OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

ஸ்பெக்ட்ரம் ஊழலை மிஞ்சிய கருணாநிதியின் ரூ:3 இலட்சம் கோடி கிரானைட் ஊழல்: தினபூமி குற்றச்சாட்டு


தமிழகத்தில் இருந்து வெளிவரும் தினபூமி நாளிதழ் 3 இலட்சம் கோடி ஊழல் மோசடியில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. தினபூமி வெளியிட்ட செய்தி கீழே தொகுக்கப்பட்டுள்ளது.


* மேலூர் அருகே உள்ள வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்தில் இருந்து மட்டும் 5 ஆண்டுகளில் தி.மு.க. அரசு துணையுடன் பி.ஆர்.பி. நிறுவனம் ரூ. 4000 கோடிக்கு கிரானைட் கற்கள் கடத்தல்!

* டாமின் சுரங்கத்தில் இருந்து பெர்மிட் இல்லாமலும் டாமின் முத்திரை இல்லாமலும் கிரானைட் கற்களை பி.ஆர்.பி. நிறுவனம் கடத்தி பி.ஆர்.பி. நிறுவன இடத்திற்கு கொண்டுசெல்வது வீடியோ ஆதாரத்துடன் அம்பலம்.

* மாதம் ஒரு கல்லுக்கு அரசுக்கு பணம் செலுத்திவிட்டு சுமார் 1000 கற்களுக்கு மேல் கடத்துவதற்கான வீடியோ ஆதாரங்கள் சிக்கின.

* பல இடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு இந்த மெகா ஊழல் கண்டுபிடிப்பு.

* ஒரு ஆண்டு முழுவதற்கும் சுமார் 191 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களுக்கு மட்டும் அரசுக்கு குத்தகை பணம் செலுத்திவிட்டு தினமும் சுமார் 551 கியூபிக் மீட்டர் கற்களுக்கு மேலாகவும் ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கியூபிக் மீட்டர்களுக்கு மேலும் கிரானைட் கற்கள் கடத்தல்.

* பி.ஆர்.பி. நிறுவனம் ஒரு டாமின் சுரங்கத்தில் இருந்து மட்டும் தினமும் ரூ. 2 கோடிக்கும் மேல் கிரானைட் கற்களை கடத்துவதற்கான வீடியோ ஆதாரங்கள் சிக்கின.

* டாமின் கிரானைட் சுரங்கத்தில் கற்கள் திருடப்படுவதாக கருணாநிதிக்கு புகார் கொடுத்தும் சுரங்க திருடர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காததால் ரூ. 3 லட்சம் கோடி டாமின் கிரானைட் சுரங்க ஊழலில் கருணாநிதிக்கு தொடர்பு.

* ரூ. 3 லட்சம் கோடி டாமின் கிரானைட் சுரங்க ஊழலை கண்டுபிடித்துவிடாமல் இருக்கவே அவசர அவசரமாக தினபூமி ஆசிரியர் மீது பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பியது அம்பலம்.
http://rste.org/wp-content/uploads/2011/04/velluthumalai-tamin-quarry1-1024x630.jpg
தமிழக அரசின் நிறுவனமான டாமின் கிரானைட் சுரங்கங்களில் நடைபெறும் மெகா ஊழலை கண்டுபிடிப்பதற்காக தினபூமி நாளிதழ் மிகப்பெரிய புலனாய்வு வேட்டை நடத்தியது. இந்த புலனாய்வு வேட்டையில் ஏராளமான ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு பல மாதங்கள் டாமின் கிரானைட் சுரங்கங்கள் கண்காணிக்கப்பட்டது.

இந்த அதிரடி வேட்டை மூலம் டாமின் கிரானைட் சுரங்கங்களில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தி.மு.க. அரசு ரூ. 3 லட்சம் கோடி ஊழல் செய்திருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. வெள்ளூத்துமலை டாமின் கிரானைட் சுரங்கத்தில் மாதத்திற்கு ஒரு கல்லுக்கு குத்தகை பணம் செலுத்திவிட்டு சுமார் 1000 கிரானைட் கற்களுக்கு மேல் குத்தகை பணம் செலுத்தாமலும், பெர்மிட் இல்லாமலும், டாமின் முத்திரை போடாமலும் கடத்தி செல்லப்பட்டது வீடியோவில் பதிவாகி உள்ளது.

சுரங்கத்துறை அதிகாரிகள், டாமின் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர், ஹார்லிக்ஸ் பார்ட்டி மற்றும் கருணாநிதி ஆகியோரின் துணையுடன் மேலூர் அருகே உள்ள வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்தில் இருந்து மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் பி.ஆர்.பி. நிறுவனம் சுமார் 4 ஆயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை கடத்தி உள்ளது. பெர்மிட் இல்லாமலும் டாமின் முத்திரை இல்லாமலும் வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்தில் இருந்து மட்டும் தினமும் ரூ. 2 கோடிக்கு மேல் கிரானைட் கற்களை பி.ஆர்.பி. நிறுவனம் கடத்தி தங்களது சொந்த இடங்களுக்கு கடத்திகொண்டுசெல்வதற்கான வீடியோ ஆதாரங்களும் தினபூமியிடம் சிக்கியுள்ளது.

டாமின் கிரானைட் சுரங்கத்தில் நடைபெறும் திருட்டு சம்பந்தமாக முதல்வர் கருணாநிதியிடம் புகார் செய்தும் கிரானைட் திருடர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ரூ. 3 லட்சம் கோடி டாமின் சுரங்க ஊழலில் கருணாநிதிக்கு தொடர்பு உள்ளதும் அம்பலமாகியுள்ளது. இந்த ரூ. 3 லட்சம் கோடி டாமின் சுரங்க ஊழலை தினபூமி கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காகவே தி.மு.க. அரசு தினபூமி ஆசிரியரை அவசர அவசரமாக கைது செய்து சிறைக்கு அனுப்பி தினபூமியை முடக்க திட்டமிட்டதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

கீழவளவு பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் முருகேசன் என்பவர் கிரானைட் சுரங்கத்திற்கு குத்தகை உரிமம் பெற்றுள்ளார். ஆழமாக தோண்டப்பட்ட இந்த சுரங்கத்தில் வேஸ்ட் கற்கள் இல்லை என்று கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஐகோர்ட்டுக்கு ரமேஷ் குமார் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார். இதன்பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கிரானைட் சுரங்கங்கள் இருக்கும் பகுதியில் பிரத்யேகமாக சாட்டிலைட் புகைப்படம் எடுக்கப்பட்டது.

இந்த புகைப்படங்கள் மூலம் மதுரை மாவட்டம் கீழவளவு பகுதியில் பஞ்சபாண்டவர் மலைக்கு அருகில் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் கியூபிக் மீட்டர் கற்களையும், கீழையூர் பகுதியில் 50 ஆயிரம் கியூபிக் மீட்டர் கற்களையும் ஆகமொத்தம் சுமார் ரூ. 1,500 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை பி.ஆர்.பி. நிறுவனம் விதிமுறைகளுக்கு மாறாக ஸ்டாக் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சட்டவிரோத முறைகேடுகள் சம்பந்தமாக புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் உதவி இயக்குனருக்கு கேள்விகள் கேட்கப்பட்டது. 2 மாதங்கள் கழித்து பதிலளித்த உதவி இயக்குனர்,தாசில்தார், மேலூர் உதவி புவியியலாளர், விசேஷ உதவி தாசில்தார் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர்களிடமிருந்து ரிப்போர்ட்டிற்காக காத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த முறைகேடுகள் சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர், தொழில்துறை செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோருக்கு ரமேஷ்குமார் புகார் கடிதங்கள் அனுப்பினார். இந்த முறைகேடுகளை மூடிமறைக்க மாவட்ட ஆட்சித் தலைவரை வைத்து ஒரு நாடகத்தை நடத்தினார்கள். இந்த இடங்களில் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ள கற்கள் விற்பனைக்கு தகுதியற்ற கற்கள் என்றும், இந்த இடங்களில் வேஸ்ட் கற்களை வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு ஏற்கனவே பி.ஆர்.பி. கிரானைட் மற்றும் கே. முருகேசன் என்பவரும் கடிதம் கொடுத்திருப்பதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் பதிலளித்திருந்தார்.

பி.ஆர்.பி. கிரானைட்ஸ் மற்றும் கே.முருகேசன் ஆகியோர் கொடுத்திருப்பதாக கூறப்படும் கடித விபரங்களை புவியியல் சுரங்கத்துறை உதவி இயக்குனர், ரமேஷ்குமாருக்கு 2 மாதங்கள் கழித்து அனுப்பிய கடிதத்தில் ஏன் குறிப்பிடவில்லை? ஆகமொத்தம் இப்படியொரு கடிதமே அலுவலகத்தில் இல்லை என்று மறைமுகமாக உதவி இயக்குனர் ஒப்புக்கொண்டுள்ளார். உதவி இயக்குனர் கடிதம் அனுப்பிய பின்னர்தான் பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் கே. முருகேசன் கொடுத்ததாக கூறப்பட்ட கடிதம் போர்ஜரியாக தயார் செய்யப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் செயல்படும் முருகேசன் சுரங்கத்தில் இருந்து அரசு அனுமதி பெறாமல் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் கியூபிக் மீட்டர் கற்களை தனியார் இடத்திற்கு முருகேசன் எப்படி எடுத்துவந்தார்? தோண்டாத இடத்தை தோண்டியதாக கூறியும், பி.ஆர்.பி. நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காமலும் தவறுக்குமேல் தவறாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஊழலுக்கு துணை போய்விட்டார்.

கிரானைட் கற்களையோ வேஸ்ட் கற்களையோ சுரங்கத்தை விட்டு வெளியிடங்களில் ஸ்டாக் வைத்துக்கொள்ள யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை

கிரானைட் சுரங்கங்களில் வேஸ்ட் ஆகும் வேஸ்ட் கற்களை அந்தந்த சுரங்கங்களில் வைக்கப்படவேண்டும் என்று விதி கூறுகிறது. ஒவ்வொரு கிரானைட் குத்தகைதாரரும் அந்தந்த அந்த சுரங்கத்திலேயே வேஸ்ட் கற்களை வைத்துக்கொள்கிறேன் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.

கிரானைட் சுரங்கங்களில் இருந்து வெளியிடங்களில் கிரானைட் கற்கள் மற்றும் விற்பனைக்கு தகுதியான கற்களை ஸ்டாக் வைத்துக்கொள்ள யாருக்காவது அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுரங்கத்துறை அதிகாரிகள் மதுரை மாவட்டம் உட்பட எந்த மாவட்டத்திலும் கிரானைட் கற்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள இடத்தை விட்டு வெளியிடங்களில் ஸ்டாக் வைத்துக்கொள்ள யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறிவிட்டனர்.

கொலை செய்ய அனுமதி கேட்டு கலெக்டருக்கு கடிதம் எழுதி விட்டு
கொலை செய்து விட்டால் நடவடிக்கை எடுக்க மாட்டாரோ?

ஒருவர் கொலை செய்யவும், கொள்ளை அடிக்கவும் அனுமதி கோரி மதுரை கலெக்டருக்கு கடிதம் கொடுத்து விட்டால் போதும் போலும். கொலை செய்யலாம், கொள்ளை அடிக்கலாம். கலெக்டர் எந்த கேள்வியும் கேட்க மாட்டார் போலும். ஏனென்றால் அவர் கொலை செய்யவும், கொள்ளையடிக்கவும் ஏற்கனவே கடிதம் கொடுத்து விட்டார். எனவே அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று கூறினால் எவ்வளவு கேலிக்கூத்தாக இருக்குமோ?

அது போலத்தான் எந்த கிரானைட் சுரங்கத்தில் இருந்தும் கிரானைட் கற்களையோ, கிரானைட் வேஸ்ட் கற்களையோ சுரங்கத்தை விட்டு வெளியே எடுத்து வந்து ஸ்டாக் வைத்துக் கொள்ள யாருக்கும் அனுமதி அளிக்காத போது இந்த கலெக்டர் மட்டும் கற்களை கடத்தும் கொள்ளையர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டார். விதிமுறைகளை மீறி கற்களை கடத்தியதாக புகார் கொடுக்கப்பட்டும் கற்களை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சுரங்க அதிபர்கள் கைது செய்யப்படவில்லை.

தினபூமியை முடக்க பொய்வழக்கு

விதிமுறைகளை மீறி சுரங்கத்தில் இருந்து கற்கள் கடத்தல் ரூ. 1,500 கோடி கிரானைட் சுரங்க ஊழல் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற தலைப்பில் 20.7.2010 தேதியன்று தினபூமி நாளிதழில் செய்தி வெளியானது. கிரானைட் திருட்டு மாபியாக்கள், தங்களது ஊழல் வெளிவந்து விட்டது என்பதாலும், இங்கு ஸ்டாக் வைக்கப்பட்டு உள்ள கற்கள் அனைத்தும் டாமின் சுரங்கங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கற்கள்தான் என்பது வெளியுலகிற்கு தெரிந்து விடும் என்ற அச்சத்தில் ஹார்லிக்ஸ் பார்ட்டியின் துணையுடன் தினபூமி ஆசிரியரையும், பத்திரிக்கையாளரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதன் மூலம் தினபூமியை முடக்கி விடலாம் என்று கருதி நான்கு தினங்களில் 5 பொய் வழக்குகளையும் போட்டனர். மேலும் பல வழக்குகளை போட்டு பல மாதங்கள் சிறையிலேயே வைத்து விடலாம் அல்லது சிறையிலேயே தீர்த்து கட்டி விடலாம் என்று நினைத்தனர். பத்திரிக்கையாளர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, அடுத்த நாளே ஜாமீனில் விட வேண்டிய நிலை ஏற்பட்டதால் இவர்களின் கனவு பொய்த்துப் போனது.

டாமின் சுரங்கங்களில் மெகா ஊழல்

டாமின் நிறுவனம் தமிழ்நாட்டில் 108 கிரானைட் சுரங்கங்களுக்கு அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. டாமின் நிறுவனம் குத்தகைக்கு பெற்றுள்ள பகுதிகள் பெரும்பாலும் மலைகள் உள்ள பகுதி ஆகும். டாமின் நிறுவனம் தன்னுடைய சுரங்கங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதற்கும், எடுத்த கற்களை விற்பனை செய்வதற்கும் ரைசிங் ஏஜெண்ட்/ ரைசிங் கம் சேல் ஏஜெண்ட்களை நியமித்துள்ளது. இந்த ரைசிங் ஏஜெண்டுகள் மூலம்தான் ஊழல் அரங்கேற்றப்பட்டுள்ளது.

கீழவளவு, கீழையூர் கிராமத்தில் பஞ்சபாண்டவர்மலை அமைந்துள்ளது. இந்த மலைக்கு எதிர்புறம் அமைந்துள்ளது வெள்ளூத்துமலை. இந்த வெள்ளூத்துமலை பகுதிக்கு டாமின் நிறுவனம் அரசிடம் குத்தகை உரிமம் பெற்றுள்ளது. இங்கு வெள்ளைநிற கிரானைட் கற்கள் கிடைக்கின்றன. இந்த மலையின் மேல்பரப்பில் இருந்தே முதல்தரமான கிரானைட் கற்கள் கிடைக்கிறது. இந்த கற்கள் ஒரு கியூபிக் மீட்டர் சுமார் ரூ.40,000 முதல் ரூ. 60,000 வரை விற்பனை ஆகிறது.

டாமின் கிரானைட் சுரங்க ஊழலை கண்டுபிடிக்க தினபூமி நடத்திய புலனாய்வு வேட்டை

கீழவளவு கீழையூர் பகுதியில் பி.ஆர்.பி. நிறுவனம் ஸ்டாக் வைத்துள்ள கிரானைட் கற்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பதை ஆய்வு செய்யும்போது இங்கு ஸ்டாக் வைத்துள்ள அனைத்து கற்களும் வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்தில் இருந்து திருடி வரப்பட்டவைதான் என்று தெரியவந்தது. இந்த டாமின் சுரங்க ஊழலை கையும் களவுமாக பிடிக்க இதுவரை இந்தியாவின் எந்த பத்திரிகையும் செய்யத அளவில் மிகப்பெரிய அளவில் ஒரு புலனாய்வு வேட்டையை தினபூமி நாளிதழ் நடத்தியது.

இந்த வேட்டையில் டாமின் கிரானைட் சுரங்கங்களுக்கு அருகில் ஏராளமான ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் இந்தியாவிலேயே யாரும் செய்யாத புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த ரகசிய கேமராக்கள் இயக்கப்பட்டன. இந்த வேட்டை பல மாதங்கள் நடத்தப்பட்டது.

இந்த வேட்டையில் டாமின் சுரங்கங்களில் இருந்து கிரானைட் கற்கள் வெட்டுவது, கிரானைட் கற்களை பி.ஆர்.பி. நிறுவன லாரிகளில் ஏற்றுவது, டாமின் சுரங்கங்களில் இருந்து பி.ஆர்.பி. நிறுவன லாரிகளில் கிரானைட் கற்களை டாமின் முத்திரை இல்லாமல் திருடி எடுத்துவந்தது, சாலைகளில் கிரானைட் கற்களுடன் லாரிகள் செல்வது, திருடப்பட்ட கிரானைட் கற்கள் பி.ஆர்.பி. நிறுவன லாரிகள், பி.ஆர்.பி. நிறுவன இடத்திற்குள் செல்வது, அங்குள்ள கிரேன்கள் மூலம் திருடப்பட்ட கிரானைட் கற்களை பி.ஆர்.பி. நிறுவன இடத்திற்குள் இறக்கி வைப்பது உள்பட அனைத்து காட்சிகளும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டாமின் முத்திரை இல்லை

டாமின் சுரங்கத்தில் கற்களை வெட்டி எடுத்தவுடன் முத்திரை இட வேண்டும் என்பது டாமின் விதியாகும். ஏற்கனவே இதுபோல டாமின் சுரங்கத்தில் இருந்து முத்திரை இல்லாமல் பல கற்கள் அனுப்பப்பட்டதை சி.ஏ.ஜி. கண்டித்துள்ளது. டாமின் நிறுவன சுரங்கத்தில் இருந்து கொள்ளையடித்து பி.ஆர்.பி. நிறுவன லாரிகளில் பி.ஆர்.பி. நிறுவன இடத்திற்கு கடத்திச் செல்லும் எந்தக் கல்லிலும் டாமின் முத்திரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிருந்து கடத்தப்படும் கற்கள் ஒவ்வொன்றும் சுமார் 15 கியூபிக் மீட்டர் இருக்கும்.

ஒரு ஆண்டுக்கு 191 கியூபிக் மீட்டருக்கு பெர்மிட் வ”ங்கிவிட்டு ஆண்டுக்கு 2 லட்சம் கியூபிக் மீட்டர் கற்கள் கடத்தல்

இந்த வேட்டையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில் இப்படியும் ஊழல் செய்ய முடியுமா? கொள்ளையடிக்க முடியுமா? என்று வியக்கும் அளவுக்கு தி.மு.க. இந்த ஊழலை செய்துள்ளது. பல மாதங்கள் நடந்த இந்த புலனாய்வு வேட்டையின் மூலம் வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்தில் இருந்துமட்டும் தினமும் அதிகபட்சமாக சுமார் 765 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களையும் சராசரியாக தினமும் 551 கியூபிக் மீட்டர் கற்களையும் டாமின் முத்திரை இல்லாமலும் பி.ஆர்.பி. நிறுவனத்தின் லாரிகளில் ஏற்றி ஏற்கனவே பி.ஆர்.பி. நிறுவனம் விதிமுறைகளை மீறி கிரானைட் கற்கள் கடத்தி வைத்திருப்பதாக புகார் கூறிய இடத்திற்கு கடத்தப்பட்டுள்ளன. இதற்கான வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளது.

மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், 1.4.2010 முதல் 9.3.2011 முடிய உள்ள சுமார் ஒரு வருட காலத்திற்கு வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்தில் இருந்து 191 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களுக்கு மட்டும்தான் சுரங்கத்துறை பெர்மிட் வழங்கியுள்ளது. ஆனால் இந்த டாமின் சுரங்கத்தில் இருந்துமட்டும் சராசரியாக தினமும் 551 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்கள் பி.ஆர்.பி. நிறுவனத்தால் திருடப்பட்டு கடத்தப்படுகிறது.

வருடத்திற்கு சுமார் 2 லட்சம் கியூபிக் மீட்டர் கற்களை பி.ஆர்.பி. நிறுவனம் கொள்ளையடித்து வருகிறது. தி.மு.க. ஆட்சியில் 5 வருடங்களில் பி.ஆர்.பி. நிறுவனம் தொடர்ந்து இதுபோல் கிரானைட் கற்களை கடத்தியிருந்தால் இந்த கற்களின் மதிப்பு ரூ. 4000 கோடியாகும். இதுபோல டாமின் சுரங்கத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 5 லட்சம் கியூபிக் மீட்டர் கற்கள் கீழவளவில் உள்ள பஞ்சபாண்டவர் மலைக்கு அருகில் பி.ஆர்.பி. நிறுவனம் பதுக்கிவைத்துள்ளது. இதை தற்போதும் நீங்கள் நேரில் அங்கு சென்றால் பார்க்கலாம்.

தி.மு.க. ஆட்சியில் டாமின் நிறுவனத்தில் ரூ. 3 லட்சம் கோடி ஊழல்

தி.மு.க. ஆட்சியில் வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்தில் மட்டும் 5 வருடங்களில் சுமார் 4 ஆயிரம் கோடி மதிப்புள்ள கற்கள் திருடுபோய் உள்ளது. தமிழ்நாட்டில் 108 டாமின் கிரானைட் சுரங்கங்கள் உள்ளது. பெரும்பாலான கிரானைட் சுரங்கங்களில் இதேபோல் தி.மு.க. துணையுடன் டாமின் சுரங்க கொள்ளை நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள டாமின் கிரானைட் சுரங்கங்களில் இருந்து சுமார் 3 லட்சம் கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் கொள்ளை போய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அனைத்து டாமின் கிரானைட் சுரங்கங்களில் உடனடியாக அளவு எடுத்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலை மிஞ்சும் வகையில் இந்த டாமின் ஊழல் வெளிச்சத்துக்கு வரும்.

வீடியோ: பாகம் 1, தினபூமி நாளிதழ் கண்டுபிடித்த ரூ.3 லட்சம் கோடி டாமின் கிரானைட் சுரங்க ஊழல்

வீடியோ: பாகம் 2, தினபூமி நாளிதழ் கண்டுபிடித்த ரூ.3 லட்சம் கோடி டாமின் கிரானைட் சுரங்க ஊழல்

வேஸ்ட் கற்கள் வைத்துக்கொள்வதாக கடிதம், கலெக்டர் கூறிய இடத்திலிருந்து
தினமும் கற்கள் கடத்தல்

கீழையூர் கீழவளவில் பஞ்சபாண்டவர் மலைக்கு அருகே பி.ஆர்.பி. நிறுவனம் 3 லட்சத்து 20 ஆயிரம் கியூபிக் மீட்டர் மற்றும் 50 ஆயிரம் கியூபிக் மீட்டர் கற்களை விதிமுறைகளை மீறி ஸ்டாக் வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்து சுரங்க அதிபர்களை கைது செய்வதற்கு பதில், அங்கு வைக்கப்பட்டுள்ள கற்கள் அனைத்தும் விற்பனைக்கு தகுதி இல்லாத வேஸ்ட் கற்கள் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தனது பதில் கடிதத்தில் கூறியிருந்தார் அல்லவா? அந்த இடத்தில் இருந்து தினமும் ஏராளமான கற்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அதிகபட்சமாக 5 மணி நேரத்தில் 30 கிரானைட் கற்கள் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து விற்பனைக்கு அனுப்பப்பட்டது. இந்த லாரிகள் மேலூர் செல்லும் சாலையை நோக்கி செல்கிறது. விற்பனைக்கு தகுதியற்ற வேஸ்ட் கற்கள்தான் இங்கு வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவரால் நற்சான்றிதழ் கொடுக்கப்பட்ட இடத்தில் இருந்து ஏராளமான கிரானைட் கற்கள் லாரிகளில் வெளியே கடத்தப்பட்டு மேலூரை நோக்கிச் செல்லும் சாலையில் செல்லும் ஏராளமான வீடியோ காட்சிகளும் தினபூமி வசம் உள்ளது.

வேஸ்ட் கற்களைத்தான் அனுப்பினோம் என்றால், அந்த கற்களை ஏற்றிய லாரிகள் ஏன் மேலூர் செல்லும் சாலையை நோக்கி செல்ல வேண்டும்? மேலும் இந்த இடத்திற்கு ஏராளமான கற்கள் தினமும் உள்ளே வருகின்றன. அதேபோல் ஏராளமான கற்கள் தினமும் விற்பனைக்கு வெளியே சென்றுகொண்டுதான் இருக்கிறது. மொத்தத்தில் எப்போதும் இந்த இடத்தில் உள்ள கற்களின் எண்ணிக்கை மட்டும் குறையவே குறையாது. நல்ல கற்களை வேஸ்ட் கற்கள் என்று கூறியதில் இருந்து ஊழலின் மொத்த உருவமாக மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்பட்டுள்ளார் என்பது தெளிவாகி உள்ளது.

கொள்ளையடிப்பவர்களுக்கு துணைபோகும் டாமின் சேர்மன்

டாமின் கிரானைட் சுரங்கங்களின் நீளம், அகலம், ஆழம் ஆகிய விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டே கேள்விகள் கேட்கப்பட்டது. டாமின் நிறுவனம் அதை தர மறுத்துவிட்டது. தமிழ்நாடு தகவல் ஆணையமும் இதற்கு உடந்தை.

டாமின் சுரங்கங்களில் முறைகேடு நடக்கிறது ரெக்கவரி குறைந்து காணப்படுகிறது. ரெய்சிங் ஏஜெண்ட் / ரெய்சிங் கம் சேல் ஏஜெண்டுகள் டாமினில் உள்ள ஊழல் அதிகாரிகளின் துணையுடன் டாமின் சுரங்கங்களில் இருந்து கடத்தி கள்ளத்தனமாக வெளிமார்க்கெட்டுகளில் விற்கிறார்கள். தினந்தோறும் டாமின் சுரங்கத்திற்கு சென்று அன்றாட நடவடிக்கைகளை ஒரு வாரம் கநீனித்து வந்தால் பெரிய அளவிலான முறைகேட்டினை கண்டுபிடிக்கலாம் என டாமின் சேர்மனுக்கு 10.8.2009 ஆம் தேதி ரமேஷ்குமார் கடிதம் அனுப்பினார். ஆனால் டாமின் சேர்மன் இதற்கு எந்த பதிலும் அனுப்பவில்லை.

மேலூர் தாலுகா கீழையூர் ரெங்கசாமிபுரம் கிராமத்தில் 398/3 சர்வே எண்ணில் டாமின் நிறுவனம் குத்தகைக்கு உரிமம் பெற்று உள்ளது. இந்த இடத்தில் டாமின் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் ரூ. 170 கோடி மதிப்புள்ள 42 ஆயிரம் கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களை சிந்து கிரானைட் நிறுவனம் சட்டவிரோதமாக கடத்தி கொள்ளையடித்துவிட்டதாகவும், இந்த கொள்ளைக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி கீழையூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் எம்.முத்தையா புகைப்பட ஆதாரத்துடன் 27.10.2010 தேதியன்று புகார் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்த கடிதத்திற்கு இதுவரை எந்த பதிலையும் டாமின் சேர்மன் அனுப்பவில்லை. இந்த கடிதத்தின் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று டாமின் சேர்மனின் பொதுத்தகவல் அலுவலர் அவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டது. டாமின் நிர்வாகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை காலில் போட்டு மிதித்துவிட்டது. 60 நாட்களுக்கு மேலாகியும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை ஏன் தெரிவிக்கவில்லை? இதிலிருந்து டாமின் சேர்மன் கிரானைட் திருடர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை. எ

ந்த பதிலையும் கூறவும் விரும்பவில்லை என்பது தெரிகிறது. இவர் ஏன் கிரானைட் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? உடனடியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள டாமின் கிரானைட் சுரங்கங்களில் சோதனை நடத்தி, சுரங்கங்களை அளவெடுத்து காணாமல் போன கற்களை கண்டுபிடித்தும் ரூ. 3 லட்சம் கோடி கொள்ளையடித்த கொள்ளையர்களை கைது செய்து பணத்தை மீட்காவிட்டால் இவர்களுக்கும் கிரானைட் கொள்ளையர்களுக்கும் பங்கு இருக்கும் என்றுதான் அர்த்தம்.

தமிழக அரசின் நிறுவனமான டாமின் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் சுரங்க கொள்ளையை தடுக்க உடனடியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள டாமின் சுரங்கங்களை மூடவேண்டும். அல்லது தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் கிரானைட் சுரங்கங்களை மூடிவிட்டு எவருக்கும் காண்ட்ராக்ட் கொடுக்காமல் டாமின் நிறுவனமே நேரடியாக கிரானைட் சுரங்கங்களை நடத்தட்டும்.

கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே?

டாமின் சுரங்கங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ள பணம் கிரானைட் கொள்ளையர்கள் சொத்துக்களை குவித்ததற்கும், ஹார்லிக்ஸ் பார்ட்டி வெளிநாடுகளில் தீவு வாங்குவதற்கும் இடைத் தேர்தலில் செலவு செய்ததற்கும் இந்த பணம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுத் தேர்தலிலும் ஸ்பெக்ட்ரமில் அடித்த கொள்ளைப் பணத்துடன் இந்த பணமும் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

டாமினில் இந்த கொள்ளை அடிக்கப்பட்டது எப்படி?

கிரானைட் சுரங்கங்களில் வேஸ்ட் கற்களை அந்தந்த சுரங்கங்களில் உள்ள இடங்களில் குவித்து வைக்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால் டாமின் சுரங்கங்களில் தி.மு.க. கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக ஏழை மக்களுக்கு வேஸ்ட் கற்களை கொடுக்கிறோம் என்ற போர்வையில் பெயருக்கு சிலருக்கு மட்டும் குறைந்த அளவில் கற்களை கொடுத்து விட்டு கற்கள் வேஸ்ட் ஆகி விட்டது என்று கணக்கு காண்பித்து இந்த மாபெரும் கொள்ளை நடக்கிறது. டாமின் சுரங்கங்களில் உண்மையான ரெக்கவரி சுமார் 75 சதவீதமாகும். 25 சதவீதம் கற்கள் மட்டுமே வேஸ்டாகிறது. ஆனால் 20 சதவீதம்தான் ரெக்கவரி என்றும் 80 சதவீதம் கற்கள் வேஸ்ட் ஆகிறது என்று டாமின் சுரங்கங்களில் பொய்க் கணக்கு காண்பித்து கொள்ளையடிக்கப்படுகிறது.

கிரானைட் மாபியாக்கள் கொள்ளையடித்து தி.மு.க.வுக்கு கப்பம் கட்டுகிறார்கள். இதுபோக அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய்கள் ஆகியவற்றையும் இந்த திருட்டு கும்பல் விட்டு வைக்கவில்லை. இவற்றையும் சட்ட விரோதமாக தோண்டி தி.மு.க.வுக்கு கப்பம் கட்டுகிறார்கள். இவற்றை எல்லாம் செய்தியாக வெளியிட்டு தட்டிக் கேட்டால் கிரானைட் கொள்ளையில் வரும் பணம் அடைபட்டு விடுமே என்ற காரணத்தாலும் தான் தினபூமி ஆசிரியரையே பொய் வழக்கில் கைது செய்யும் அளவிற்கு ஹார்லிக்ஸ் பார்ட்டிக்கு பண வெறி பிடித்து விட்டது.

கிரானைட் சுரங்க ஊழல் கருணாநிதிக்கு தொடர்பு

மேலூர் தாலுகா கீழையூர், ரெங்கசாமி புரம் கிராமத்தில் 398/3 சர்வே எண்ணில் டாமின் நிறுவனம் கிரானைட் சுரங்கத்திற்கு அனுமதி பெற்றுள்ளது. இந்த கிரானைட் சுரங்கத்தில் டாமின் நிறுவனம் சுரங்கம் தோண்டாமல், ஆனால் டாமின் அதிகாரிகள், சுரங்கத் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் துணையுடன் சிந்து கிரானைட் நிறுவனம் பட்டப்பகலில் பகிரங்கமாக திருட்டுத் தனமாக டாமின் நிறுவனம் சுரங்கத்திற்கு அனுமதி அளித்த இடத்தில் தோண்டி வருகிறது.

இந்த பகிரங்க கிரானைட் கொள்ளை சம்பந்தமாக வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கீழையூர் கிளை செயலாளர் எம்.முத்தையா என்பவர் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு 2.4.2010, 15.5.2010,14.07.2010, 27.10.2010 ஆகிய தேதிகளில் புகார் கடிதம் அனுப்பி உள்ளார். 13 கண்மாய்களில் சட்டத்திற்கு புறம்பாக அரசு அனுமதி இல்லாமல் கிரானைட் சுரங்கங்கள் தோண்டப்படுவதாக புகைப்பட ஆதாரங்களுடன் முருகேசன் என்பவர் கருணாநிதிக்கு 7.6.2010 ம் தேதி புகார் கடிதம் அனுப்பி உள்ளார்.

சட்டவிரோதமாக கிரானைட் சுரங்கங்களில் இருந்து விதிமுறைகளை மீறி தனியார் இடங்களுக்கு கடத்தப்படுவதாகவும் கற்களை கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாட்டிலைட் புகைப்பட ஆதாரங்களுடன் முதல்வர் கருணாநிதிக்கு 15.9.2010 ம் தேதி ரமேஷ்குமார் புகார் கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்பை விட வேகமாக கிரானைட் கொள்ளையர்கள் கற்களை கொள்ளையடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கிரானைட் திருடர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை கருணாநிதி பாதுகாத்து வருகிறார். இந்த 3 லட்சம் கோடி டாமின் சுரங்க ஊழலில் அவருக்கு பங்கு வருவதால்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

கிரிமினல்களாக மாறிய கருணாநிதி, போலீஸ்

நள்ளிரவு சுமார் 1.20 மணிக்கு திருடர்களை போல வீட்டு காம்பவுண்டு சுவர் ஏறிக் குதித்த போலீசார் வீட்டில் வைத்து தினபூமி ஆசிரியரை கைது செய்தனர். வீட்டில் இருந்த காரையும் திருடர்களை போல் கடத்தி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விட்டனர். ஆசிரியர் காலை 4 மணிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது கைது செய்ததாக பித்தலாட்டமாக போலீசார் எழுதிக் கொண்டனர். கைது ஆணையில் ஆசிரியரிடம் கையெழுத்தை பெற்றுக் கொண்ட பின் கைது செய்த இடத்தையும் நேரத்தையும் மோசடியாக கிரிமினலாக அவர்களாகவே திருத்தி எழுதிக் கொண்டனர்.

இந்த கிரிமினல் வேலைகள் அனைத்தையும் செய்தது கருணாநிதியின் போலீஸ்தான். கடந்த ஆட்சியில் போலீசாரின் நுரையீரல் அழுகி விட்டது என்று கருணாநிதி கூறியிருந்தார். ஆனால் தற்போதைய கருணாநிதி ஆட்சியில் போலீசாரின் அனைத்து அங்கங்களும் அழுகி விட்டது. தினபூமி ஆசிரியரை தீர்த்து கட்ட சதியா? என்பது சம்பந்தமாக ஏற்கனவே தினபூமி நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். தினபூமி ஆசிரியரின் அலுவலகத்திற்கு அத்துமீறி போலீசார் ஜீப்பில் வந்து விட்டு வரவில்லை என்று முழு பொய்யை கூறும் இவர்கள், போலீசாராக இருக்கவே இவர்கள் லாயக்கில்லை.

இவர்கள் ஆசிரியரை தீர்த்துக்கட்டத்தான் வந்தார்களா? மர்மம் நீடிக்கிறது. கிரானைட் சுரங்க ஊழல் செய்தி வெளியிட்டதில் இருந்து தினபூமி ஆசிரியருக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் அச்சுறுத்தல் தொடர்கிறது. மர்ம நபர்களும் பின்தொடர்கின்றனர்.

கருணாநிதிதான் காரணம்

தினபூமி நாளிதழின் ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலுக்கு கிரானைட் கொள்ளையர்களை சுதந்திரமாக உலாவ விட்ட கருணாநிதிதான் காரணம். கிரானைட் கொள்ளை சம்பந்தமாக புகார் கொடுத்தவுடன் கிரானைட் கொள்ளையர்கள் மீது கருணாநிதி நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்து சிறைக்கு அனுப்பி இருக்க வேண்டும். கொள்ளையடிப்பது கிரானைட் கொள்ளையர்கள். அவர்களை கொள்ளையடிக்க விட்டு விட்டு நடவடிக்கையை எடுக்காமல் ஊழல் செய்து பணம் சம்பாதிப்பது தி.மு.க .அரசு. இவர்கள் கொள்ளையடிப்பதற்கு தினபூமி ஆசிரியர் ஏன் சிறைக்கு செல்ல வேண்டும்.

பறிமுதல் செய்ய வேண்டும்

வெள்ளூத்து மலையில் அரசு நிறுவனமான டாமின் நிறுவனத்துக்கு சொந்தமான கிரானைட் சுரங்கத்தில் இருந்து பி.ஆர்.பி. நிறுவனம், பி.ஆர்.பி. நிறுவன லாரிகளில் பி.ஆர்.பி. நிறுவன இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதை வீடியோ ஆதாரங்களுடன் தினபூமி அம்பலப்படுத்தி உள்ளது. பி.ஆர்.பி. நிறுவன இடத்தில் ஸ்டாக் வைத்துள்ள கிரானைட் கற்களை வேஸ்ட் கற்கள் என்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கூறிய இடத்தில் இருந்து ஏராளமான லாரிகளில் விற்பனைக்கு தகுதியான கற்கள் பி.ஆர்.பி. நிறுவன லாரிகளில் கடத்தப்பட்டு மேலூர் சாலையை நோக்கி செல்வதற்கான ஆதாரங்களை தினபூமி வெளியிட்டுள்ளது.

பி.ஆர்.பி. நிறுவனம் ஸ்டாக் வைத்துள்ள சுமார் 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள கற்களும் டாமின் சுரங்கத்தில் இருந்து கொள்ளையடித்து கடத்தி வரப்பட்டவைதான் என்பதை ஆதாரங்களுடன் அம்பலமாகி விட்ட நிலையில் உடனடியாக டாமின் சுரங்க கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த கொள்ளைக்கு காரணமான பி.ஆர்.பி. நிறுவனத்தின் பழனிச்சாமி உட்பட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்த ஊழலுக்கு காரணமான அனைத்து டாமின் ரெய்ஸிங் ஏஜண்டுகளும் கைது செய்யப்பட வேண்டும். அனைத்து டாமின் சுரங்கங்களிலும் உடனடியாக சோதனை நடத்தி அளவுகள் எடுக்கப்பட வேண்டும்.

டாமின் சுரங்கத்தில் இருந்து பி.ஆர்.பி. நிறுவனம் கடத்தி கீழவளவு, கீழையூரில் தங்களது இடத்தில் ஸ்டாக் வைத்துள்ள ரூபாய் 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சுமார் 5 லட்சம் கியூபிக் மீட்டர் கற்களையும் மற்றும் பி.ஆர்.பி. நிறுவனம் டாமின் சுரங்கத்தில் இருந்து கடத்தி இதர இடங்களில் பி.ஆர்.பி. நிறுவனம் ஸ்டாக் வைத்துள்ள கிரானைட் கற்களையும் பறிமுதல் செய்து விற்பனை செய்யப்பட்டு அந்த பணத்தை அந்த பகுதி மக்களுக்கு தர வேண்டும்.

பி.ஆர்.பி.நிறுவனம் டாமின் சுரங்கத்தில் இருந்து கடத்தியது, வெள்ளூத்து மலை, டாமின் சுரங்கத்தில் இருந்து கடத்தியதாக கூறப்படும் சுமார் 5 ஆயிரம் கோடி மதிப்புள்ள கற்கள் மட்டும் அல்ல, புறாக்கூடு மலையில் இருந்து சுமார் ரூ 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள கற்களும் பொக்கிசமலையில் இருந்து சுமார் ரூ ஆயிரம் கோடி மதிப்புள்ள கற்களும் காணாமல் போய் உள்ளது. இந்த சுரங்கங்களிலும் பி.ஆர்.பி. நிறுவனம்தான் வேலை செய்ததாக பொதுமக்கள் கூறுகிறார்கள். இது பற்றியும் தகுந்த விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்.

டாமின் நிறுவன சுரங்கங்களில் இருந்து பி.ஆர்.பி. நிறுவனம் கடத்திய கற்கள் எவ்வளவு என்பதை கண்டுபிடித்து அபராதத்துடன் வசூல் செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள டாமின் சுரங்கங்கள் மற்றும் பி.ஆர்.பி. நிறுவன சுரங்கங்களின் அளவுகளை எடுத்து முறைகேட்டினை கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த டாமின் சுரங்க கொள்ளைக்கு காரணமான டாமின் ரெய்சிங் ஏஜண்டுகள், சுரங்கத் துறை உதவி இயக்குனர், சுரங்க துறை இயக்குனர், டாமின் இயக்குனர், தொழில்துறை செயலாளர், முன்னாள் தலைமை செயலாளர், மதுரை கலெக்டர் ஆகியோர் கைது செய்யப்பட வேண்டும். இந்த சுரங்க ஊழல் மூலம் கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் பல லட்சம் கோடி பணத்தையும் வெளியே கொண்டு வர வேண்டும்.

ஊழலுக்கு துணைபோன நீதிபதியையும் தண்டிக்க வேண்டும்

கிரானைட் சங்கத்தினர் கொடுத்த பொய் புகாரின் அடிப்படையில் 20.7.2010 இரவு 11 மணிக்கு தினபூமி ஆசிரியர் மற்றும் பத்திரிக்கைகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இரண்டரை மணி நேரத்தில் எந்த விசாரணையும் செய்யாமல் 1.20 மணிக்கு கே.கே.நகரில் உள்ள வீட்டில் வைத்து போலீசார் ஆசிரியரையும், பத்திரிக்கையாளரையும் கைது செய்தனர். ஆசிரியரிடம் எந்த வாக்குமூலமும் வாங்காமல் நீதிபதி முன் ஆஜர் செய்தனர்.

அவசர அவசரமாக அதிகாலையில் நீதிபதியின் வீட்டுக்கு அழைத்து சென்று போலீசார் ஆஜர் செய்தது ஏன்? காலையில் கோர்ட் திறந்ததும் ஆஜர் செய்ய வேண்டியதுதானே? எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறோம் என்று ஆசிரியர் நீதிபதியிடம் கேட்டும் காரணம் எதையும் அவர் கூறவில்லை. போலீசாரிடம் ஆசிரியர் வாக்குமூலம் கொடுத்தாரா என்றும் நீதிபதி கேட்கவில்லை.

இரண்டரை மணி நேரத்தில் போலீசார் என்ன விசாரணை நடத்தியிருக்க முடியும். ஆசிரியரிடம் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறோம், வழக்கு என்ன என்ற விவரத்தை கூட கூறாமல் 15 நாள் காவலில் அடைக்க உத்தரவிட வேண்டிய அவசியம் என்ன? எனவே டாமின் கிரானைட் சுரங்க ஊழலுக்கு துணை போன இந்த நீதிபதி மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.

கருணாநிதி நடவடிக்கைஎடுக்க மாட்டார்

டாமின் சுரங்க ஊழல் பணம் கருணாநிதிக்கும், அவரது குடும்பத்திற்கும் செல்வதால் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார். அதற்கு பதில் தினபூமி ஆசிரியர் மீது புதிதாக என்ன பொய் வழக்கு போடலாம் என்று கருணாநிதியும் ஹார்லிக்ஸ் பார்ட்டியும் யோசிக்க ஆரம்பித்து இருப்பார்கள்.

அரசு சொத்து கொள்ளை சி.ஏ.ஜியிடம் புகார்

தமிழ்நாட்டில் அரசு நிறுவனமான டாமின் கிரானைட் சுரங்கங்களில் ரூபாய் 3 லட்சம் கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் கொள்ளையடிக்கப்பட்டு கடத்தப்படுவது சம்பந்தமாக கண்ட்ரோலர் அண்டு ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா(சி.ஏ.ஜி) அவர்களிடம் ஆதாரங்களுடன் புகார் செய்யப்பட்டுள்ளது. சி.ஏ.ஜி. இந்த டாமின் சுரங்க திருட்டினை ஆய்வு செய்யும் போது இந்த மெகா ஊழல் வெளிவரும். அப்படி வெளியே வரும் போது இந்த டாமின் ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஸ்பெக்ட்ரம் ராசாவுக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும். கிரானைட் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காத கருணாநிதியும் இதில் இருந்து தப்ப முடியாது.

வெள்ளூத்து மலை டாமின் சுரங்கத்தில் இருந்து மட்டும் தினமும் சராசரியாக 55 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களை திருடி பி.ஆர்.பி. நிறுவனம் பி.ஆர்.பி. நிறுவன லாரிகளில் பி.ஆர்.பி. நிறுவன இடத்திற்கு கடத்தி செல்லும் வீடியோ காட்சிகள் பல மாதங்கள் எடுக்கப்பட்டன. இந்த வீடியோவில் பி.ஆர்.பி . நிறுவனம் பல ஆயிரக்கணக்கான கியூபிக் மீட்டர் கற்களை(5 இலக்க எண்களில்) கடத்தும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ காட்சிகளின் பதிவுகள் மெகாபைட், ஜிகாபைட் அளவில் அல்ல. நினைத்து பார்க்க முடியாத டெராபைட் கணக்கில் உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் இணைய தளத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

டாமின் சுரங்கத்தில் இருந்து பி.ஆர்.பி. நிறுவன இடத்துக்கு கிரானைட் கற்கள் கடத்தல் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலம்

டாமின் கிரானைட் சுரங்கத்தில் இருந்து பி.ஆர்.பி.நிறுவன லாரிகள் கிரானைட் கற்களை ஏற்றுவது முதல் பி.ஆர்.பி. நிறுவன இடத்திற்கு கடத்திக் கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டு தினபூமி வசம் உள்ளது.

வேஸ்ட் கற்கள் வைத்துக் கொள்வதா ககடிதம் கொடுத்துள்ள கலெக்டர்
கூறிய இடத்தில் இருந்து தினமும் கற்கள் கடத்தல்

விதிமுறைகளுக்கு மாறாக 3 லட்சத்து 70 ஆயிரம் கியூபிக் மீட்டர் கிரானைட் கற்கள் சுரங்கங்களில் இருந்து கடத்தப்பட்டுள்ளதாக கலெக்டரிடம் புகார் கூறப்பட்டது. ஆனால் இந்த இடங்களில் விற்பனைக்கு தகுதியில்லாத வேஸ்ட் கற்கள்தான் இங்கு ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கூறினார். இப்படியிருக்க இந்த இடத்தில் இருந்து தினமும் ஏராளமான கற்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

உதாரணமாக, 5 மணி நேரத்தில் 30 பெரிய சைஸ் கிரானைட் கற்கள் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ள இந்த இடத்தில் இருந்து வெளியே விற்பனைக்கு அனுப்பப்பட்டது. இந்த லாரிகள் மேலூர் செல்லும் சாலையை நோக்கி செல்கிறது. இதற்கான வீடியோ ஆதாரங்கள் தினபூமி வசம் உள்ளது. வேஸ்ட் கற்கள் என்று கூறப்பட்ட இடத்தில் இருந்து எப்படி விற்பனைக்கு தகுதியான நல்ல கற்கள் எப்படி அனுப்பப்பட்டது. இதில் இருந்து மதுரை மாவட்ட கலெக்டர் கூறுவது பொய் என்பதும் அங்குள்ள அனைத்து கற்களும் விற்பனைக்கு தகுதியான நல்ல கற்கள்தான் என்பதும் வீடியோ ஆதாரத்துடன் அம்பலமாகி உள்ளது.

டாமினில் இருந்து கடத்தப்பட்ட கற்களில் டாமின் முத்திரை இல்லை

டாமின் நிறுவனத்தில் இருந்து கொள்ளையடித்து பி.ஆர்.பி. நிறுவன இடத்திற்கு கடத்தி செல்லும் கற்களில் டாமின் முத்திரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. டாமின் சுரங்கத்தில் கற்களை வெட்டி எடுத்தவுடன் முத்திரையிட வேண்டும் என்பது டாமின் விதியாகும். ஏற்கனவே இது போல டாமின் சுரங்கத்தில் இருந்து முத்திரை இல்லாமல் பல கற்கள் அனுப்பப்பட்டதை சி.ஏ.ஜி. கண்டித்துள்ளார்.

டாமின் கிரானைட் சுரங்க ஊழலை அம்பலப்படுத்த இந்தியாவிலேயே இல்லாத
நவீன தொழில்நுட்பம்

டாமின் கிரானைட் சுரங்கத்தில் நடைபெற்ற கிரானைட் சுரங்க ஊழலை அம்பலப்படுத்த தினபூமி இந்தியாவிலேயே இல்லாது ஒரு புதிய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டாமின் சுரங்கத்தில் இருந்து பி.ஆர்.பி. நிறுவன இடத்திற்கு கிரானைட் கற்களை கடத்தப்படுவது வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் பல மாதங்களாக மிகப்பெரிய அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டாமின் கிரானைட் சுரங்க ஊழல் – கருணாநிதிக்கு தொடர்பு

மேலூர் தாலுகா கீழையூர், ரெங்கசாமிபுரம் கிராமத்தில் 398/3 சர்வே எண்ணில் டாமின் நிறுவனம் கிரானைட் சுரங்கத்திற்கு அனுமதி அளித்த இடத்தில் சிந்து கிரானைட் நிறுவனம் பகிரங்கமாக டாமின் இடத்தில் சுரங்கம் தோண்டி கொள்ளையடித்து வருகிறது. இந்த பகிரங்க கொள்ளை சம்பந்தமாக வீடியோ ஆதாரங்களுடன் கீழையூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் எம்.முத்தையா என்பவர் கருணாநிதிக்கு பல கடிதங்கள் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விதிமுறைகளை மீறி கற்கள் கடத்தப்படுவதாகவும், கற்கள் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எம்.ரமேஷ்குமார் கடிதம் எழுதியும் கருணாநிதி கிரானைட் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே டாமின் கிரானைட் சுரங்க ஊழலில் கருணாநிதிக்கு தொடர்பு உள்ளது.

ஒரு ஆண்டு முழுவதற்கும் 191 கியூபிக் மீட்டர் கற்களுக்கு பெர்மிட் வாங்கிவிட்டு ஆண்டுக்கு 2 லட்சம் கியூபிக் மீட்டர் கற்கள் திருட்டு

வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்தில் இருந்து ஒரு வருடகாலத்திற்கு 191 கியூபிக் மீட்டருக்கு மட்டும்தான் சுரங்கத்துறை பெர்மிட் வழங்கியுள்ளது. ஆனால் இந்த டாமின் சுரங்கத்தில் இருந்துமட்டும் சராசரியாக தினமும் 551 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்கள் பி.ஆர்.பி. நிறுவனம் திருடி பி.ஆர்.பி. நிறுவன லாரிகளில் ஏற்றி தங்களது இடத்திற்கு கடத்தி செல்லும் வீடியோ காட்சிகள் தினபூமி வசம் உள்ளது. ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கியூபிக் மீட்டர் கற்கள் பி.ஆர்.பி. நிறுவனம் டாமின் வெள்ளூத்துமலை சுரங்கத்தில் இருந்துமட்டும் திருடி கடத்தி வருகிறது.

டாமின் சுரங்கத்தில் இருந்து பி.ஆர்.பி. நிறுவன இடத்திற்கு கிரானைட் கற்கள் கடத்தல் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலம்

டாமின் கிரானைட் சுரங்கத்தில் இருந்து பி.ஆர்.பி. நிறுவன லாரிகள் கிரானைட் கற்களை ஏற்றுவது முதல் பி.ஆர்.பி. நிறுவன லாரிகளில் கிரானைட் கற்களை ஏற்றி பி.ஆர்.பி. நிறுவன இடத்திற்கு கடத்திக்கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டு தினபூமி வசம் உள்ளது.

ரூ.2000 கோடியையும் மக்களுக்கு பிரித்து தரவேண்டும்

கீழையூர், கீழவளவு பகுதியில் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களே உள்ளனர். கோடீஸ்வரர்கள் யாரும் இல்லை. இந்த பகுதியில் கிரானைட் கற்கள் எடுப்பதால் இந்த அப்பாவி மக்களிடமிருந்து சொற்ப விலைக்கு நிலங்களும் பிடுங்கப்பட்டுவிட்டன. இந்த பகுதியில் உள்ள டாமின் சுரங்கங்களில் பல ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள கற்களும் பெர்மிட் இல்லாமல் கடத்தப்பட்டு சிலர் மட்டும் கோடீஸ்வரர்களாக மாறிவிட்டனர்.

இந்த பகுதி மக்களை முன்னேறவிடாமல் ஏழைகளாகவே வைத்துள்ளனர். இந்த பகுதி மக்களுக்கு கிரானைட் தோண்ட அனுமதி கொடுத்திருந்தால் அவர்களும் கோடீஸ்வரர்கள் ஆகி இருப்பார்கள் அல்லவா? டாமின் சுரங்கத்தில் இருந்து பி.ஆர்.பி. நிறுவனம் கொள்ளையடித்து பஞ்சபாண்டவர் மலைக்கு கீழ் குவித்து வைத்திருக்கும் ரூ. 2000 கோடி மதிப்புள்ள கற்களை பறிமுதல் செய்து இதிலிருந்து வரும் ரூ. 2000 கோடி பணத்தை கீழையூர் கீழவளவு மற்றும் அருகில் உள்ள கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு பிரித்து தரவேண்டும். இங்கு வசிக்கும் மக்கள் அனைவருக்கும் வீடுகட்டித்தருவது போன்ற அனைத்து நல்ல திட்டங்களை செயல்படுத்தலாம்.


கருத்துகள் இல்லை: