நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
1930களில், சவூதி அரேபிய அரசாங்கம், தன் நாட்டில் இருந்த தர்காக்களை ஒழித்து கட்டியது. அதற்கு அவர்கள் கூறிய காரணம், தர்காக்கள் என்பவை இஸ்லாத்திற்கு எதிரானவை என்பதாகும்.
தர்காக்கள் தேவையா என்பது குறித்த சர்ச்சை தொடர்ந்து முஸ்லிம்களிடையே அதிகரித்து வரும் சூழ்நிலையில், ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தி பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.
முபாரக்கின் வெளியேற்றத்திற்கு பிறகு, எகிப்தில், தர்காக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்ற செய்தி தான் அது.
சில தினங்களுக்கு முன்பு (April 3), கல்யுப் நகரில் உள்ள சிதி அப்துல் ரஹ்மான் சமாதியை இடிக்கும் முயற்சியில் ஒரு குழு ஈடுபட முயன்றிருக்கின்றது. அவர்களது முயற்சி அந்த பகுதி மக்களால் முறியடிக்கப்படாலும், அந்த சமாதி குறிப்பிடத்தக்க சேதமடைந்திருக்கின்றது
"தர்காக்கள் ஹராமென்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இப்படி நடந்து கொள்வது தான் ஹராம் என்று அவர்களுக்கு புரியவில்லை" என்று கல்யுப் நகரவாசியான ஹுசைன் அஹமத் கூறுகின்றார்.
முபாரக் வெளியேறியதிலிருந்து இது போன்ற செயல்களும் அதிகரித்து விட்டதாக குறிப்பிடும் சூபி(??) அறிஞர் சைய்த் டார்விஷ் மேலும் குறிப்பிடுகையில் "முன்னரெல்லாம் இவர்களை காண முடியாது. ஆனால், இன்றோ, இவர்கள் அதிகளவில் இருக்கின்றனர்" என்கின்றார்.
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இமாமான அப்துல் ஹே, இது குறித்து பேசும் போது, "(தர்காக்களை அகற்ற) அவர்கள் கையாண்ட முறைகள் தவறுதான். புத்தகங்களை தாங்களாக படித்து ஒரு முடிவுக்கு வருகின்றனர். இது தவறான பாதைக்கு வழி வகுக்கும். அவர்கள் கூறுகின்றனர், 'போதும், இறைவனின் சட்டத்தை நாங்களே நடைமுறை படுத்துகின்றோம்' என்று"
அவர் மேலும் கூறுகையில், "நிச்சயமாக சட்டத்தை கையிலெடுப்பது தவறுதான். ஆனால் இவை மிகைப்படுத்தபடுகின்றன. கல்யுப் நகரத்தில் மட்டும் சுமார் எட்டு தர்காக்கள் கடந்த இரு ஆண்டுகளில் அரசாங்கத்தின் உதவியுடன் அகற்றப்பட்டிருக்கின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும், இந்த நகரத்தில் மேலும் ஐந்து தர்காக்களை அமைதியான முறையில் மக்கள் அகற்றி இருக்கின்றனர். தற்போது சட்ட ஒழுங்கு பிரச்சனை இருப்பதால், மக்கள், தாங்களாக சட்டத்தை கையிலெடுத்து கொள்கின்றனர்".
பாகிஸ்தானில் நடைபெறும் தர்காக்களுக்கு எதிரான செயல்களை போலவே எகிப்திலும் நடைபெறுவதாக ராய்டர்ஸ் தெரிவிக்கின்றது. கடந்த ஞாயிற்றுகிழமையன்று எகிப்தின் மற்றொரு நகரமான டாலாவில் ஒரு தர்காவுக்கு தீ வைக்கப்பட்டது.
இதற்கெல்லாம் காரணம் சலபி(??) குழுக்கள் தான் என்று எகிப்திய ஊடகங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. நிலையில்லாத அரசாங்கம் இருக்கும் நிலையில் இது போன்ற செயல்கள் அதிகரித்திருப்பது எகிப்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
என்னதான் தர்காக்கள் இஸ்லாத்திற்கு எதிரானவையாக இருந்தாலும் இளைஞர்கள் இப்படி சட்டத்தை தாங்களாக செயல்படுத்த நினைப்பது சரியற்ற செயலாகவே எனக்கு தோன்றுகின்றது. பொறுமையை காத்து மக்களிடையே தவ்ஹீத் (ஓரிறை கொள்கை) பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களின் துணையுடனே தர்காக்களை ஒழிப்பது தான் சரியான அணுகுமுறையாக தெரிகின்றது.
தர்காக்கள் குறித்து நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது,
1. அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும்போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்கள்’ (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி, முஸ்லிம்)
2. ''எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத்.)
தன்னுடைய கப்ரை கூட விழா நடக்கும் இடமாக ஆக்க வேண்டாமென்று உத்தரவிட்டிருக்கின்றார்கள் நாயகம் (ஸல்). அப்படியிருக்க எப்படி சிலர் கந்தூரி விழா கொண்டாடுகின்றனர்?
3. கப்ருகள் மீது நீங்கள் உட்காராதீர்கள். அதனை நோக்கித் தொழாதீர்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, "அபீமிர்சத்" என்ற நபித்தோழர் அறிவிக்கின்றார். (ஆதாரம் : முஸ்லிம் - முதல்பாகம்)
4. 'நீ எனது கப்ருக்கு அருகில் நடந்து சென்றால் அதற்கு சஜ்தா செய்வாயா? என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். "அவ்வாறு நான் செய்ய மாட்டேன்" என நான் பதில் கூறினேன். அதற்கு அவர்கள் ஆம்! கப்ருக்கு சஜ்தா செய்யாதீர்கள் என்றார்கள். (ஆதாரம்: அபூதாவூத், அறிவிப்பவர் : கைஸிம்னு சயீத் ரளியல்லாஹு அன்ஹு, பக்கம் : 298 பாகம் 1)
5. நாங்கள் புலாலா என்ற நபித்தோழரோடு இத்தாலியில் இருந்தோம். அங்கே எங்கள் தோழர் ஒருவர் இறந்துவிட்டார். (அவரை நாங்கள் அடக்கம் செய்தபின்) கப்ரை தரை மட்டத்திற்கு சமப்படுத்தும்படி புலாலா அவர்களுக்கு உத்தர விட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பின்னர்,"கப்ரை தரைக்கு சமமாக ஆக்கும்படி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிட்டதை நான் செவியுற்றிருக்கிறேன்" என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம், முதல் பாகம் 312)
6. "நபி (ஸல்) அவர்கள் கப்ருகளைப் பூசுவதையும், அதன் மீது உட்காருவதையும், அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்" (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 1610)
இறைவா, தர்கா என்னும் வழிகேட்டில் சிக்கி, அறியாமை என்னும் இருளில் மூழ்கி இருக்கும் மக்களுக்கு நேர்வழி காட்டுவாயாக...ஆமீன்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
ஆக்கம் சகோ ஆஷிக் அஹமத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக