பாடுகள் பற்றி கூறியுள்ளார் அவற்றில் சில........
* கோவில், மசூதி, ஆலயங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. * ஜாதி, மதத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது.
* பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரசார சுற்றுப்பயணங்கள், ஊர்வலங்கள் அனைத்துக்கும் போலீஸ் முன் அனுமதி பெறவேண்டும். * பொது இடங்களில் சுவர் விளம்பரம் செய்யக் கூடாது. தனியார் இடங்களில் சுவர்களின் அனுமதி பெற்ற பிறகே தேர்தல் விளம்பரம் செய்யவேண்டும்.
* விளம்பர செலவுகள் அனைத்தும் வேட்பாளர் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
* அரசியல் பொதுக் கூட்டங்கள், பிரசாரங்கள், சுவர் விளம்பரங்கள், ஊர்வலங்கள், பேனர்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும். இதற்கான செலவுகள் கணக்கிடப்பட்டு வேட்பாளர் செலவில் சேர்க்கப்படும்.
* தேர்தலில் முறைகேட்டை கண்காணிக்க பறக்கும்படை அமைக்கப்படும். இதில் ஒரு துணை தாசில்தார், ஒரு போலீஸ் அதிகாரி, 4 போலீசார், ஒரு வீடியோ கிராபர் இடம் பெறுவார். இவர்கள் தவிர ஒவ்வொரு தொகுதியிலும் 4 அல்லது 5 சோதனை மையம் அமைக்கப்படும். இந்த மையங்கள் அடிக்கடி இடமாற்றப்படும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் வருமான வரித்துறை சார்பில் வருமான வரி உதவி இயக்குனர் நியமிக்கப்படுவார். அவர் மூலம் வேட்பாளருக்கு வரும் பணம் ஆய்வு செய்யப்படும்.
* கல்யாண மண்டபங்கள் கண்காணிக்கப்படும். அதில் என்ன விழா நடக்கிறது? எதற்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளது? என்பது பற்றி கண்காணிக்கப்படும்.
* மொத்தமாக எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரம் செய்யவும் அனுமதி பெற வேண்டும். இது செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
தேர்தல் வரும் வேளையில் தேர்தல் கமிஷனின் அதிகாரிகள் இவ்வாறான பல்வேறு சட்டங்கள் போடுவதும், தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், ஆளுங்கட்சி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் அன்பளிப்புகள் கொடுத்ததாக எதிர்கட்சியும், எதிர்கட்சி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் அன்பளிப்புகள் கொடுத்ததாக ஆளும்கட்சியும் பரஸ்பரம் புகார் மனுக்களோடு படையெடுப்பார்கள். இரு தரப்பு வழக்கும் பதியப்படும்.
அதே போல ஒவ்வொரு கட்சியினரும் எதிர்கட்சிகள் தங்கள் மீது வன்முறையில் ஈடுபட்டதாக மாற்றி மாற்றி குற்றம் சாட்டிக் கொள்வர். விதிமுறைகளை மீறியதாக பல வழக்குகளும் பதியப்படும். அதே போல வேட்பாளர் அதிகமாக செலவு செய்ததாக புகார்கள் வழக்காக மாறும். ஆனால் இவையாவும் தேர்தல் முடிந்த கையோடு கிணத்தில் போட்ட கல்லாக மாறிவிடும். பின்னர் அந்த வழக்குகளின் நிலை என்ன என்பதை பற்றி புகார் கொடுத்தவர்களோ, பதிவு செய்த அதிகாரிகளோ, கவலை கொள்வதுமில்லை. மக்களும் தேர்தலோடு மறந்து விடுவார்கள்.
நாம் அறிந்தவரை தேர்தல் காலகட்டத்தில் பதியப்பட்ட வழக்குக்காக யாரும் கைது செய்யப்பட்டதாகவோ, தண்டிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. எனவே சட்டங்கள் போடுவது பெரிதல்ல. அந்த சட்டங்கள் மீறப்படும் நிலையில் அவற்றை மீறியவர்கள் தண்டிக்கப்பட்டால் தான் தேர்தல் நேர முறைகேடுகள்- வன்முறைகள் குறையும் என்றும், தேர்தல் நேரத்தில் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி நடைமுறையில் இருப்பதுதான் சிறந்தது என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக