OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 8 ஜூன், 2011

மோனோ ரயில் மூதேவிகளின் கையில்





ஜெ கலைஞர் அறிவித்தத் திட்டங்களை மாற்றிக்கொண்டு இருப்பது அல்லது நிறுத்திக்கொண்டு இருப்பது தெரிந்த விஷயம் தான் என்றாலும் ஜீரணிக்க முடியாத விசயமாக உள்ளது மோனோ ரயில் திட்டம். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் நிறுத்தப்பட்டு பொதுக்காப்பீட்டு திட்டம் கொண்டு வந்துள்ளார் சரி! சட்டசபை வளாகத்தை மறுபடியும் கோட்டைக்கே மாற்றி உள்ளார் சரி! ஒரு ருபாய் அரிசித் திட்டத்தை இலவச அரிசி ஆக்கி உள்ளார் சரி! மற்றும் இதைப்போல பல திட்டங்களை மாற்றி உள்ளார் எல்லாம் சரி! ஆனால் மோனோ ரயில் திட்டத்தை கொண்டு வருவது மிக மிக முட்டாள்த்தனம்.

இதை நான் ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்பதை விளக்கமாகவே கூறுகிறேன்.

காப்பீட்டுத் திட்டம், இலவச அரிசித்திட்டம், கோட்டை மாற்றம் இவற்றில் எல்லாம் பணம் மட்டுமே இழப்பு ஆகும். நஷ்டம் ஏற்ப்பட்டால் அரசால் எப்படியும் சமாளிக்க முடியும் மற்றும் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய முடியும். இதனால் பெரியளவில் பாதிப்பு என்றால் அது நிச்சயம் “பணம்” மட்டுமே ஆகும். தமிழகம் பார்க்காத ஊழல், நஷ்டமில்லை ஒவ்வொரு முறையும் ஆட்சி மாறும் போதும் ஜெ கலைஞர் இருவரும் மாற்றி மாற்றி மற்றவர் திட்டங்களை நிறுத்துவதும் புதிய திட்டங்களை அறிவிப்பதும் தமிழக மக்களின் சாபக்கேடாகி விட்டது. தற்போது இதை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக ஜெ வின் மோனோ ரயில் அறிவிப்புத் திட்டம் உள்ளது.

மோனோ ரயில் என்றால் என்ன?

மோனோ ரயில் என்பது சிறு ரயிலாகும் அதாவது இரு விமான [Terminal] நிலையத்தை இணைக்கவும், சுற்றுலா வருபவர்கள் சுற்றிப்பார்க்கவும், பெரிய தீம் பார்க்கை வலம் வரவும் பயன்படுத்தப்படும் ஒரு போக்குவரத்துச் சேவையாகும். இவை அல்லாமல் சிறிய அளவில் நான்கு அல்லது ஐந்து பெட்டிகளைக்கொண்டு பயணிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல மற்ற மெட்ரோ ரயில்களைப் போல பயன்படுத்தப்படும் சிறு போக்குவரத்துச் சேவையாகும்.

இந்த சிறு விளக்கமே போதும் இந்த மோனோ ரயில் எந்த அளவிற்கு சென்னை கூட்டத்திற்கு பயன்படும் என்று. சென்னையின் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் நெருக்கடியை அனுபவித்தவன் என்கிற முறையில் சிறு சந்தேகமும் இல்லாமல் இது அடி முட்டாள்த்தனமான சேவை [சென்னைக்கு] என்பதை நிச்சயம் கூற முடியும். நான் சென்னையை விட்டு சிங்கப்பூர் வந்து நான்கு வருடம் ஆகிறது தற்போது உள்ள ஜன நெருக்கடியை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. மக்கள் அலுவலகம் செல்லும் போதும் முடிந்து திரும்ப வீட்டிற்கு வரும் போதும் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல. இது சென்னையில் உள்ள மற்றும் வந்து செல்லும் அனைத்து மக்களுக்கும் தெரிந்த ஒன்றாகும். இதை எவராலும் மறுக்க முடியாது.

இவ்வாறு இருக்கையில் இந்த மோனோ ரயில் எப்படி மக்களின் பிரச்னையை தீர்க்க முடியும்? அறிவுள்ள எவரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மெட்ரோ ரயில் சேவையின் 20% கூட்டத்தைக்கூட இதனால் சமாளிக்க முடியாது. மிகச்சிறிய பெட்டிகளாகும். கூட்டத்தை சமாளிக்க தற்போது மீட்டர் கேஜ் பாதைகளை எல்லாம் மாற்றி பிராட் கேஜ் பாதைகளாக மாற்றிக்கொண்டு இருக்கும் இந்தத் தருணத்தில் மீட்டர் கேஜ் ஐ விட சிறிய அளவில் கொண்டு வந்தால் இதை என்னவென்று கூறுவது?

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரமான “பீக்” நேரங்களில் ரயிலில் உள்ளே சென்று வெளியே வருவதற்குள் தாவு தீர்ந்து விடும். கூட்ட நெரிசலில் மூச்சு விடுவதே சிரமம் இப்படி கூட்ட நெரிசலால் சென்னை திணறிக்கொண்டு இருக்கிறது அப்படி இருக்கையில் இதை சமாளிக்க மோனோ ரயில் என்ற குட்டி ரயிலைக் கொண்டு வந்தால் என்ன ஆவது? நீங்கள் இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும் இதை பாதாள ரயிலாக அமைக்க முடியாது ஒரே வழி பறக்கும் ரயில் அதாவது மாடி ரயில் மட்டுமே ஆனால் மெட்ரோ ரயில் அப்படி அல்ல.

ஏன் இதில் பணம் மட்டுமே ஒரு முக்கியப் பிரச்சனை இல்லை?

நான் முன்னரே கூறியபடி ஊழல் செய்தால் எப்படியும் பின்னாளில் அதை சரி செய்யக் கூடிய வாய்ப்புள்ளது அல்லது வேறு வழியில் பணத்தை பெறக்கூடிய வாய்ப்புள்ளது. திட்டங்களை மாற்றுவதால் மக்கள் வேறு வழியில் (கலைஞர் திட்டம் இல்லாமல் ஜெ திட்டம்) திரும்பப் பெற முடியும். கோட்டைக்கு மாற்றினால் 1000 கோடி நஷ்டத்தோடு அது முடிந்து போனது மற்றபடி அதனால் எந்த வேலையும் பெரியளவில் பாதிக்கப்படப்போவதில்லை. எடுத்துக்காட்டாக கோட்டைக்கு மாறியதால் எந்த பணியும் நின்று விடவில்லை வழக்கம்போல நடந்து கொண்டு தான் உள்ளது. கலைஞர் காப்பீட்டு திட்டம் சென்று பொதுக் காப்பீட்டு திட்டம் வரும். இதை மாற்ற ஆகும் செலவு மட்டுமே நமக்கு பிரச்சனை மக்களின் வரிப்பணம் வீண்.

பின் என்ன தான் பிரச்சனை?

ரயில் பாதை அமைப்பது என்பது இந்த மாதம் தொடங்கி அடுத்த மாதம் முடிக்கக்கூடிய சாதாரண விசயமல்ல அதுவும் சென்னை போன்ற நெரிசல் மிகுந்த நகரங்களில் இதை நீங்கள் அறிவீர்கள். மிக மிகப்பெரிய ப்ராஜக்ட். பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்ட போது அதை முடிக்க எவ்வளவு வருடங்கள் ஆனது (அது கூட கூவம் பகுதியில் மட்டுமே)அதனால் எத்தனை மக்கள் சிரமப்பட்டார்கள் என்பதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன். இந்தப்பாதை அமைப்பதற்காக பல்வேறு வழித் தடங்கள் மாற்றி விடப்பட்டும் பொதுமக்கள் டேக் டைவர்சன் டேக் டைவர்சன் என்று தலை சுற்றிக் கீழே விழாத குறையாக அவதிப்பட்டார்கள்.

இது நடந்து பல வருடங்கள் ஆகி விட்டது தற்போது மக்கள் தொகை என்ன அதே அளவிலா இருக்கும்? எத்தனை மடங்கு அதிகரித்து இருக்கும். மோனோ ரயில் அமைப்பதால் போக்குவரத்து இடைஞ்சல் இருக்காது ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டியது இருக்காது என்றெல்லாம் தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள். மெட்ரோ ரயில் அளவை விட பாதிப்பு குறைவாக இருக்கலாம் அவ்வளவே. மோனோ ரயில் அமைக்க மெட்ரோ ரயிலை அமைப்பதை விட குறைந்த செலவு ஆகும், விரைவாக முடிக்கலாம் ஆனால் அதனால் போக்குவரத்துப் பிரச்சனைகளை சமாளிக்க முடியாது.

அரசு என்பது தற்கால சிரமத்தைக் கணக்கில் கொள்ளாமல் எதிர்காலத்தை கணித்தே தனது திட்டங்களை செயல்படுத்த வேண்டும் அதுவே உண்மையான அரசு. கலைஞர் மீது பல குற்றங்கள் சுமத்தப்பட்டு இருந்தாலும் சென்னையில் பல பாலங்களை கட்டியது அவரது ஆட்சியிலேயே என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவர் பெயரை பொறிக்க கட்டினாரா என்பதெல்லாம் இரண்டாவது பட்சம். மெட்ரோ ரயில் அமைக்க தற்போது சிரமப்பட்டாலும் எதிர்காலத்தில் மக்கள் அந்தப்பயனை நிச்சயம் அனுபவிப்பார்கள். மோனோ ரயில் வந்தால்?

தற்போது ஜெ கட்டளைப்படி மோனோ ரயில் கொண்டு வருகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். இத்தனை மக்களை எப்படி அது தாங்கும்? சரி பின்னாளில் இத்திட்டம் கணிப்பு தவறாகி விட்டது போக்குவரத்து நெரிசலை எந்த விதத்திலும் குறைக்கவில்லை அதனால் மோனோ ரயிலை எடுத்து விட்டு மெட்ரோ ரயிலை கொண்டு வந்து விடலாம் என்று just like that செய்யக்கூடிய விஷயம் அல்ல என்பது யோசிக்கும் திறன் கொண்ட அனைவருக்கும் புரிந்த விசயமாகும். கலைஞர் காப்பீட்டு திட்டம் போல அதை மாற்றி விட்டு வேறு திட்டத்தை அறிவித்து கொடுக்க கூடிய விசயமா இது!

எத்தனை பேரின் உழைப்பு இதில் உள்ளது, எத்தனை வருடம் இதற்காக செலவழிக்கப்படும், இதனால் மக்கள் படும் அவஸ்தைகள் என்ன ஆவது? இன்னும் ஒரு 10 வருடம் கழித்து இருக்கும் போக்குவரத்து நெரிசலில் எப்படி மெட்ரோ ரயிலை அமைக்க முடியும்? கண்டிப்பாக முடியும்! முடியும் என்று நினைத்தால் ஆனால் அதனால் பொதுமக்களுக்கு எவ்வளவு சிரமம். இதை எல்லாம் யோசித்துப்பார்த்தால் தலை சுற்றுகிறது.

இதற்கு ஏன் மக்களிடம் பெரிதாக எதிர்ப்பு இல்லை?

காரணம் மிக மிக எளிது. மக்களுக்கு இன்னும் மோனோ ரயில் என்பதன் முழு அர்த்தம் தெரியவில்லை என்பதே. மோனோ ரயிலும் மெட்ரோ ரயில் போலவே ஒரு மாஸ் போக்குவரத்து என்றே நினைத்துக்கொண்டுள்ளார்கள். இதைப் படித்துக்கொண்டு இருக்கும் உங்களில் பலருக்குக் கூட இன்னும் மோனோ ரயில் என்பதன் முழு அர்த்தம் தெரிந்து இருக்காது என்றே கருதுகிறேன். இதில் தவறாக நினைக்க எதுவுமில்லை காரணம் பலருக்கு இது பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு மிக மிகக் குறைவு. இதைப் பற்றிய அறிமுகமோ அல்லது இதைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகளோ உள்ள மக்கள் மிகக் குறைவு அப்படி இருக்கையில் மக்களை தவறாக நினைக்க முடியாது.

மக்களைத் தான் தவறாக நினைக்க முடியாதே தவிர இந்த திட்டத்தை செயல்படுத்துகிற அரசை மற்றும் அதற்கு திட்டங்களைக் வகுத்துக் கொடுக்கும் அரசு அதிகாரிகளை நாம் நிச்சயம் மன்னிக்க முடியாது. இதைப்போல மிகப்பெரிய திட்டங்களை செய்யப்போகிறவர்கள் அதனுடைய சாதக பாதகங்களை அறியாமலா செய்வார்கள்? தெரிந்து செய்தால் அதன் பெயர் என்ன? தெரியாமல் செய்தால் அவர்கள் எதற்கு அந்த பொறுப்பில் இருக்கிறார்கள்?

சிங்கப்பூர் & மலேசியா

கட்டமைப்பு சிறப்பாக உள்ள மிகவும் குட்டி நாடான சிங்கப்பூரிலேயே (சென்னையை விட பரப்பளவில் சிங்கப்பூர் சிறியது) மோனோ ரயில் ஆரம்பிக்கப்பட்டு பின் அது நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது அது அமைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. தற்போது அமைக்கப்படும் புதிய வழித்தடங்கள் அனைத்தும் MRT என்று அழைக்கப்படும் Mass Rapid Transport என்கிற நமது ஊர் மெட்ரோ ரயில் போலவே அமைக்கப்படுகிறது. பெரும்பாலும் இங்கே பாதாள வழித்தடங்கள் அதிகம் எனவே இதற்கும் கூட்டத்தை சமாளிக்கவும் சிங்கப்பூர் அரசாங்கம் மோனோ ரயிலை நிறுத்தி விட்டு MRT எனப்படும் முறையையே பின் பற்றி வருகிறது.

சிங்கப்பூர் போல மலேசியாவிலும் மோனோ ரயில் உள்ளது ஆனால் அவர்களும் உருவாக்கிய காரணத்திற்க்காக அதை நடத்திக்கொண்டுள்ளார்கள். எவ்வகையிலும் மக்களின் முழுப் பிரச்னையை தீர்க்க உதவவில்லை. தற்போது உள்ள இடத்தில் இதே மெட்ரோ ரயில் போல இருந்து இருந்தால் இன்னும் பல மக்கள் பயன்பெறுவார்கள் என்பது உண்மை (அமைப்பதில் உள்ள இட நெருக்கடி தவிர்த்து). சில ஆசிய நாடுகளான சீனா ஜப்பான் வெகு சில ஐரோப்பா நாடுகள் மட்டுமே இதைப் பயன்படுத்துகிறார்கள் அங்கும் கூட மோனோ ரயிலை பயணிகளின் முக்கியப் போக்குவரத்துச் சேவையாக பயன்படுத்தவில்லை அல்லது பயன்படுத்த முடியவில்லை. நிலைமை இப்படி இருக்கும் போது இந்தியாவிலேயே மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்களில் ஒன்றான சென்னையில் மோனோ ரயில் வந்தால் சென்னை மக்களின் விதி என்று கூறுவதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.

நம்மால் அரசை (ஜெ வை) மீறி எதுவும் செய்ய முடியாது என்றாலும் குறைந்த பட்சம் மோனோ ரயில் வந்தால் ஏற்படும் பிரச்சனைகளை கொஞ்சமாவது நாம் அனைவரும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். ஒருவேளை (ஒருவேளை தான்) எதிர்ப்புகள் அதிகமானால் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

கருத்துகள் இல்லை: