OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 19 ஜூன், 2011

வங்கி கணக்குகள் குறித்து சுவிஸ் நாட்டு சட்டத்தில் மாற்றம்


ஜெனீவா:வங்கி கணக்குகள் மற்றும் இரட்டை வரி ஒப்பந்தங்கள் குறித்த சுவிட்சர்லாந்து சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்கள் விரைவில் தெரிய வரும். யார், யார் எவ்வளவு பணத்தைப் போட்டு வைத்துள்ளனர் என்பதும் அம்பலமாகும்.



இந்தியாவைச் சேர்ந்த பெரும்புள்ளிகள் பலர், உள்நாட்டில் வரி ஏய்ப்பு செய்து சேர்த்த கறுப்புப் பணத்தை, சுவிட்சர்லாந்து உட்பட பல வெளிநாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்தப் பணத்தின் அளவு, 70 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என, நம்பப்படுகிறது. உலகிலேயே சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ளவர்களில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர்.அன்னிய நாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்துள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் இருக்கிறது. அதே நேரத்தில், இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் தரப்பிலும், அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்கள் தரப்பிலும் மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. கறுப்புப் பணத்தை மீட்கக் கோரி, இவர்கள் சமீபத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.

இதற்கிடையில், சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ளவர்கள் பற்றிய விவரங்களை பெற, மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டது. இந்தியாவைப் போல, வேறு பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ளதால், அந்த நாடுகளும், தங்கள் நாட்டவர்களின் பெயர், விவரங்களை தர வேண்டும் என, சுவிஸ் அரசை வலியுறுத்தி வந்தன.இப்படி உலக நாடுகள் தரப்பில் நெருக்கடி அதிகரித்ததால், வங்கி கணக்குகள் மற்றும் இரட்டை வரி தொடர்பான ஒப்பந்தங்களில், சுவிட்சர்லாந்து அரசு மாற்றம் செய்துள்ளது. அந்த மாற்றங்களுக்கு சுவிட்சர்லாந்து பார்லிமென்டின் மேல்சபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.
இதனால், சுவிட்சர்லாந்து நாட்டுடன் இரட்டை வரி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நாடுகள் இனி பலன் அடையலாம்.

சுவிஸ் நாட்டில் உள்ள தனியார் வங்கிகளில் தங்கள் நாட்டைச் சேர்ந்த யார், யார் எல்லாம் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ளனர், எவ்வளவு டிபாசிட் செய்துள்ளனர் என்ற தகவல்களைப் பெறலாம். கறுப்புப் பணம் பதுக்கியவர்களின் சர்வதேச வங்கி கணக்கு எண்கள் மற்றும் சமூக பாதுகாப்பு எண்களைக் கொடுத்து, இவற்றைப் பெறலாம்.இந்த புதிய சட்டத் திருத்தத்தின் மூலம், இந்தியா, ஜெர்மனி, கனடா, ஜப்பான், நெதர்லாந்து, கிரீஸ், துருக்கி, உருகுவே, கஜகஸ்தான் மற்றும் போலந்து ஆகிய நாடுகள் பயன் பெறும். இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், இந்தியாவுடனான இரட்டை வரி ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய, சுவிட்சர்லாந்து பார்லிமென்ட் குழு ஒப்புதல் அளித்தது. அதனால், நடப்பாண்டில் இருந்தே சுவிஸ் வங்கிகளில் பணத்தைக் குவித்துள்ளவர்களின் தகவல்களை இந்தியா பெறலாம்.

சுவிட்சர்லாந்து அரசின் இந்த நடவடிக்கையால், அந்நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மீட்டுக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் சாதகமாக உள்ளதாகவே தோன்றுகிறது.

1 கருத்து:

saro சொன்னது…

உங்களது படைப்பு நன்றாக உள்ளது . உங்களது படைப்புகளை கீழே பதிவு செய்யவும்

Share Here