OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 5 ஜூன், 2011

புகையிலை எதிர்ப்பும்; படம் காட்டும் அரசும்

மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப் படுகிறது. புகையிலையை பயன்படுத்துவதுநாகரீகத்தின் அடையாளமாக கருதும் அளவுக்கு பெரும்பாலோரை ஆட்கொண்டுள்ளது. நவநாகரீக பெண்களையும் இப்பழக்கம் சுற்றி வளைத்துள்ளது. இந்த புகையிலை நாகரிக வளர்ச்சிக்கேற்ப பல்வேறு பரிமாணங்களில் தனது உயிர்கொல்லி வேலைகளை கச்சிதமாக செய்துவருகிறது. ஒரு காலத்தில் புகையிலையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்து, பின்பு சுருட்டாக, பின்பு பீடியாக, சிகரெட்டாக, பான்பராக்காக, குத்காவாக, போதை தரும் பீடாக்களாக இவ்வாறான பல்வேறு முகங்கள் இந்த புகையிலைக்கு உண்டு. இதில் புகையிலையை, புகையிலையாக பீடாக்களாக பான்பராக்குகளாக பயன்படுத்துவதை பொருத்தமட்டில், யார் அதை உட்கொள்கிறாரோ அவரை மட்டுமே பாதிக்கும். ஆனால் புகைப்பதை பொருத்தமட்டில், புகைப்பவர் மட்டுமல்லாது அவருக்கு அருகாமையில் உள்ளவரையும் சேர்த்தே பாதிக்கும். 

ஒரு புகைபிடிப்பவர் அருகே புகை பிடிக்காதவர் ஒருவர் இருந்தால், புகைப்பவர் விடும் புகையை இவர் சுவாசித்து, புகைக்காத மனிதருக்கும் நோய் வரும் நிலை. சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் பேர் பலியாகி வருவது தெரிய வந்துள்ளது. அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 30 சதவீதம் ஆண், பெண் அடங்குவர்.

மேலும், இதயநோயினால் 3 லட்சத்து 79 பேரும், 1 லட்சத்து 65 பேர் மூச்சு கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும், 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்துமாவினாலும், 21 ஆயிரத்து 400 பேர் நுரையீரல் புற்று நோயினாலும் ஆண்டுதோறும் மடிகின்றனர்.
 
இத்தகைய பாதிப்புகளை புகையிலையும்,  சிகரெட், பீடி போன்றவைகளும் உண்டாக்குவதால் இந்த கேடுகளில் இருந்து மனிதனை எச்சரிக்கும் வகையில் புகையிலை பொருட்கள் மீது தேள் மற்றும்  சேதமடைந்த நுரையீரல் படமும், சிகரெட் பாக்கெட்களில் எச்சரிக்கை  வாசகமும், சேதமடைந்த நுரையீரல் படமும் இடம்பெறவேண்டும் என்று கடந்த 2009 ல் அறிவித்தது மத்திய அரசு. இந்த சட்டத்தால் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில், ''புகை பிடிப்பதை விடவும், புகையிலை பொருட்களை அப்படியே சுவைப்பதுதான் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் என்றும், புகையிலை பொருட்கள் உள்ள பாக்கெட்டுகளின் மீது கடுமையான எச்சரிக்கை படங்கள் இடம்பெறும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி குலாம் நபி ஆசாத் சமீபத்தில்   கூறியிருந்தார்.

இது தொடர்பாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகளின் மீது புதிய வாய் புற்றுநோய், நுரையீரல் புற்று நோய் ஆகியவை பற்றிய படங்கள் இடம் பெறும் என்று சுகாதார துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே  புகையிலை மற்றும் புகைப்பதால் ஏற்படும் நோய்களை குறித்த எச்சரிகை படங்களை அச்சிட்டபின்னும் விற்பனை அதிகரித்ததே அன்றி குறையவில்லை. இவ்வாறிருக்க அதே வழியை பின்பற்றி வேறு படங்களை மாற்றுவதால் எந்த பயனும் விளையப் போவதில்லை. 'குடி குடியை கெடுக்கும்- குடிப்பழக்கம் உடல் நலத்தை  கெடுக்கும் என்று பிராந்திக் கடைகளிலும் எழுதப்பட்டுள்ளது. அதை பார்த்து பயந்து குடிப்பதை  விட்டவர் எத்தனைபேர்?  டாஸ்மாக் வியாபாரம் ஆண்டுக்கு ஆண்டு எகிறிக்கொண்டு  செல்கிறதே! எனவே பச்சப்புள்ளைக்கு பயங்காட்டி சோரூட்டலாம். ஆனால் பக்குவமடைந்த மனிதனுக்கு படம் காட்டி அந்த தீமையிலிருந்து தடுக்க முடியாது என்பதை ஏனோ அரசுகள் உணர்ந்த பாடில்லை.   
 
மேலும், பொது இடங்களில் புகைப்பிடிக்கத்தடை, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் புகையிலை, சிகரெட் போன்றவை விற்கவேண்டும் என்ற சட்டம் ஆகியவை வெறும் ஏட்டளவில் உள்ளதுபோல் இந்த அபாயபடமும் எந்த மாற்றத்தையும் உண்டாக்காது. இந்த வெட்டியான சட்டங்களையும், அதை மக்களுக்கு விளக்குகிறோம் என்றபெயரில் கோடிகளை விரையமாக்குவதை விட, 'புகையிலை தொடர்பான அனைத்து பொருள்களும் விற்க தடை' என்று சட்டம் கொண்டுவரவேண்டும். அதைவிடுத்து, அரசின் வருமானத்திற்காக புகையிலையை அனுமதிப்பது; பிறகு அதை தடுக்க 'பொம்மை'யை காட்டுவது; சட்டம் போடுவது, பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போன்றதாகும். அரசு புரிந்து கொண்டால் சரி!

கருத்துகள் இல்லை: