OnlinePJ

Thanks for Visiting my Page

சனி, 9 ஏப்ரல், 2011

சுனாமியை ஒரு அத்தாட்சியாக எடுத்துக்கொள்வோமாக! மறுமையை உறுதியாக நம்பி, இம்மை வாழ்வைச் சீர்திருத்திக்கொள்வோமாக!

உலகம் அழியுமா? இது என்ன கதை?
என வரலாறு நெடுகிலும் சில அதிமேதாவிகள் அதிரடி வினாத் தொடுத்து வந்துள்ளனர்.

உலக அழிவுக்கான அடையாளங்களாகவும், அத்தாட்சிகளாகவும் பல அழிவுகள் நிகழ்த்தப்பட்டு இருப்பதை இஸ்லாம் தெளிவுபடுத்துகின்றது. வெள்ளப்பெருக்கு, பூமியதிர்ச்சி, பேரிடி, புயற்காற்று, கல்மாறி எனப் பல அடிப்படைகளில் அக்கிரமக்காரக் கூட்டத்தார் அழிக்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் அழிவுகள் பலவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளாக இருந்துள்ளன.

படைத்தவன் ஒருவன் இருக்கின்றானென்பதை மனிதன் மறந்து அல்லது மறுத்து நடக்கும் போது சில அழிவுகளை ஏற்படுத்துவதன் மூலம் கடவுள் ஒருவன் இருக்கின்றான் என்பதை உணர்த்துகின்றான் அல்லாஹ்!

மார்ச் 11 ஆம் திகதி ஜப்பானை பாரிய பூமியதிர்ச்சியும், சுனாமியும் தாக்கியது. இவற்றின் விளைவாக ஜப்பானின் புகுஷிமா மாகாணத்தின் கடலோரத்தில் அமைந்துள்ள டாய்ச்சா அணுமின் நிலையத்தின் குளிரூட்டும் இயந்திரங்கள் செயலிழந்து போக அணு உலைகள் சூடேறி வெடிக்க ஆரம்பித்துள்ளன. சுனாமி தாக்குதல், பூமியதிர்ச்சி என்பன ஜப்பானுக்குப் பழகிப் போன அம்சங்களாகும். ஆனால், ஜப்பானின் அணுக் கசிவு என்பது ஜப்பானை மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக ஜப்பானின் அண்டை நாடுகள் பீதியில் உறைந்து போயுள்ளன.

அணுக் கசிவாலேற்படும் பேரழிவைத் தடுக்க விஞ்ஞானிகள் பெரிதும் போராடி வருகின்றனர். இதில் முன்னேற்றமும் தெரிகின்றது.

இந்த முயற்சி தோல்வியுற்றால் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஏற்பட்டதை விட அதிக இழப்புகளைச் சந்திக்க நேரிடுமென அறிவியலாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். ஆக்கச் சக்திக்காக மட்டுமன்றி அழிவுச் சக்திக்காகவும் அணுச் சக்தி பயன்படுத்தப்படுகின்றது. அண்டை நாடுகளை அச்சமூட்டுவதற்காகவும், தன்னை அணு வல்லமை பெற்ற நாடாகக் காட்டிக்கொள்வதற்காகவும் ஒவ்வொரு நாடும் அணு குண்டுத் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றது.

ஜப்பானில் ஏற்பட்ட இந்த அணு உலைக் கசிவைத் தொடர்ந்து அணு உலைகள் குறித்த அச்சம் சகல நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது. அறிவியலிலும், தொழில் நுட்பத்திலும் முன்னணியில் இருக்கும் ஜப்பானின் தொழில் நுட்பத்தின் கதியே இதுவென்றால் சாதாரண நாடுகளின் அணு உலைகள் இது போன்ற பேரழிவுகளுக்குத் தாக்குப் பிடிக்கக் கூடியவைதானா என்ற ஐயம் பல நாடுகளிலும் எழுந்துள்ளது.

அயல் நாடுகளை அச்சமூட்டும் முயற்சி இப்போது உள்நாட்டு மக்களின் வயிற்றிலேயே புளியைக் கறைத்துள்ளது. சுமார் 32 நாடுகளில் 450 அணு உலைகள் இயங்கி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பொதுவாக அணு உலைகள் கடற்கரைப் பிரதேசங்களில்தான் அமைக்கப்படும். ஜப்பான் அடிக்கடி சுனாமி மற்றும் நில நடுக்கத்துக்கு உள்ளாகும் நாடாகும். ஜப்பானில் நிறுவப்பட்ட அணு உலைகள் 7.0 றிச்டர் அளவுக்குக் குறைவான பூகம்பங்களை மட்டுமே தாக்குப் பிடிக்கும் தொழில் நுட்பத்தைக் கொண்டதாகும்.

இந்த அடிப்படையில் மேற்படி அளவுக்கு அதிகமான றிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டால் ஜப்பானிய அணு உலைகளால் பாரிய ஆபத்து ஏற்படலாமென 2008 களில் சர்வதேச அணுச் சக்தி அமைப்பு ஜப்பானை எச்சரித்து இருந்ததாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணமொன்று குறிப்பிடுகின்றது.

அணு உலைகள் மிகப் பாதுகாப்பாகத்தான் அமைக்கப்படுகின்றன. இருப்பினும், அனைத்துக்கும் மேலால் ஒரு சக்தி இருக்கின்றது என்பதை அடிக்கடி நிகழும் நிகழ்வுகள் நிரூபித்த வண்ணம் உள்ளன.

ஜப்பானிய அணு உலைக் கசிவு என்பது உலகு சந்திக்கும் நான்காவது அணுக் கசிவு ஆபத்தாகும். 1969ல் சுவிட்ஸர்லாந்தின் லு சென்ஸ் அணு உலையும், 1979ல் அமெரிக்காவின் த்ரிமைல் தீவு அணு உலையும், 1986ல் ரஷ்யா உக்ரைனின் செர்னோபில் அணு உலையும் வெடித்தன. இவற்றின் பாதிப்புகளுக்கு அந்தந்த நாடுகள் மட்டும் அன்றி அயல்நாடுகளும் உள்ளாகின.

இன்றும் கூட இவற்றின் பாதிப்புகள் நீங்கியதாக இல்லை. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது அமெரிக்கா ஜப்பானில் போட்ட இரு அணு குண்டுகளின் தாக்கம் இன்றும் கூட இருக்கின்றது. இந்த வகையில் அணுக் கசிவு ஆபத்து என்பது கற்பனை பண்ணிப் பார்க்க முடியாத அழிவாகும்.

தற்போது உலகு சந்தித்துக்கொண்டிருக்கும் நான்காவது அணுக் கசிவாக ஜப்பான் ஷடாய்ச்சா அணுக் கசிவு| இருக்கின்றது. உலகில் இயங்கி வரும் அணு உலைகளில் மிகப் பாதுகாப்பானவையாகக் கருதப்பட்டது டாய்ச்சா அணு உலைகளே! அதன் நிலையே இதுவென்றால் மற்ற 450 அணு உலைகளின் நிலை என்னவென்பது இன்றைய உலகு சந்திக்கும் மிக முக்கிய கேள்வியாகும்.

இதில் சிந்திக்க வேண்டிய அம்சம் என்ன என்றால், ஜப்பான் பூகம்ப பூமியென்பதால் கடுமையான பூகம்பம் ஏற்பட்டால் அணு உலைகளுக்குப் பாதிப்பு ஏற்படுமா? என டாய்ச்சா அணு உலை அமைக்கப்படும் போது வினவப்பட்டது.

அப்போது, ‘இந்த அணு உலையை அசைக்கக் கூடிய அளவுக்கு பெரும் நில நடுக்கம் ஏற்படாது!’ என ஜப்பான் அரசு பதிலளித்தது.

மனிதன் என்னதான் தொழில் நுட்பத்தில் முன்னேறினாலும் தனக்கும் மேலே ஒரு சக்தி இருக்கின்றது என்பதை மறந்து பேசலாகாது.

டைட்டானிக் கப்பலைத் தயாரித்தோர் ‘கடவுளால் கூட இந்தக் கப்பலை ஒன்றும் செய்ய முடியாது!’ என அதன் தொழில் நுட்பம் குறித்துப் பேசினர். முதல் பயணத்திலேயே உலகுக்குச் சோகம் மிக்க அழிவை அது தந்தது.

தனது தோட்டம் அழிவைச் சந்திக்காது எனப் பெருமையாகப் பேசிய ஒருவரது தோட்டம் அழிக்கப்பட்டது குறித்து சூறா அல்கஃப் பேசுகின்றது. எனது செல்வமெல்லாம் எனது அறிவால் நான் தேடியவை என கர்வத்துடன் நடந்த காரூன் பூமியால் விழுங்கப்பட்டான் என குர்ஆன் கூறுகின்றது.

ஜப்பானின் நிகழ்வு சோகமானது என்றாலும் இந்த நிகழ்வு மூலம் படைத்தவனை மறந்து மனிதன் வாழலாகாது என்ற படிப்பினையை உலக சமூகங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

சுனாமியும் அத்தாட்சியே!
உலக நாடுகள் பலவும் சுனாமி ஆபத்தை வரலாறு நெடுகிலும் சந்தித்துள்ளன. எனினும், அடிக்கடி சுனாமியைச் சந்திக்கும் நாடு ஜப்பானாகும். ஷசுனாமி| (வுளரயெஅi) என்ற சொல்லும் ஜப்பான் மொழிச் சொல்லாகும்.

1700 களில் இருந்தே பல நாடுகளை சுனாமி தாக்கி வந்தாலும், சுனாமியைப் பற்றிய அறிவு பொதுவாக பொது மக்களிடமோ, படித்தோரிடமோ இருக்கவில்லை. எனினும், 2004 டிஸம்பர் 26ல் ஏற்பட்ட சுனாமிப் பேரிடர்தான் சுனாமி குறித்து அகில உலகும் அறிய வழி செய்ததெனலாம். ஒன்று, இதன் இழப்பு 2 இலட்சங்களைத் தாண்டியிருந்தது. அடுத்தது, ஊடகத் துறை முழு வளர்ச்சி பெற்றுக் காணப்பட்டதால் இந்தச் சுனாமி அழிவுகளை உலகம் நேரடியாகப் பார்ப்பது போல் ஊடகங்கள் வழியாகக் கண்டு கலங்கினர்.

எனவே அதன் பின் சுனாமி என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாக மாறி விட்டது. இந்தச் சுனாமி அழிவுகள் மறுமை நிகழ்வை ஞாபகமூட்டும் அம்சங்களாகத் திகழ்கின்றன.

உலக அழிவு நெருங்கும் போது பூகம்பங்கள் அதிகரிக்கும் என்பது நபிமொழியாகும். (புகாரி 7121)

இந்த அடிப்படையில் சுனாமிகளும், பூமி அதிர்வுகளும் மறுமைக்கான சாட்சியங்களாகத் திகழ்கின்றன.

உலக அழிவு நிகழும் போது ஏற்படும் நிகழ்வுகள் குறித்துக் குர்ஆன் பல செய்திகளைப் பேசுகின்றது.

‘மனிதர்களே! உங்கள் இரட்சகனை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக மறுமையின் அதிர்வு மிகக் கடுமையானதாகும்;.’ (22:1)

‘சூரியன் சுருட்டப்படும் போது,’
‘நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் போது,’
‘மலைகள் பெயர்க்கப்படும் போது,’
‘கர்ப்பமுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப் படும் போது,’
‘வனவிலங்குகள் ஒன்று திரட்டப்படும் போது,’
‘கடல்கள் எரியூட்டப்படும் போது,’ (81:1-6)

உலக அழிவின் போது தாய் தன் பிள்ளையை மறந்து விடுவாள். விலை மதிக்க முடியாத பொருட்கள் எல்லாம் கேட்பார்-பார்ப்பார் இல்லாது விடப்பட்டு விடுமெனக் குர்ஆன் கூறுகின்றது. மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த வசனங்கள் கூறுகின்றன.

கோடிக் கணக்கான பெறுமதி வாய்ந்த வாகனங்கள், கப்பல்கள், விமானங்கள் எல்லாம் குப்பை-கூலங்களாகக் காட்சி தருவதை ஜப்பானில் காணலாம்.

உலக அழிவின் போது கடல் மாற்றம் குறித்தும் குர்ஆன் பேசுகின்றது;

‘கடல்கள் எரியூட்டப்படும் போது,’ (81:6)
‘கடல்கள் பிளக்கப்படும் போது,’ (82:3)

மேற்படி வசனங்கள் உலக அழிவின் போது கடல்கள் குமுறும் என்றும், கடல்கள் தீ மூட்டப்படும் என்றும் கூறுகின்றன. சுனாமிகள் கடலின் குமுறலின் தாக்கம் எப்படியிருக்கும் என்பதற்கான எடுத்துக் காட்டுகளாகத் திகழ்கின்றன.

சுனாமி அலைகள் தரையில் பாய்ந்து சுருட்ட வேண்டியதையெல்லாம் சுருட்டிக் கொண்டு மீண்டும் கடலுக்குள் செல்லும் காட்சிகளை நாம் கண்களால் காண்கின்றோம். இந்தக் கடல், மழை, வானம், பூமி அனைத்தும் ஒருவனின் கட்டளைக்குப் பணிந்தே ஒரு ஒழுங்கில் இயங்கி வருகின்றன. அவன் நினைத்தால் எந்த நிமிடமும் இந்த ஒழுங்கை மாற்ற முடியும்.

அவன் இந்த ஒழுங்கில் சின்னதோர் மாற்றத்தை ஏற்படுத்தினாலும் அதன் பாதிப்பென்பது கற்பனை பண்ணிப் பார்க்க முடியாதவை என்பதை மனிதன் உணர வேண்டும். இந்த சுனாமிப் பேரழிவால் கட்டிடங்கள் நொறுங்கிப் பலம் வாய்ந்த பல அம்சங்கள் அல்லுண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

அதே வேளை, நாட்கள் பல தாண்டியதன் பின்னரும் 80 வயது மூதாட்டியும், அவரது பேரப் பிள்ளையும் உயிருடன் மீட்கப்படுகின்றனர். நான்கு நாட்கள் தாண்டியும் நான்கு மாதக் குழந்தை உயிருடன் மீட்கப்படுகின்றது என்றால் மனிதனது கற்பனைகள், தர்க்கவியல் சிந்தனைகளுக்கு அப்பாலும் ஒரு சக்தி இருந்து காரியங்களை இயக்கிக்கொண்டிருப்பதை அறிய முடியும்.

இது தொழில் நுட்ப யுகம்!
அறிவியல் யுகம்!
மனிதனால் அறிவால் இயற்கையை வென்று விட்டான்! என்றெல்லாம் பேசப்படுகின்றது.

ஜப்பான் தொழில் நுட்பத்தின் தாய் வீடாகும். அது தொழில் நுட்பத்தில் உச்சத்திலிருக்கும் நாடு. சுனாமி தற்பாதுகாப்புக்கான பல ஏற்பாடுகள் அந்த நாட்டில் இருக்கின்றன.

இருப்பினும், இந்தப் பாரிய பேரழிவுக்கு அது முகம் கொடுத்துள்ளது என்றால் அறிவாலும், விஞ்ஞானத் தொழில் நுட்பத்தாலும் இயற்கையை மனிதன் வெற்றி பெற்றான் என்ற குப்ரான கோஷத்தின் போலித் தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.

இது வரை நாம் கூறிய கூற்றுகள் ஜப்பானியர் அல்லாஹ்வின் கோபத்துக்கு உரியோர் என்பதைக் கூறுவதற்கான தகவல்கள் அல்ல. பொதுவான அழிவுகள் தீயவர்களுக்கு அழிவாகவும், அதில் அகப்பட்டுக்கொள்ளும் நல்லவர்களுக்கு அருளாகவும், தப்பித்தவர்களுக்குப் பாடமாகவும், சோதனையாகவும் திகழ்கின்றன.

எனவே, சுனாமியை ஒரு அத்தாட்சியாக எடுத்துக்கொள்வோமாக! மறுமையை உறுதியாக நம்பி, இம்மை வாழ்வைச் சீர்திருத்திக்கொள்வோமாக!

கருத்துகள் இல்லை: