வருங்காலத் தூண்கள், எதிர்கால இந்தியா என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், நம் குழந்தைகள் வாழ, ஒரு ஆரோக்கியமான சமூக சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தால், ஆக., 15 அர்த்த ராத்திரியில் அறிவிக்கப்பட்ட சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும்தான் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.
உணவு, உடை, கல்வி அனைத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே இருக்கும் பெண்கள் இந்த தலைமுறையில்தான் ஓரளவு கல்விக் கூடங்கள் பக்கம் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் மட்டுமே, கிடைத்தது பெண் கல்வி; ஒழிந்தது ஆணாதிக்கம் என்று சந்தோசப்படும் சூழல் வாய்க்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. பள்ளிகளில் குழந்தைகள் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சீருடை அணிவது நடைமுறையில் உள்ளது. ஆனால், சீருடையின் அமைப்பு பாதுகாப்பானதா என்பது விவாதித்துக்கு உள்ளாகி இருக்கிறது.அரசு பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன்வரை, தாவணி சீருடையாக இருந்தது. பாரம்பரிய உடை என்பதைத் தாண்டி, பாதுகாப்பு, சவுகரியங்களோடு ஒப்பிடுகையில் மேம்பட்டு இருந்த சுடிதார் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. தனியார் பள்ளிகள், தனித்தன்மை என்ற பெயரில் விதவிதமான சீருடைகளை நடைமுறைப்படுத்தின. "பளிச்'சிடும் தோற்றம், "கான்வென்ட்' தோரணை என பெற்றோர்களும் அந்த சீருடைகளுக்கு வரவேற்பளிக்கத்தான் செய்தனர். ஆனால், சமீபகாலத்திய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வேறு எங்கோ தப்பு நடக்கிறது என்ற கோணத்தில் சிந்திக்க வைத்திருக்கின்றன.
பாடப்புத்தகம் தவிர, மென்திறன், தொடர்பியல் திறன் என்று தனிமனித மேம்பாடு பற்றிச் சிந்திக்கும் பள்ளிகள், சீருடை விஷயத்தில் அதன் நிறத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. வளர்இளம்பருவ மாணவிகள் அணியும் சீருடை, நிச்சயம் பாதுகாப்பானதாக இல்லை; மற்றவர்களின் கவனத்தை உறுத்தும் வகையில் இருக்கிறது. கோவையில் பள்ளிச்சிறுமி ஒருத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு; சிறுமியும், அவரது சகோதரனும் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்துக்குப் பிறகு, தாமதமாக விழித்துக் கொண்ட பெற்றோரும், கல்வியாளர்களும், சீருடையின் அளவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்துக்கு, தூண்டுதலாக அமைகிறது என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். வளர்இளம் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களுக்கு ஏற்றவாறு, அவர்களின் சீருடை இல்லை. முழங்கால் வரையிலும், சில சமயங்களில் முழங்காலுக்கு மேலேயும் என்ற அளவில்தான் பாவாடைகள் இருக்கின்றன.புத்தகச் சுமையை, முதுகில் ஏற்றிக் கொண்டு செல்லும் பெண் குழந்தைகளின் பாடு சொல்லவே வேண்டாம். புத்தகப்பையை இரு தோள்கள் வழியாகச் செல்லும் கச்சையின் உதவியோடு சுமக்கின்றனர்; பின்னோக்கி இழுக்கும்சுமை, அவர்களின் முன்புற உடையை உடலோடு ஒட்டி இருக்கும்படிச் செய்கிறது. பெண்குழந்தைகள் உடையைச் சரி செய்யும் மனோபாவத்தில் இருப்பதில்லை. மாறாக, வீட்டுப்பாடம், தேர்வு, பள்ளி செல்லும் அவசரம், வீடு திரும்பும் அவசரம் என்பதில்தான் கவனம் இருக்கும்.
முன்னங்காலுக்கு மேலேயும், முற்புறத்தில் பலர் கண்களை உறுத்தும் வகையிலும் அணியும் "பினோபார்', பாவாடை சட்டை போன்ற சீருடை வகைகளும் கண்களை உறுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சில சமூகவிரோதச் செயல்களுக்கு, இவ்வகையிலான தூண்டுதல்களே காரணம் என்ற புகாரும் உள்ளது.சீருடை அவசியம் என்ற போதும், அவற்றின் அளவும், அமைப்பும் சரியாக இருக்கிறதா என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பள்ளிச்சிறுமி படுகொலை செய்யப்பட்டபோது, சூட்டோடு சூடாக விவாதிக்கப்பட்ட சீருடை விஷயம், வழக்கம் போல் மறக்கப்பட்டு விட்டது.அடுத்த கல்வியாண்டு விரைவில் துவங்க உள்ள நிலையில், இதுகுறித்த முடிவு எட்டப்பட வேண்டும். சீருடை தொடர்பாக சிலரிடம் பேசினோம்.
அதிலிருந்து...
மனோத்தத்துவ நிபுணர் பொன்னி கூறியதாவது:தற்போதைய பெரிய பிரச்னைகளில் ஒன்று குழந்தைகளின் பாதுகாப்பு. குழந்தைகள் அதிக அளவில் கொல்லப்படுதல், பாலியல் கொடுமைகள் என, பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒழுக்கம் என்பது குழந்தைகள் மீதான பெற்றோர்களின் வளர்ப்பு முறையைத்தான் குறிக்கிறது. பெற்றோர்களே மாடர்ன் கலாசாரத்துக்கு மாறி வருகின்றனர். மாடர்ன் ஆடைகளை அணிவதும், உணவு பழக்கங்களை மாற்றுவதுமாக கலாசாரம் மாறி வருகிறது. இதன் அடிப்படை எங்கே என்று தேடினால், மற்ற நாடுகளிலிருந்து நாம் கற்றுக் கொண்டது தான். கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள் பல இருப்பினும், நமக்கு ஒத்துவராத விஷயங்களை மட்டும் காரணமே இல்லாமல் கற்றுக் கொள்கிறோம். நல்ல பழக்கங்கள் என்பது பெற்றோர்களிடம் இருந்து கற்க வேண்டியது. பெற்றோர்கள் முதலில் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒழுக்கங்களை நாம் கற்று கொள்ளும் மற்றொரு இடம் பள்ளி. அடிப்படை கலாசாரங்களும், பண்பாடுகளும் கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிகளில் கூட ஒழுக்க விதிமுறைகள், தனிமனித பண்புகள், வாழ்வியல் நெறிமுறைகள் பற்றிக் கற்று கொடுக்க நேரம் இல்லை என்பது, இன்னும் பரிதாபமான விஷயம்.குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. "டிவி' மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தமும், தேவை இல்லாத ஊடுருவலும் அதிகம். அவற்றில் வரும் காட்சிகளும், முரண்பாடான கருத்துகளும் குழந்தைகளின் மனதில் அவர்களை அறியாமலே பதிவாகிறது. அவற்றைத் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, பொன்னி கூறினார்.
சர்வஜன பள்ளி தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ""இன்டர்நெட், சினிமா, "டிவி' நிகழ்ச்சிகளின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சமூகம், குழந்தைகளின் மீது தவறாகத் திணிக்கிறது. இன்னும் சொல்வதானால், பல பெற்றோர்கள் அத்தகைய சீருடைகளை விரும்புகின்றனர். தாய்மார்கள், குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள், நடத்தை முறைகளைக் கற்றுத்தர வேண்டும்,'' என்றார்.
அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் சுகுணா கூறியதாவது:பெற்றோர் சம்மதத்தோடு தான் சீருடைகளை குழந்தைகள் அணிகின்றனர். இதற்கு காரணம் பள்ளி நிர்வாகமானாலும், இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. தங்களது குழந்தைகள் தவறாக சித்தரிக்கப்படுவதை, கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். அரசால், மெட்ரிக் பள்ளிகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்துவதை அறிந்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சர்வதேச பள்ளிகள், சி.பி.எஸ்.சி., பள்ளிகளில் சேர்க்கின்றனர்; அது தவறான கருத்தாகும். அரசு பள்ளிகளில் மட்டும் சீருடையாக சுடிதார்கள் இருப்பதை தவிர்த்து, அனைத்து பள்ளிகளிலும் இதனை கொண்டு வர வேண்டும். "பின்னோபார்' சீருடைகளோடு மட்டும் நின்றுவிடாமல், "மினிபார்' சீருடைகளும் வந்துவிட்டன. அது இன்னுமொரு கொடுமையான விஷயம். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் தான் பாதுகாப்பு அதிகம். அரசு பள்ளிகள் அதனை விளம்பரப்படுத்துவது இல்லை; ஆனால் தனியார் பள்ளிகள் செய்கின்றன. இத்தனை பிரச்னைக்கும் காரணம் பள்ளி நிர்வாகிகள் மட்டும்தான் என்று குறை கூற முடியாது. பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் அரசு, இதில் கவனம் செலுத்தி சீருடைகளை மாற்றி அமைக்க முடிவெடுக்கலாம். நம்முடைய கலாசார உடைகள், சீருடைகளாக வரலாம். அனைவரும் சுடிதார் மற்றும் பல விதமான நாகரீகமான உடை அணிவதன் மூலம், பல பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம்.இவ்வாறு, சுகுணா கூறினார்.
பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி முதல்வர் க்ரிஷ் கூறுகையில், ""ஆசிரியப்பணி சேவையாக இல்லாமல், தொழிலாக மாறிவிட்டது. வாழ்வியல் நெறிமுறைகளைக் கற்றுத்தருவதில்லை. "டிவி', இன்டர்நெட் போன்ற ஊடகங்களின் தாக்கத்தை, குழந்தைகள் அப்படியே பிரதிபலிக்கின்றனர். ஆண், பெண் இருபாலினத்துக்கும், சகபாலினத்தின் மீது பரஸ்பர மரியாதை இல்லை. வெளிநாட்டு கலாச்சார மோகம், பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான நல்லவை இருக்கின்றன. ஆனால், நமது சூழலுக்கு ஒத்துவராத உடை உள்ளிட்ட தேவையற்றவைகளை மட்டுமே பின்பற்றுகிறோம்,'' என்றார்.
ஸ்டேன்ஸ் பள்ளி உதவித் தலைமையாசிரியர் கிருஷ்ணன் கூறுகையில், ""பள்ளிச் சீருடைகளை மட்டும் குறை சொல்லிவிட முடியாது. அதற்கேற்ற உள்ளாடைகளை அணிய, உடற்பயிற்சி ஆசிரியர்கள் வலியுறுத்திக் கொண்டே இருப்பர். சீருடைகள் மட்டுமே குற்றச்சம்பவங்களுக்கு காரணம் என சொல்ல முடியாது. இருப்பினும், பள்ளிச் சீருடை முறை மாற்றுவது குறித்து, நிர்வாகத்திடம் பேசி முடிவெடுக்கப்படும்,'' என்றார்.
ஜி.டி., பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், "சீருடைகளை இறுக்கமாக அணியாமல் இருக்க வேண்டும். குழந்தைகள் எப்போதும் விளையாட்டுத் தனமாகத்தான் இருக்கும்; அவர்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. சீருடைகளை மாற்றுவதை விட மக்களின் மனதை மாற்ற வேண்டும். கடந்த காலங்களில் இல்லாத குற்றச்சம்பவங்கள் தற்போது பெருகியதற்குக் காரணம், மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம்தான்,' என்றனர்.
சினிமாக்களில் சித்திரிக்கும் கெட்ட விஷயங்கள் தடுக்கப்பட வேண்டும். மேற்கத்திய நாடுகளை கண்மூடித்தனமாக பின்பற்றும் மக்களின் மனப்பாங்கு; தவறாக வழிகாட்டும், "டிவி', சினிமா துறைகள் பற்றி பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள், குற்றம் சாட்டின. துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவனும் மொபைல்போன் வைத்திருப்பது, அந்தரங்க விஷயங்கள் இன்டர்நெட்டில் மிக எளிதாக கிடைக்கும் அவலம் போன்ற பெற்றோரின் பொறுப்புணர்வை கேள்விக்குள்ளாக்கும் விஷயங்களையும் அவர்கள் தெரிவித்தனர். பாடப்புத்தகங்களைச் சொல்லித்தருவது மட்டுமே கடமை என்றில்லாமல், பண்பாட்டுடன் குழந்தைகள் வளர்வதற்கும் கல்வி நிறுவனங்களே பொறுப்பு. கவனச்சிதறல் ஏற்படுத்தாத கட்டுப்பாடான உடைகள் வேண்டும் என்பதால் தான், கல்வி நிறுவனங்கள் உடை விஷயத்தைத் தீர்மானிக்கின்றன. இது வரவேற்கத்தக்க ஒன்று; எனினும், சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சீருடைகளின் அளவுகளை கல்வி நிறுவனங்கள் ஒருமுறை பரிசீலிக்கத்தான் வேண்டும்.
பெற்றோரே முன்னுதாரணம்! பேஷன் என்ற பெயரில் உடைகள் இன்று பெற்றுள்ள வடிவங்கள் பல. அதிலும், இன்றைய இளம் தலைமுறையினர் இதில் கலாச்சாரப் புரட்சியையே நடத்தி வருகின்றனர். இறுக்கிப் பிடிக்கும் மேற்கத்திய கலாசாரத்துடனான சில மாடர்ன் உடைகள் பலரது கண்களையும் உறுத்தவே செய்கின்றன. அதுவும், நமது உணவு மற்றும் புற சூழல்களால் இன்றைய குழந்தைகள் உடலளவில் அதீத வளர்ச்சியுடன் திகழ்கையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் உடை விஷயத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதிலும், இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளே இன்று அதிகம் உள்ள நிலையில் பள்ளிச் சீருடைகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இன்டர்நேஷனல், சி.பி.எஸ்.சி., ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக், அரசு பள்ளிகள் என பல நிர்வாகங்கள் இருந்தாலும் அரசு பள்ளிகள் தவிர மற்றவற்றில் நவநாகரிமான மேற்கத்திய பாணியிலான யூனிபார்ம்கள் (குட்டி ஸ்கர்ட்டுகள், பெல்ட், டை, ஷு) போன்றவற்றில்தான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
நாளை நம் குழந்தைகள் வெளிநாடுகளில் பணியாற்ற படிப்பை விட இவையெல்லாம் தான் தலைமைத் தகுதிகள் என நினைக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.சுடிதார், தாவணி போன்ற கலாசார வகையிலான யூனிபார்ம்கள் அணிவது பலருக்கும் கட்டுப்பெட்டித்தனமாகவே படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, பள்ளிகளை மட்டுமே குறை கூறுவதைத் தவிர்த்து பெற்றோர்களும் சற்று விழிப்புடன் இருக்கலாம். எந்த வகையானாலும் யூனிபார்ம் தைக்கும் போதே இறுக்கிப்பிடிப்பதாய் இல்லாமல் சற்று தளர்வாய், குழந்தைகளின் உடல்வாகுக்கேற்ப தைப்பது நலம்.
பெண் பிள்ளைகள் சீக்கிரம் வளர்ந்துவிடும் என்பதைக் குறிக்க, "பெண் பிள்ளைகள் வளர்த்தி பீர்க்கங்காய் வளர்த்தி' என்பார்கள் கிராமப்புறத்தில். எனவே, பெற்றோர்கள் இந்த விஷயத்தில் சிக்கனம் பார்க்காமல் ஆண்டுதோறும் குழந்தைகளின் வளர்ச்சிக்கேற்ப யூனிபார்ம்களை தைப்பது நலம். ஸ்கர்ட் அணிந்தாலும் சில பள்ளிகளில் முட்டிக்கால் வரையிலான ஸ்டாக்கிங்ஸ், லெகின்ஸ் போன்ற தரமான உள்ளாடைகள் அணிய வலியுறுத்துகின்றனர். இம்முறை இல்லாத பள்ளிகளில் பெற்றோர் தாங்களாகவே குழந்தைகளுக்கு இதை அணியப் பழக்கலாம். பின்புறமாக இருதோள்களில் அணியும் பைகளுக்கு பதிலாக ஒருபுறமாக அணியும் பைகளை வாங்கிக் கொடுக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, பெற்றோர்கள் தாங்களாகவே ஒரு உதாரணமாகத் திகழ்வது குழந்தைகளையும் கலாசாரம் பிறழாமல் வாழச் செய்யும்...
Thankhs: Dinamalar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக