OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 6 ஜூன், 2011

மனபாடத்தில் மூழ்கும் மடத்தனமான பாடத்திட்டம்



சமிபத்தில் நடந்த ஒரு சம்பவம் இது.

தேர்வு முடிவுகள் வந்த தருணத்தில்,எனக்கு தெரிந்த ஒரு பத்தாம் வகுப்பு முடித்த
மாணவனை அவனது பெற்றோர்கள் கடுமையாக கண்டித்ததில், மனமுடைந்த அவன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.

நீங்கள் நினைப்பது போல அவன் 'பெயிலாக'வில்லை. அவன் வாங்கிய மதிப்பெண்கள் 375.அவன் நானூற்று ஐம்பது மார்க்குகள் வாங்கி, அவன் படித்த பள்ளியில் முதலாவதாக வரவில்லை என்று அவன் பெற்றோர்கள் அவனை கடுமையாக கடிந்து கொண்டதே, அவன் மனமுடைந்து போனதற்கு காரணம்.

ஒவ்வொருமுறை தேர்வு முடிவுகள் வரும்போதெல்லாம், எதோ ஒரு ஊரில் எதோ ஒரு மாணவனோ மாணவியோ "பெயிலாகி" விட்டதால் தற்கொலை செய்துவருவது இன்று சாதாரண செய்தியாகிவிட்டது.

மதிப்பெண்களே இன்றைய மாணவனுக்கு அளவுகோல். அடுத்த மாணவனை சுட்டிக்காட்டியே அவனது தன்னம்பிக்கையை குறைப்பதுதான் இன்றைய பெற்றோர்களின் அளவுகோல்.

மெக்காலே உருவாக்கிய மனப்பாடம் செய்து,தேர்வில் வாந்தி எடுக்கும் கல்வி முறையை இன்னும் எத்தனை நாளைக்குதான் நாம் கட்டிக்கொண்டு அழப்போகிறோம்.

நமக்கு இந்த கல்விமுறையை அறிமுகப்படுத்திய இங்கிலாந்திலேயே,இத்தகையே கல்வி முறை இல்லை என்பதை நாம் அறிவோமா?

ஃபின்லாந்தில் 7 வயது வரை வகுப்புகளில் வெறும் விளையாட்டு மட்டும்தான்.

" 7 வயது வரை ஏ, பி, சி, டி சொல்லிக்கொண்டிருந்தால் குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சி தெரிகிறது. ஆனால் 7 வயது வரை வெறுமனே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை நீண்ட கால ஓட்டத்தில் ஏ, பி, சி, டி படித்துக்கொண்டிருந்த குழந்தையைவிட படு வேகமாக அறிவாற்றலும் படைப்பாற்றலும் பெறுகிறது. இது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்தியக் கல்வி முறையில்கூட ஏட்டுக் கல்வியில் தங்க மெடல் வாங்கிவிட்டு நிஜ வாழ்வில் பூஜ்ஜியமாக இருப்பவர்களையும் பள்ளியில் ஃபெயிலாகிவிட்டு நிஜ வாழ்வில் பெரு வெற்றி பெற்றவர்களும் அதிகம்" என்கிறார் எழுத்தாளர் மாயா.

இன்று தொழில் துறையில் சிறந்து விளங்குபவர்கள், சச்சின் போன்று விளையாட்டு துறையில், ஏ.ஆர்.ரகுமான்,இளையராஜா போன்று கலைத்துறையில் சாதித்தவர்கள் என்ன படித்தார்கள்? சச்சின் பிளஸ் டூ தெரிவில் பெயிலானவர் ஆவார்.

இன்றைய மாணவனுக்கு, ஒரு துறையில் சாதிக்க, நல்ல வேலையில் சேர மதிப்பெண்கள் ஒரு அளவுகோலே இல்லை. இன்றைய நிறுவனங்கள் நோக்குவதேல்லாம்....மாணவனின் வேலை சார்ந்த திறமை மற்றும் நிர்வாகத்திறனையும்.

"கிரேடு முறைக்கு மாறும் சி.பி.எஸ்.இ. ஒரு நல்ல மாற்றத்தை முன்மொழிகிறது. இதில் ஃபெயில் என்ற வார்த்தையே கிடையாது. மிகக் குறைவான தரப் பிரிவைச் சேர்ந்தவர்களின் கல்விச் செயல்பாடு திருப்தி தரவில்லை (E2-unsatisfactory) என்றே வகைப்படுத்தப்படுகிறது. கல்வியின் நோக்கம் அறிவையும் விழிப்புணர்வையும் உலக ஞானத்தையும் ஏற்படுத்துவதே அன்றி முத்திரை குத்துவதோ, மட்டம் தட்டுவதோ அல்ல. சி.பி.எஸ்.இ. அறிமுகப்படுத்தியிருக்கும் கிரேடு முறை அனைத்துத் தரப்பிலும் பின்பற்றப்பட வேண்டும். மதிப்பெண்ணின் முக்கியத்துவத்தைக் குறைப்பதால் மாணவர்கள் மனப்பாடத்திற்கு செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு விளையாட்டிலும் கலைகளிலும் ஈடுபாடு காட்ட அதிகம் ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது.

குறைந்தது 10வது வரை ஒருவரையும் ஃபெயில் செய்யக்கூடாது என்ற மாற்றத்தையும் சி.பி.எஸ்.இ. பரிசீலிக்கிறது. ஆனால் 10, 12ஆம் வகுப்புகளிலும்கூட ஃபெயில் செய்வதில் அர்த்தமில்லை என்பதை நாம் உணர வேண்டும். தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே அது அதிகாரபூர்வமற்ற முறையில் நடைமுறையில்தான் உள்ளது.

ஏதாவது ஒரு குறிப்பிட்ட பாடத்தில் பட்டம் படித்துவிட்டு கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களையும் எடுக்கும் அவலத்திற்கு ஆளாகும் கிராமப்புற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதை நீண்ட காலமாகவே செய்து வருகிறார்கள். ஆசிரியர் எண்ணிக்கையையும் கல்வியின் தரத்தையும் உயர்த்தினால் அன்றி 50 சதவீத கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கூட நியாயமாக பாஸ் செய்ய மாட்டார்கள் என்று கூறுகிறார்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.

அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளையும் தரத்தையும் மேம்படுத்துவது மிகவும் அவசியம்தான். அதோடு, இந்தியாவுக்கே பல்வேறு விஷயங்களில் முன்னோடியாக இருக்கும் தமிழகம் பாஸ், ஃபெயில் என்பதை ஒழிப்பதிலும் முதல் மாநிலமாக இருக்க வேண்டும். உயர் கல்வியில் சேர்வதற்கென்று தனியாக குறைந்தபட்சத் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதால் இது எந்த வகையிலும் உயர் கல்வியின் தரத்தைப் பாதிக்காது. மண்ணெண்ணெய்க்கும் தூக்குக் கயிருக்கும் ரயிலுக்கும் அடுத்த ஆண்டும் இளம் பிஞ்சுகளை இழக்காமலிருக்க, தேவை இந்த அத்தியாவசியமான மாற்றம்"

-இவ்வாறு வலியுறுத்துகிறார் எழுத்தாளர் மாயா.

இன்று பேசப்பட்டுவரும் சமச்சீர் கல்வி முறையும். மாணவனை வெறும் "மனப்பாட எந்திரனாக" மாற்றும் ஒரு முறைதான். அரசுப்பள்ளிகளில், கிராமப்புறங்களில் சமச்சீர் கல்வியை முறையாக கற்று தரும் ஆசிரியர்களுக்கு எங்கே போவது?

சுய சிந்தனைக்கு வாய்ப்பளிக்கும், விளையாட்டுடன் கூடிய ஒரு இயல்பான கல்வி முறையே இன்று நம் குழந்தைகளுக்கு அவசியம்.

சிறந்த மனப்பாட திறன் உள்ள மாணவனே படிப்பில் சிறந்தவன் என்னும் நிலையை மாற்றும்,பாஸ் - பெயில் இல்லாத ஒரு கல்வி முறை வேண்டும் 
என்னும் ஒரு புதிய சிந்தனை நமக்குள் பரவட்டும்.

-இன்பா

கருத்துகள் இல்லை: