OnlinePJ

Thanks for Visiting my Page

சனி, 10 டிசம்பர், 2011

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்!

human rights day

(சர்வதேச மனித உரிமை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-வது தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இத்தருணத்தில் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை நாம் அனைவரும் அவசியம் பெற்றிருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இக்கட்டுரை சமர்ப்பிக்கப்படுகிறது.)

இந்த உலகில் கண்ணியத்துடன் வாழும் உரிமை அனைத்து மனிதர்களுக்கும் உள்ளது. ஆனால், விஞ்ஞானத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கும் இந்த நவீன காலக்கட்டத்திலும் மனித உரிமைகள் வெளிப்படையாகவே மீறப்பட்டு வருகின்றன.

நாகரீகத்தின் பிரதிநிதிகள் என தம்பட்டம் அடிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளும், மேற்காசியாவின் அச்சுறுத்தலாக விளங்கும் இஸ்ரேலும், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை குறித்து வாய் கிழியப்பேசும் இந்தியாவும், கம்யூனிசத்தின் மார்பிடங்களான சீனா மற்றும் ரஷ்யாவும் மனித உரிமை மீறலில் முன்னணியில் உள்ளன.

லாக்கப் கொலை முதல் தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச போர் வரை மனித உரிமை மீறல்கள் சர்வசாதாரணமாக அரங்கேற்றப்பட்டு வரும் காட்சியை நாம் காண்கிறோம்.

குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர்கள் மனித உரிமை மீறலின் நடுங்கச் செய்யும் உதாரணமாகும். இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேர் அநியாயமாக போலி என்கவுண்டரில் திட்டமிட்டு மோடியின் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை சிறப்பு புலனாய்வு குழு விசாரணையின் மூலம் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இவ்வறிக்கையை அங்கீகரித்த குஜராத் உயர்நீதிமன்றம் குற்றவாளிகளான போலீஸ் அதிகாரிகள் மீது கொலைக் குற்றத்திற்கான வழக்கை பதிவுச்செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் நடக்கும் குண்டுவெடிப்புகளில் அப்பாவிகள் கொல்லப்படுவதும், அத்தாக்குதல்களின் பெயரால் நிரபராதிகள் வேட்டையாடப்படுவதும் தெளிவான மனித உரிமை மீறல்களாகும். கடந்த ஜூலை மாதம் மும்பைத்தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஃபயாஸ் உஸ்மானி என்பவர் போலீசாரின் சித்திரவதையில் உயிரிழந்தார்.

கடந்த 11 ஆண்டுகளாக மணிப்பூரில் இரோம் ஷர்மிளா என்ற இரும்பு பெண்மணி ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவருகிறார். 2000-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி இம்பால் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருந்தவர்கள் மீது ஆயுதப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 கொல்லப்பட்டனர். இந்த கோரக் காட்சியை கண்ட அவர் 2 தினங்கள் கழித்து(நவம்பர் 4 2000) உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார்.

ஆர்,எஸ்.எஸ்ஸின் பின்னணியில் இயங்கும் கார்ப்பரேட் உண்ணாவிரத போராளி அன்னா ஹஸாரேவின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் மத்திய அரசு இரோம் ஷர்மிளாவின் மனித உரிமைக்கான முழக்கத்திற்கு இதுவரை பதிலளிக்கவில்லை.

ஜம்மு கஷ்மீரில் பல்வேறு இடங்களில் அடையாளப்படுத்தாத 38 கல்லறைகளில் 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்களை அடக்கம் செய்ததாக மாநில மனித உரிமை கமிஷனின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் அமுலில் இருக்கும் பாதுகாப்பு படையினருக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கும் கறுப்புச் சட்டமான ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறுவதற்கு ராணுவ எதிர்ப்பால் அரசு தயக்கம் காட்டி வருகிறது.

ஜார்கண்ட் பாக்கூர் மாவட்டத்தில் பச்வாடா கிராமத்தில் பழங்குடியினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் மனித உரிமைகளுக்காக பணியாற்றிய கேரளாவை சார்ந்த வல்ஸலா ஜான் 2011,நவம்பர் 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொடூரமாக கொலைச் செய்யப்பட்டார். நிலக்கரி மாஃபியாக்களுக்கு இடையூறாக மாறிய அவருடைய பணிகள் தனது உயிரை தியாகம் செய்யவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது.

பா.ஜ.க ஆளும் மத்தியபிரதேச மாநிலத்தில் தகவல் உரிமை ஆர்வலர் ஷஹ்லா மஸூத் தனது வீட்டிற்கு முன்பு வைத்து அக்கிரமக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதும், குஜராத் நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை வழக்கின் முக்கிய சாட்சியான நதீம் அஹ்மத் மர்மமான மரணமும் நம்மை நடுங்கச் செய்யும் நினைவுகளாகும்.

ஆப்கானிஸ்தானிலும்,ஈராக்கிலும் நிரபராதிகளான அப்பாவி மக்கள் மீது அமெரிக்காவும், கூட்டணி நாடுகளும் நடத்திய மனித குலத்திற்கு எதிரான தாக்குதல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது.

ஃபலஸ்தீனில் மண்ணின் மைந்தர்களை துரத்திவிட்டு அவர்களின் சொந்த பூமியை ஆக்கிரமித்து சட்டவிரோத குடியிருப்புகளை கட்டிவரும் இஸ்ரேல் உலகிலேயே மனித உரிமை மீறல்களில் முன்னணி வகிக்கிறது. காஸ்ஸாவின் மீது அநியாயமாக தடைகளை விதித்து குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான மக்களை துயரத்தில் ஆழ்த்துவதோடு அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க முன்வந்த மனித உரிமை ஆர்வலர்களை படுகொலைச் செய்து கொடூரத்தின் உச்சிக்கு சென்றது இஸ்ரேல்.

குஜராத்திலும்,ஒரிஸ்ஸாவிலும் மதவெறி மூளையில் புகுந்த பாசிச காவி வெறியர்கள் நடத்திய கோரத்தாண்டவம் இந்திய வரலாறு காணாதது.

சோசியலிச பாதையிலிருந்து திசை மாறி மேற்கத்திய பாணியிலான முதலாளித்துவ கொள்கையின் மீதான ஈர்ப்பு இந்தியாவை மனித உரிமை மீறல்களின் பூமியாக மாற்றியுள்ளது. அனைத்தையும் அடக்குமுறையின் மூலம் ஆள நினைக்கும் அரசுகள், மனித உரிமைகளை வேண்டுமென்றே மீறி வருகின்றனர்.

பட்டினியும், விவசாயிகளின் தற்கொலையும் பெருகும் வேளையில் ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய உற்பத்தி பொருட்கள், அதிகாரிகளின் அலட்சியத்தால் அழிவதும், 40 கோடிக்கும் அதிகமான மக்கள் பட்டினியால் வாடும் வேளையில் 180 லட்சம் டன் உணவு தானியங்கள் கெட்டுப்போய் மண்ணில் புதைக்கப்படுவதும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களாகும்.

பொருளாதார முன்னேற்றத்தின் பாய்ச்சலிலும் கோடிக்கணக்கான மக்கள் ஏன் பட்டினியால் வாடுகின்றனர்? என்ற உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு முன்னால் தலைகுனியும் ஆட்சியாளர்களை கொண்ட இந்தியாவில் மனித உரிமை பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது?

மனித உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் மோடி போன்ற க்ரிமினல்கள் ஆட்சிகட்டிலில் அமர்ந்திருப்பது நம்மை வெட்கமடையச் செய்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் சிசுக்கள் கொலைச் செய்யப்படும் இந்தியாவில் வாழ்வதற்கான உரிமை கர்ப்ப அறையில் வைத்தே கொலைச் செய்யப்படுகிறது. ஊட்டச்சத்து குறைவினால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மரணிப்பதும், லட்சக்கணக்கான சிறுவர்கள் பள்ளிக்கூடத்தின் படிகளை தாண்டுவதற்கு வாய்ப்பளிக்க முடியாமல் சட்டம் பல்லிளிக்கும் போது மற்றொரு மூன்றுகோடி சிறுவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

33 சதவீத பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு செய்ய ஆதிக்க, மேல் ஜாதி வர்க்கம் தயக்கம் காட்டி வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் வீதிகளில் இரவு தூக்கத்தை கழிக்கும் வேளையில் கார்ப்பரேட் குத்தகை முதலாளிகளுக்கு அரசு நிலங்களை ஆக்கிரமிக்க ஒத்துழைக்கும் ஆளும் வர்க்கம், வாழ்விடங்களை இழப்பதை எதிர்த்து நின்றால் மாவோயிஸ்டுகள் என குற்றம் சாட்டி மண்ணின் மைந்தர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகிறது. இதுதான் நாம் காணும் இந்தியாவின் தற்போதைய நிலை. இந்நிலையில்தான் மீண்டும் ஒரு மனித உரிமை தினத்தை நாம் கடந்து செல்கிறோம்.

வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் உலகின் ஏராளமான சமூகங்கள் பல்வேறு காலக்கட்டங்களில் நடத்திய போராட்டங்களின் வரலாற்று ரீதியான வெற்றிதான் ‘சர்வதேச மனித உரிமை பிரகடனம்’ 1945-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவான அடுத்தாண்டு, பிப்ரவரி மாதம் 16ம் தேதி ஐக்கிய நாடுகள் ‘மனித உரிமை ஆணைக் குழு’ உதயமானது. ஐம்பத்து மூன்று நாடுகளை அங்கமாகக் கொண்ட இக்குழு, முதல் வேலையாக ‘சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

இக்குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. டிசம்பர் 10, 1948ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது.

டிசம்பர் 10 என்ற இதே நாளை 1950ம் ஆண்டிலிருந்து ‘சர்வதேச மனித உரிமைகள் தினமாக’ அறிவித்து கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகத்தில் பிறக்கும் அனைத்து மனிதர்களும் சமமான உரிமைகளும், அடிப்படை சுதந்திரங்களும் கொண்டிருக்கின்றனர் என்ற உண்மையை உரக்க கூறுவதே மனித உரிமை தினத்தின் நோக்கமாகும்.

மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடனும் இந்த தினம் உலகளாவிய அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

1948-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்’ 30 உறுப்புரைகளைக் கொண்டது.

1976-ஆம் ஆண்டு இரண்டு ஐ.நா மனித உரிமை உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இந்தியா 1993-ஆம் ஆண்டு விரிவான மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தை பிறப்பித்தது. இதன் அடிப்படையில் தேசிய மனித உரிமை கமிஷனும், மாநில அளவிலான மனித உரிமை கமிஷன்களும், மனித உரிமை நீதிமன்றமும் நமது நாட்டில் அமுலுக்கு வந்தன.

1993-ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த மனித உரிமை பாதுகாப்பு சட்டம் வழங்கும் அதிகாரங்களையும், பொறுப்புகளையும் நிறைவேற்றுவதுதான் மனித உரிமை கமிஷனின் கடமையாகும்.

மனித உரிமை கமிஷனின் நடவடிக்கைகளுக்கு சிவில் நீதிமன்றங்களுக்கான அனைத்து அதிகாரங்களும் உள்ளன. கட்சி தாரரையும், சாட்சிகளையும் அழைப்பது, உறுமொழி எடுத்து வாக்குமூலம் பதிவுச்செய்வது, ஆவணங்களை கோருவது, அதனை பரிசோதிப்பது, நேரடியாகவோ அல்லது பிரதிநிதிகள் மூலமாகவோ ஆதாரங்களை சேகரிப்பது, இதர நீதிமன்றங்களிலிருந்தோ அலுவலகங்களிலிருந்தோ பொது ஆவணங்களை கோருவது ஆகியன கமிஷனின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாகும்.

தேசிய மனித உரிமை கமிஷனின் அதே அதிகாரங்கள்தாம் மாநில மனித உரிமை கமிஷன்களுக்கும் உள்ளது.

ஹிந்துத்துவா பாசிச பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு இழப்பீடாக ஆந்திர மாநில அரசு 70 லட்ச ரூபாயை வழங்க உத்தரவிட்டுள்ளது தேசிய மனித உரிமை கமிஷனின் சிபாரிசின் அடிப்படையிலாகும்.

மேலும்,தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பின்(NCHRO) சட்டரீதியான தொடர் போராட்டத்தின் காரணமாக, கடையநல்லூரை சார்ந்த மசூத் போலீஸ் அதிகாரிகளால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் அவரது மனைவிக்கு 7,52,084 ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதும் மனித உரிமைக்கான போராட்டத்தில் ஒரு மைல் கல்லாகும்.

நீதி மறுப்பின் நெருப்பு ஜுவாலையில் வெந்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் விடுதலைக்காக நம்மை அர்ப்பணிப்பதுதான் இந்த மனித உரிமை தினத்தில் நாம் எடுக்கும் உறுதிமொழியாக இருக்கவேண்டும்.

காந்தியடிகள் ஒரு முறை கூறினார்: “நாட்டின் மிகவும் பலகீனமான குடிமகனின் உரிமைகள் பாதுகாக்கப்படும்போது மட்டுமே சுதந்திரம் என்பது நிதர்சனமாகும்”.

பணக்காரரை மேலும் பணக்காரராக மாற்றும்,ஏழையை மேலும் ஏழையாக மாற்றும் பொருளாதார வளர்ச்சியின் பெயரால் பெருமை பேசுபவர்கள் இந்த மனித உரிமை தினத்திலாவது காந்தியின் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார்களா? தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால், உலகமயமாக்கல், பாசிச, முதலாளித்துவ கொள்கைகளை இறுகப் பற்றிக்கொண்டு தூங்குபவர்களை எழுப்ப இயலுமா?

நன்றி:செய்யது அலி

கருத்துகள் இல்லை: