OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 12 ஜூன், 2011

கருப்பு எம்ஜீஆர், காவி புத்தி!!!


"இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது'' என்கிற இச்சொற்றோடர் அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட பழைய திரைப்பட வசனம் ஆகும். ஆனால், இப்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் வசனம் எழுத வேண்டுமானால் பின்வருமாறுதான் எழுதவேண்டும். “தமிழ்நாடு எத்தனையோ விசித்திரமான அரசியல்வாதிகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால் விஜயகாந்த் போல் ஒரு விசித்திரமான அரசியல்வாதியை கண்டதில்லை''. இதுவரை நம் நாட்டில் மற்ற அரசியல்வாதிகள் செய்யாத எந்தத் தவறை அவர் புதிதாகச் செய்துவிட்டார்? அவருக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாமே என்று நமது தமிழக வாக்காளர்கள் சிலர் கருதுகின்றனர். பகுத்தறிந்து கேட்க வேண்டி எத்தனையோ கேள்விகளைக் கேட்கவேண்டிய தருணங்களில் நமது மக்கள் கேட்டிருந்தால் நமக்கு விஜயகாந்தைப் பற்றியெல்லாம் எழுதுகின்ற அவலநிலை வந்திருக்காது.






சாதி ஒழிப்பு, தமிழ்த்தேசியம், பெண்ணியம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் எனப் பரந்துபட்டு விவாதித்து வந்த நாம் விஜயகாந்த்துக்காக இருபக்கங்களை ஒதுக்கும் கேடான அரசியல் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நமது முற்போக்குச் சிந்தனை கொண்ட இதழ்களில் எதிர்மறையாக விமர்சிக்கக்கூட தகுதியில்லாத நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்தான் விஜயகாந்த். அந்த திரைப்படங்களின் மூலம் தனக்குக் கிடைத்த விளம்பரத்தைத் தமிழ்நாட்டு மக்களிடம் அரசியலாக்க முயற்சிக்கிறார் இந்தப் புரட்சிக் கலைஞர்(!)

யார் இந்த விஜயகாந்த்? முப்பது வருடங்களுக்கு முன் மதுரை வீதிகளில் ரஜினிகாந்தைப் போல் தானும் ஒரு பெரிய நடிகனாக வேண்டும் என்று இலட்சிய வெறியோடு கனவு கண்டவர்தான் விஜயராஜுலு என்று அழைக்கப்பட்ட இந்த விஜயகாந்த், எப்பேர்ப்பட்ட உயர்ந்த லட்சியம்(!) பார்த்தீர்களா தோழர்களே. (ரஜினிகாந்த் எப்பேர்பட்ட பகுத்தறிவு சிந்தனையாளர்(?) என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்). ரஜினிகாந்த் மீது தான் கொண்ட மோகத்தின் காரணமாகத்தான் விஜயராஜுலு என்கிற தன்னுடைய பெயரை விஜயகாந்த் என்று மாற்றி வைத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர். மற்றும் கலைஞரைப் போல் பெயர் மாற வேண்டும் என்பதற்காக “புரட்சித் தலைவர்'' பட்டத்திலிருந்து புரட்சியையும், கலைஞர் என்ற பட்டத்தையும் சேர்த்து “புரட்சிக் கலைஞர்'' என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டார். தன்னுடைய பெயரிலிருந்து, அடைமொழி வரை சுயமாகச் சிந்திக்க எதுவும் இல்லாத ஒரு தனித்தன்மை மிக்க நபர்தான் விஜயகாந்த்.

மதுரையில் அவரது நெருங்கிய நண்பர்களாக இருந்த லியாகத் அலிகான், இப்ராகிம் ராவுத்தர் ஆகிய இருவரும் இவரது சினிமா வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்தவர்கள். லியாகத் அலிகானுடைய அரசியல் அனல் பறக்கும் வசனங்களைப் பேசி மக்களிடம் கைத்தட்டு வாங்கினார். பின்னர் அந்த இரு இசுலாமிய நண்பர்களுடன் மோதல் ஏற்பட்டு விஜயகாந்த் தனித்து விடப்பட்டார்.

அதற்குப் பிறகு அவர் நடித்த (வல்லரசு, நரசிம்மா, வாஞ்சிநாதன்) பல படங்களில் இசுலாமியர் எதிர்ப்பு அரசியலை முன் வைத்தார். இந்தியாவில் பல மசூதிகள் இருக்கு. ஆனால், பாகிஸ்தானில் ஒரு இந்துக் கோயில் இருக்காடா? என்று “நரசிம்மா'' படத்தில் வெளிப்படையாகவே “இந்துத்துவ'' ஆதரவு வசனங்களைப் பேசியிருப்பார். தொழுகை செய்யும் இசுலாமியர்களை வில்லன்களாக அறிமுகப்படுத்தும் அருவடைய பல படங்கள் “தேசப்பற்று'' மிக்க படங்களாக அடையாளப்படுத்தப்பட்டன.

80களில் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார் விஜயகாந்த், பெண்கள் மீதான பாலியல் வன்புணர்ச்சிக் காட்சிகளை அதிக நேரம் காண்பித்தவர்கள் என்கிற பட்டம் கொடுப்பதாக இருந்தால் விஜயகாந்த்க்கும் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் கண்டிப்பாக கொடுக்கலாம். சிவப்பு மல்லி, சட்டம் ஒரு இருட்டறை தொடங்கி பல படங்களை நாம் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். கதாநாயகனின் தங்கை மற்றும் மனைவியைப் பாலியல் வன்புணர்ச்சி கொள்ளும் காட்சிகளின் மூலம் ஆண்களின் வக்கிர உணர்ச்சிகளைக் காசாக்கிப் பார்த்தார்கள் இருவரும். தொடர்ச்சியாக இது போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அடித்தட்டு மக்களின் நாயகனாக, வர்க்கப் போராளியாக இவர் அடையாளம் காட்டப்பட்டார்.

சிவப்புச் சிந்தனையாளராகவும், தி.மு.க. அனுதாபியாகவும், சில காலம் காலத்தை ஓட்டினார் விஜயகாந்த். ரஜினிகாந்த் இனிமேல் அரசியலுக்கு வரமாட்டார் என்று திட்டவட்டமாக தெரிந்துகொண்ட பிறகு, அந்த இடத்தை நிரப்புவதற்கு, அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஊழல் கட்சிகள் என்று இவர் விமர்சித்த இருகட்சிகளில் உரிய அங்கீகாரம் கிடைக்காத பல பேர் இவர் கட்சியில் இணைந்தனர்.

இந்த லட்சியத் தொண்டர்களை வைத்துக்கொண்டும், தனது கறுப்புப் பணத்தை வைத்துக் கொண்டும் “ஊழலை ஒழிப்போம்" என்று நகைச்சுவையாகப் பேசிவருகிறார் விஜயகாந்த். திராவிட இயக்க அரசியல், தமிழ்தேசிய அரசியல், இந்துத்துவ அரசியல் என்று தனக்கென்று எந்தக் கருத்தியலும் இல்லாதவர், இன்னும் சொல்லப்போனால் இது குறித்த எந்தப் புரிதலும் இல்லாதர் படங்களின் மூலம் தனக்குக் கிடைத்த அறிமுகமே தனது அரசியல் வாழ்விற்கான மாபெரும் தகுதியாக நினைத்துக் கொள்பவர்,

வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பது பௌதீக விதி. விஜயகாந்திடம் வெற்றிடமாக இருக்கும் அரசியல் அறிவை “இந்துத்துவ சக்திகள்'' (சோ, சுப்பிரமணியசுவாமி, சங்கரமடம்) நிரப்பிக் கொள்ளும் கட்சி ஆரம்பிக்கும் போதே கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட சங்கரமடாதிபதி வாழ்த்து தெரிவித்தார் என்றால் அதன் உள் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் “தேசியம்'', "முற்போக்கு'', “திராவிடர்'', “கழகம்'' இந்த நான்கு வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்குக் கூட அர்த்தம் சொல்லத் தெரியாத விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும் தலைவரும் ஆவார். இந்துத்துவ அமைப்புகள், ரஜினி ரசிகர் மன்றம், அஜித் ரசிகர் மன்றம் மற்றும் பிற்போக்கு அமைப்புகளையும் தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கும் நமது தாழ்த்தப்பட்ட தோழர்கள் இந்த அரசியல் காமெடியர் விஜயகாந்த்தையும் தாங்கி கொண்டிருக்கின்றனர்.

வடமாவட்டங்களில் வன்னியர் வகுப்பைச் சார்ந்தவர்களும்,  தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் விஜயகாந்த்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் “அருந்ததியர்கள்'' என அழைக்கப்படுபவர்களும் விஜயகாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாக உள்ளனர். சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு என்ற எந்தச் சமூகநீதி அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத இந்த அரைவேக்காட்டுத் தலைவன் பின்னால் தாழ்த்தப்பட்ட மக்கள் அணி வகுத்து நிற்பது முற்போக்குச் சிந்தனையாளர்களை வேதனையடையச் செய்கிறது. விஜயகாந்த் பொதுமேடையில் தனது வேட்பாளரை அடிப்பதைக் கூட, அக்கட்சி தொண்டர்கள் நியாயப்படுத்தவே செய்கின்றனர். ஏனெனில் ஒரு முதலாளிக்கு தனது தொழிலாளியை அடிக்கும் உரிமை இருக்கிறது என்ற நிலவுடைமைச் சமூக மனப்பான்மையே விஜயகாந்த் தொண்டர்களிடம் காணப்படுகிறது.

விஜயகாந்த்தின் வெற்றி என்பது நிலவுடைமைச் சமூக மனநிலைக்குக் கிடைக்கும் வெற்றியாகும். விஜயகாந்த்தின் அரசியல் இருத்தல் என்பது, சமூகம் வளர்ச்சி நிலையில் பின்னோக்கிப் பயணிக்கிறது என்பதைப் பட்டவர்த்தமாகக் காட்டுகிறது. பெரியாரியம், அம்பேத்கரியம், பெண்ணியம், பின்நவீனத்துவம், மற்றும் மார்க்சியம் எனப் பல்வேறு பரிமாணங்களில் பயணித்துக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில், விஜயகாந்த் போன்ற கோமாளி ஆளுமையின் பின்னால் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் இருப்பது வருத்தப்பட வைக்கிறது. நம்முடைய அரசியல் எதிரி என்று அடையாளப்படுத்தும் அளவிற்குக் கூட தகுதியில்லாத விஜயகாந்த் பற்றி இக்கட்டுரைக்கு என்ன பெயர் சூட்டலாம்? என்பதில் எனக்கு குழப்பம் இருப்பதால், இக்கட்டுரைக்கு பெயர் வைக்கும் வேலையை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

கருத்துகள் இல்லை: