OnlinePJ

Thanks for Visiting my Page

சனி, 3 ஆகஸ்ட், 2013

புனித ரமளானில் முஸ்லீம்கள்


முன்னுரை:-

புனித ரமலானை பற்றி எழுத சொல்லி இருந்தால் ஒரு கஷ்டமும் இருந்திருக்காது. புனித ரமளானில் முஸ்லீம்கள் என்கின்ற தலைப்பில் எழுதுவது சற்று கடினம்தான் இருந்தாலும் நடைமுறை நிலையை விளக்க இது ஒரு நல்ல தருணம். புனித ரமளானில் முஸ்லீம்கள் என்று பலபேர் இஸ்லாமியர்கள் அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும் பல நல்ல அமல்களை செய்யணும்  என்று எழுதுவார்கள். ஆனால் அது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம். என்னுடைய இந்த பதிவு புனித ரமளானில் பெரும்பாலான முஸ்லீம்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதின் அடையாளமாக எனது இந்த கட்டுரை.

பொதுவாக முஸ்லீம்களை பொறுத்தவரை இரண்டு வகையாக பிரிக்கலாம், ஒன்று எப்போதும் அல்லாஹ்விற்க்கு பயந்து 5 வேலை தொழுகைகளை நிறைவேற்றியும், நன்மையான காரியங்களை  செய்துக்கொண்டும், தீமையை தடுத்துக்கொண்டும் குர்ஆன் ஓதிக்கொண்டும்   இருப்பவர்கள் ஒரு வகை, இன்னொன்று வருடத்தில் ஒரு மாதம் அதாவது ரமளானில் மட்டுமே இஸ்லாத்தின் கடமையான நோன்பையும், தொழுகையும், ஜக்காத்தையும் நிறைவேற்றுபவர்கள். மேலும் அந்த ஒரு மாதம் முழு குர்ஆணையும் ஓதி முடிப்பவர்கள். இவர்கள் நன்மையை கொள்ளையடித்துக்கொள்ளுங்கள் என்பதை தவறாக புரிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

நோன்பு, ரமளானில் முஸ்லிம்களின் நிலை:-  

நோன்பு எதர்க்காக நோற்க்கவேண்டும், “பசியின் அருமையை பணக்காரர்கள் அறியவேண்டும் என்பதாலோ, உடல் ஆரோக்கியத்திர்க்காகவோ, மற்ற பல காரணங்களுக்காகவோ அல்ல அப்படி எந்த ஒரு குர்ஆன் வசனமும், ஹதீஸும் இல்லை. அப்படி அவர்களுக்குதான் என்றால் நிச்சயமாக செல்வந்தர்களுக்கும், உடல் ஆரோக்கியம் வேண்டுபவர்களுக்கு மட்டுமே இது கடமையாக்கப்பட்டிருக்கும். நோன்பு எதற்க்காக என்று இறைவன் தன்  திருமறையில் மிக தெளிவாக கூறியுள்ளான்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆன் 2:183

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். அல்குர்ஆன் 2:185

மேலே உள்ள வசனத்தின் படி, இறைவனை அஞ்சுவதற்காகதான் இந்த நோன்பே தவிர மற்ற வேற எந்த காரணமுமில்லை என்பதை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த நோன்பு முஸ்லிம்களின் ஈமானை பரிசோதிர்ப்பதற்க்கே என்பதையும் இதில் இருந்து நாம் விளங்கிக்கொள்ளலாம் அதாவது அந்த ஒரு மாதத்தில் அல்லாஹ்விற்க்கு பயந்து ஹலாலான பல காரியங்களை தவிர்க்கும் நாம் நோன்பு அல்லாத நாட்களிலும் அவ்வாறே நடக்க வேண்டும் என்ற சுய பரிசோதனைதான் இந்த நோன்பு.

ஆனால் இன்று முஸ்லீம்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறோம், நோன்பு திறந்தவுடன் தொழுகைக்கு கூட போவதில்லை சிகரெட் பிடிக்க போகிறார்கள். நோன்பு திறக்க உட்கார்ந்தால் போதும் நமக்கு நப்ஸ் அப்படியே அடித்துக்கொள்கிறது எங்கே நம்ம கொற்றாவில் இறைச்சி இருக்குமா இருக்காதா, நமக்கு ஜூஸ் கிடைக்குமா கிடைக்காதா? நோன்பு திறக்கும் போது கேட்க்கக்கூடிய துவாவை விட்டுவிட்டு பள்ளியில் கிடைக்கும் வாடாவிற்க்கு அலையும் நிலை ரமளானில் முஸ்லிம்களின் நிலை. இதுதான் நாம் படிக்கும் படிப்பினையா???

இந்த நோன்பானது நரகத்தில் இருந்து காக்கும் கேடயம் என்றும், இதில் ஒவ்வொரு நன்மைக்கும் 10 முதல் 700 நன்மைகள் வரை நானே வழங்குவேன் என்றும் இறைவன் வாக்களிக்கின்றான். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1945.

இந்த ஒரு மாதம் மட்டும் அந்த கேடயம் போதுமென்று நினைத்துவிட்டு நோன்பு முடிந்து பெருநாள் தொழுதவுடன் எந்த சினிமா கொட்டகைக்கு போகலாம், எந்த டாஸ்மார்க்குக்கு போகலாம் என்று பல முஸ்லிம் சகோதரர்கள் இன்று நடந்துக்கொள்கிறார்கள். இதை கண்டிப்பாக நாம் யாரும் மறுக்க முடியாது. ஏன் இன்னும் சொல்லப்போனால் பெருநாள் பிறை பார்த்தவுடன் அடுத்த நிமிசமே போயி குடிப்பவர்களும், கும்மாளம் போடுபவர்கள் மறுநாள் காலையில் அந்த தொழுகை விடுவதையும் நாம் கண்கூடாக பார்க்கிறோம்.  

பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரணமானதல்ல!

யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 38, 1901, 2014.

அதர்க்காக முன் பாவங்கள்தான் மன்னிக்கப்பட்டுவிட்டதே என்று மறுபடியும் பழைய குருடி  கதவ திறடி என்ற பழமொழிக்க்கேர்ப்ப இவர்கள் பாவம் செய்ய தொடங்கிவிடுகிறார்கள். எப்படி தெரியுமா தொழுகையை தொழாமல் வீண் பேச்சுகளிலும், வெட்டி பந்தாக்களிலும் இவர்கள் காலத்தை கடத்துவார்கள். பள்ளிக்கு அருகையே இருந்தாலும், பாங்கு சத்தம் இவர்கள் காதில் விழுந்தாலும், ஏன் தொழ வைப்பதுக்கூட கேட்டாலும் இவர்கள் காதிருந்தும் செவிடர்களாக இருப்பார்கள்.

மேலும் இந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான காரணம். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.

யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1903, 6057

ஆனால் இன்று பெரும்பாலான முஸ்லீம்கள் என்ன செய்கிறார்கள், பசியோடு இருக்கிறார்கள் ஆனால் பயிற்ச்சி எடுப்பதில்லை, சீரியல் பார்க்கிறார்கள், சன் டிவி பார்க்கிறார்கள், பாட்டுக் கேட்கிறார்கள், புறம் பேசுகிறார்கள் இது போன்று இன்னும் பல நோன்பில் செய்யாக்கூடாத செயல்களை செய்கிறார்கள் கேட்டால் இதில் என்ன தவறு என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக
டிவி பார்ப்பதும், பாட்டுக்கேட்பதும் எல்லாம் இந்த பொய்யானவற்றையே சேரும், இன்னும் சிலர் இருக்கிறார்கள் யூடுபில் காமெடி பார்க்கிறேன் என்று சொல்லுவார்கள் அதுதான் மிகவும் கொடுமையான பதில்.

நோன்பின் ஆரம்பத்தில் நிறைந்து வழியும் பள்ளிவாயல்கள், பெருநாள் தொழுகை முடிந்தவுடன், ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளப்பட்டது போன்று ஆகிவிடும் ஆம் அந்த வழியில் போகும் வழிபோக்கர்கள் ஆகிவிடுவார்கள் கடந்த மாத (ரமளான்) முஸ்லீம்கள்.

முடிவுரை:-

எனவே பசித்திருப்பது நோன்பின் நோற்கமல்ல என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி நம்மிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும் தீய நடவடிக்கையிலிருந்தும் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் நோன்பு நோற்றுள்ள நிலையில் நம்முடன் வீண் வம்புக்கு யாரேனும் வந்தால் கூட சரிக்குச் சரியாக அவர்களுடன் வம்புக்குப் போகக் கூடாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வலியுறுத்துகிறார்கள்.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1894, 1904

நோன்பு என்பது ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இது தான் நோன்பின் நோக்கம் என்று உணர்ந்தால் தான் அந்த நோக்கத்தை நாம் அடைய இயலும். முப்பது நாட்கள் நோன்பு நோற்றுப் பயிற்சி எடுத்தவர்கள் நோன்பை நிறைவு செய்தவுடன், சினிமாக் கொட்டகைகளில் வரிசையில் நிற்கிறார்கள் என்றால் இவர்கள் பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமே தவிர நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது. ரமளானுக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலை தான் ரமளானுக்குப் பிறகும் நம்மிடம் இருக்கிறது என்றால் நாம் எந்தப் பயிற்சியும் பெறவில்லை என்பது தான் இதன் பொருள். எனவே இத்தகைய நிலை ஏற்படாதவாறு உங்களையும் என்னையும் இறைவன் பாதுகாப்பானாக.

ஜஜக்கல்லா
அபு சனா 

கருத்துகள் இல்லை: