OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 11 ஏப்ரல், 2011

இந்திய கிரிக்கெட் சில சகிக்க முடியாத வக்கிரங்கள்

கிரிக்கெட் என்றாலே எனக்குப் பல விசயங்களில் பற்றிக் கொண்டு வரும். அதில் சிலவற்றை மட்டும் இங்கே பகிர்கிறேன். 

"Indian team penalized by animal activists for hunting 11 Kangaroos last thursday, and to pay penalty by hunting 11 street dogs for today. Jai hind." 

இந்தக் குறுஞ்செய்தி இந்திய பாக். அணிகளுக்கிடையே போட்டி தொடங்கும் முன்பு வந்தது. பலரும் இதை படித்திருக்கவும் பகிர்ந்து கொண்டிருக்கவும் கூடும். இதில் வரும் "street dogs" என்பதற்குப் பதிலாக "terrorists" என்றும் சிலர் அனுப்பியிருந்தனர்.இதுதான் கிரிக்கெட் வளர்க்கும் தேசபக்தி. எதிரணி வீரர்களை வக்கிரமான விமர்சனங்களைக் கொண்டு ஏளனமாக சித்தரிப்பதுதான் இந்திய தேசபக்தி. கிரிக்கெட் நடக்காத வேறு நாளில் தேசபக்தியைப் பற்றிப் பேசினாலே எள்ளி நகையாடுவார்கள், கிரிக்கெட் நடக்கும் போது பொங்கும் தேசபக்தியை விமர்சித்தாலோ கொலையே செய்தாலும் செய்வார்கள். இன்னும் சிலர் தமது சொந்த அரசியல் கருத்துக்களைக் கொண்டுபோய் கிரிக்கெட் போட்டிகளில் திணிக்கிறார்கள்.

"உலகக்கோப்பை வெற்றி மும்பைத் தாக்குதலில் இறந்தவர்களுக்குச் சமர்ப்பணம்." - கௌதம் காம்பிர்.

இது பாகிஸ்தான் எதிர்ப்புக்காக மட்டுமே சொல்லியிருக்கிறார் ,  மும்பை கலவரத்தில் இறந்த முஸ்லிம்களோ அல்லது விதர்பா விவசாயிகளோ கிரிக்கெட் வெற்றியை சமர்ப்பிக்குமளவுக்குத் தகுதி பெறவில்லை போலும்.

"உலகக்கோப்பை வெற்றி போரில் இறந்த (சிங்கள)வீரர்களுக்குச் சமர்ப்பணம்"  -  சங்கக்காரா
நேர்மையிருந்தால் லசந்த விக்ரமதுங்காவிற்கு சமர்ப்பித்திருக்கலாம்.

"உலகக்கோப்பை வெற்றி (புலிகளுக்கெதிரான) போரில் பெற்ற வெற்றிக்கு இணையானது"  -  சிறையில் களிதின்னும் சரத் ஃபொன்சேகா. 

மகிந்தாவுடன் கருத்து வேறுபட்டு தேர்தலில் தோற்று, போர்க்குற்றங்களை வெளியிடத் தொடங்கிய்போது கைது செய்யப்பட்டு, தற்போது சிறையிலிருப்பதால் இந்திய எதிர்ப்பு பேசி சிங்கள தேசபக்தர்களைக் கவர்கிறார். 

சிங்கள இனவெறிக் கடற்படையினர் இந்திய - இலங்கைப் போட்டிகளின்போது தமிழக மீனவரை அடிப்பதற்கு இதை ஒரு காரணமாகவும் சொல்வானுகளாம்.

எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதைப் போல இன்னும் சில ஈழத்தமிழர்கள் இந்திய அணி இலங்கையத் தோற்கடித்ததை எண்ணி மகிழ்கிறார்கள். இலங்கையில் உள்ளதமிழர்கள் இந்திய வெற்றியைக் கொண்டாடி சிங்களர்களுடன் மோதலும் நடந்திருக்கிறது. இலங்கை வெற்றி பெற்றிருந்தாலோ புலிகளுடனான போரில் பெற்ற வெற்றிக்கு இணையாகவே கொண்டாடியிருப்பார்கள், அவர்கள் தமிழர்களை இந்தியர்களாகவே பார்ப்பவர்கள், அதைத்தானே சரத் பொன்சேகா எதிரொலித்தார்.

இப்படியாக தமது அற்பமான உணர்வுகளை வெளிப்படுத்த கிரிக்கெட்டைப் பயன்படுத்துகிறார்கள். 

ஒரே ஆறுதல் ஷாகித் அஃப்ரிடிதான்!

தோற்றுப்போய் நாடு திரும்பியவுடன், பாகிஸ்தானின் தோல்விக்கு மன்னிப்புக் கேட்டார். தன்னுடன் விளையாடி  வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இறுதிப் போட்டிக்கு வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்தார். "கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டும் பாருங்கள். நாம் இந்தியாவின் விளம்பரங்கள், திரைப்படங்கள், நெடுந்தொடர்கள் என அனைத்தையும் விரும்பிப் பார்க்கிறோம். திருமணச்சடங்குகள் அனைத்திலும் இந்தியர்களுடன் ஒன்றுபடுகிறோம். பின்பு ஏன் இந்தியர்களை வெறுக்க வேண்டும் ?" என்று பாகிஸ்தானிய வெறியர்களிடம் எதிர்கேள்வி கேட்டுள்ளார். இந்தியாவில் பாகிஸ்தான் வெறுப்பை ஓயாமல் வளர்க்கும் ஊடகங்கள் போலவே பாகிஸ்தானில் இந்திய வெறுப்பை வளர்க்கின்றன. கிரிக்கெட் அதற்கு ஒரு முக்கிய கருவியாகவே அங்கும் இருக்கிறது, இந்தியாவைப் போலவே.




சில வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் அன்றைய தலைவரும், சானியாவின் கணவருமான ஷோயப் மாலிக் சொன்னது நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் நடந்த போட்டி என்று நினைக்கிறேன். போட்டி முடிந்தவுடன் சொன்னார்.

"பாகிஸ்தான் அணிக்கு ஆதரவளித்த முஸ்லிம்களுக்கு நன்றி"

இதனுடன் ஒப்பிடுகையில் அஃப்ரிடி எவ்வளவோ மேன்மையாகவே சொல்லியிருக்கிறார். 

மேலும் ஐபிஎல் போட்டிகளில் பாரபட்சமாக நடந்து கொண்டு   பாகிஸ்தான் வீரர்கள்  சேர்க்கப்படாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி தமது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். "இதில் மட்டும் பாகிஸ்தான் வீரர்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தக் கூடாது, அதனால் நாங்கள் மிகவும் புண்பட்டுள்ளோம்" என்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.   

நாங்கள் இந்தியாவில் விளையாடுவதற்கு எந்த ஆட்சேபமுமில்லை, தற்போது உலகக்கோப்பையில் விளையாடினோம். நான் ஐபிஎல் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன் என்பது இதன் பொருளல்ல. இளம் வீரர்களுக்கு இது ஒரு அடித்தளமாக இருக்கும். அவர்கள் தமது முத்திரையைப் பதிக்க முடியும் என்று கூறியுள்ளார். மேலும் "இரு நாடுகளுக்கிடையே இன்னும் அதிக போட்டிகள் நடப்பதன் மூலம் பதட்டத்தைத் தவிர்க்கலாம், ஊடகங்கள் வளர்க்கும் தேவையற்ற பரபரப்பையும் குறைக்கலாம்" என்றார்

அது சரிதானே ? அவர் பணத்துக்காக விளையாட விரும்புவதாகவே இருக்கட்டும், மற்றவர்கள் மட்டும் எதற்கு விளையாடுகிறார்களாம்? சில வருடங்களுக்கு முன்பெல்லாம் உலகக் கோப்பை, மற்ற போட்டிகளில் இல்லாத போது இந்திய, பாகிஸ்தான் உட்பட அனைத்து வீரர்களும் இங்கிலாந்து கவுண்டி அணிகளுக்காக விளையாடி பணம் பெறுவார்கள். தற்போது ஐபிஎல் அவ்வளவுதான் வேறுபாடு. 2009-இல் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் காரணமாக முதல் ஐபிஎல் தவிர வேறு எதிலும் பாகிஸ்தான் வீரர்கள் சேர்க்கப்படவில்லை. இவர்களுக்கு பாகிஸ்தானைப் புறக்கணிக்க வேண்டுமெனில் உலகக்கோப்பையில் புறக்கணித்திருக்க வேண்டும். பரபரப்பையும், வெறியையும் ஏற்றி ஆயிரம் கோடிகளுக்குச் சூதாட்டங்கள் வரை பல திருவிளையாடல் நடக்கும் என்று தெரிந்துதானே உலகக் கோப்பையில் பாகிஸ்தானையும் சேர்த்தார்கள். இது என்ன வகை தேசபக்தியோ ? உண்மையில் ஐபிஎல் போட்டிகளில் பாகிஸ்தானியரையும் சேர்த்தால் இரு நாடுகளுக்கிடையே இன்னும் நல்லுறவு வளரும் என்பது என் தாழ்மையான கருத்து ஏனென்றால் கிரிக்கெட் போட்டிகளால் நட்புறவு வளரும் என்றுதானே பாகிஸ்தானின் பிரதமரை அழைத்தார்கள்.

ஐபிஎல் மூலம் நடந்த ஒரே நல்ல விசயம் அந்த (போலி) தேசபக்தி ஒழிந்ததுதான். கிரிக்கெட் எப்படி தேசபக்தியின் அடையாளமாகும்? பிரியாணிக்குள் ரசத்தை ஊற்றியது போல பொருந்தவில்லையே ? ஆனால் வெற்றிகரமாக அது இரண்டையும் கலந்துதான் பலகோடிகள் கல்லா கட்டுகிறார்கள்.

கிரிக்கெட்டை gentleman's play என்று சொல்வார்கள் எதற்காகவோ ?