OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

அணுமின் நிலையங்கள் நாட்டின் சாபக்கேடுகள்...................கவனிக்குமா இந்த அரசாங்கம்...........




நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலைய சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 127 பேர் 11 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு, பிரதமரின் தூதர் வருகைக்குப்பிறகும், முதல்வருடனான சந்திப்புக்குப்பிறகும் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.இந்தப் போராட்டத்துக்குத் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் ஆதரவுத் தெரிவித்தனர்.

கூடங்குளம் அணுமின் நிலையம் கூடாது என்று அப்பகுதி மக்கள் போராடுவதில் நியாயம் இருக்கிறது. அணுமின் நிலையம் அமையுமானால், அணுஉலையிலிருந்து வெளியேற்றப்படும் கதிரியக்கம் உள்ள கனநீர் கடலில்தான் விடப்படும். அதனால் அப்பகுதியில் மீன்வளம் குறைந்துவிடும். மீன்வளத்தை நம்பிவாழும் கடலோர மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதுதான் இப்பகுதி மக்களின் அடிப்படை எதிர்ப்பாக இருக்கிறது.

அடிக்கடி ஏற்படும் பூகம்பத்தால் இப்போது, அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்படுமானால் அதன் பின்விளைவுகள் பற்றிய அச்சமும் சேர்ந்துகொண்டுவிட்டது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பாதிக்கப்படும் சுற்றுக் கிராமங்களில் உள்ள மக்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய தொழில் பாதிப்புகளுக்கு, அணுமின் உற்பத்தி தொடங்கும் முன்னதாகவே இழப்பீடு வழங்குவதும், அணுக்கதிர் வீச்சு பாதிப்பு வளையத்துக்குள் வரும் கிராமங்களின் மக்கள் பாதுகாப்புக்காக அணுமின் நிலையத்தை திறக்கக்கூடாது என வலியுறுத்திப் போராடிவருகிறார்கள்.

இந்த அணு உலைகள் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளதால் விபத்துக் காலங்களில் ஏற்படும் கடும் நெருக்கடியைச் சமாளிக்கவேண்டிய சூழ்நிலையிலும் இருக்கின்றன.

கூடங்குளம் அணு உலை 2001 ம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டது. தொடங்கப் பட்ட சில நாட்களிலேயே அணு உலை கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும் மணலில் கடல் மண் கலக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் இப்போது புதிதாக சில அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளி வந்துள்ளன.

அணு உலை அமைந்துள்ள பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிலான பகுதி நுண்ம பாதுகாப்பு பகுதி (Sterilized zone) என்பதால் அங்கு தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை. அதிலும் அணுஉலை அமைந்திருக்கும் பாறைகளுக்குப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் கல் குவாரிகளுக்கு முற்றிலும் அனுமதியில்லை.

ஆனால் தற்போது அணு உலையிலிருந்து மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் கருங்கல் குவாரி செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணுஉலையின் அடித்தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது விபத்து நிகழ்வதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப் பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் நெல்லை மாவட்ட ஆட்சியரை இரண்டு வாரங்களுக்குள் இதற்குப் பதிலளிக்க நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

அதோடு கூடங்குளம் பகுதி நிலஅதிர்வு வரைகோட்டில் உள்ளது என்பதும், நிலஅதிர்வு ஏற்பட்டால் ஜப்பான் புகுஷிமாவில் ஏற்பட்ட அதே நிலைமை இங்கும் ஏற்படும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த அணுஉலையைக் கட்ட இந்திய அரசு ஏற்கெனவே 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளது என்பதும், அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தில் பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காட்டை எட்ட வேண்டும் என்பதில் மத்திய அரசு குறியாக இருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக 15 ஆயிரம் கோடி செலவிட்டு இறுதி கட்டத்துக்கு வந்து இந்தாண்டு கடைசியில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் பாதிதான் தமிழகத்துக்கு கிடைக்கும் .

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் பகுதி அக்டோபரிலும், இரண்டாம் பகுதி 2012 ஜனவரியிலும் மின் உற்பத்தியைத் துவக்குவதற்குரிய பணிகள் நடந்து வருகிறது. ஒவ்வொன்றும் 1,000 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்டவை.

இதில் பயன்படுத்தப்படும் ரஷ்ய அணு உலை, 1985 முதல் ஐரோப்பாவின் பல பகுதிகளில் கணிசமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும், வேறெங்குமே பயன்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்படாத ஜைதார் உலை போன்று அல்ல என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த வகை உலை, இந்தியாவில் நிறுவப்படுவது இதுதான் முதல் முறை.

அதனால்தான் பயமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. தற்போது கூடங்குளத்தில் ஏற்பட்டிருக்கும் அணுஉலைபோல்தான் ரசியாவில் செர்னோபிலில் அணுஉலையில் 25 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த மிகக் கோர அணுவிபத்து இதற்கெல்லாம் எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. செர்னோபில் அணு உலை விபத்து என்பது 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள பிப்யாட் என்னும் இடத்துக்கு அருகில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தாகும்.

இது உலகின் மிக மோசமான அணு உலை விபத்து எனப்படுகின்றது. அனைத்துலக அணு ஆற்றல் நிகழ்வு அளவீட்டில் 7 ஆவது நிலையை எட்டிய ஒரே விபத்தான இதன் விளைவாக மோசமான கதிரியக்கம் வெளியேறியது. இந்நிகழ்வின்போது ஏற்பட்ட வெடிப்பினால் 30 பேர் இறந்தனர். எனினும் இவ்விபத்தினால் ஏற்பட்ட பின்விளைவுகளினால் இறந்தவர் தொகை அதிகமாகும்.

தற்போது அதேபோல் ஜப்பானில் சமீபத்தில் பூகம்பத்தால் நிகழ்ந்த அணு உலை விபத்தின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளார்கள். இதன் காரணமாக வளர்ச்சியடைந்த நாடுகள் பலவும் தங்கள் அணு உலைத் திட்டங்களை மறு பரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன.

உலகில் 450க்கு மேற்பட்ட அணு மின் நிலையங்கள் செயல்படுகின்றன. ஜப்பானில் சுனாமியால் நேர்ந்த சோகத்துக்கு பிறகு அணு உலைகள் குறித்த அச்சம் உலகளவில் அதிகரித்துள்ளது.

ரஷ்யா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அணுஉலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரஷ்யா மற்றும் ஜெர்மனி நாடுகளில் 2020 ஆண்டுக்குள் அனைத்து அணு மின்நிலையங்களையும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அணுஉலை உள்ள இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதன் கதிர்வீச்சு இருக்கும் என்று கூறப்படுகிறது. அணுமின் நிலையத்துக்கு அருகே உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அணு உலைகள் மனித இனத்தை அழித்து விடும். கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்கு அந்த பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அணுமின் நிலையம் அமைப்பதற்கு முன்பு மக்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும்.

கல்பாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அணு உலைகள் பூமிக்கு அடியில் 185 அடி ஆழத்தில் கட்டப்பட்டுள்ளன என்றும் விபத்து ஏற்பட்டால் பூமிக்கு அடியிலேயே புதைந்து போய்விடும் என்றும் துவக்கத்தில் சொன்னவர்கள், இன்று கல்பாக்கம் அணுமின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து இரண்டரை மீட்டர் உயரத்தில் உள்ளதாகவும், அதிவேக ஈணுலை நான்கரை மீட்டர் உயரத்தில் உள்ளதாகவும் சொல்லி இருப்பது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.

ஜப்பானின் ஃபுகுஷிமா கடல் மட்டத்திலிருந்து இதைவிட அதிக உயரத்திலும் தூரத்திலும் இருந்தும் பாதிப்பைத் தவிர்க்க முடியவில்லை.

புகுஷிமா அணு விபத்துக்குப் பிறகு பொதுவாக எல்லா இடங்களிலும் அணுமின் நிலையங்களுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ஜப்பானில் இரு தினங்களுக்கு முன்பு, அணுஉலைக்கூடங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மிகப்பெரிய பேரணி நடந்தது.

ஜப்பான் கடற்பகுதியில் ஏற்பட்டதுபோல், நமது நாட்டில் அந்த அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்படாது. எனவே அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஆழிப்பேரலைத் தாக்குதலில் தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என்பதும் மறந்து விடக்கூடியதா?

தாக்குதலுக்கு கூடங்குளம் அணு மின் நிலையங்கள் உள்ளாகும்போது அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். கூடங்குளத்தில் இருந்து 28 சதுர கி.மீ. சுற்றளவில் நாகர்கோவில் நகரத்தையும் உள்ளடக்கி 2 1/2 லட்சம் மக்கள் வாழ்கின்றனர்.

அணு உலைகளைத் தவிர்த்து மின்சாரம் தயாரிக்க அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், காற்றாலைகள், மரபு சாரா எரிசக்திகள் ஆகியன மட்டுமின்றி, என்றென்றும் கிடைக்கும் சூரிய சக்தி பெரும் அளவு மின் தயாரிப்பிற்கு ஆதாரமானதாகும். ஆகவே, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அணு மின் உலைகளைத் தவிர்க்க வேண்டும்.

தனது தலைமையிலான கூட்டணிக் கட்சியில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகளுடன் காங்கிரஸ் கலந்தாலோசித்து இசைவான முடிவிற்கு வந்த பின்னர்தான் சர்வதேச அணு ஆற்றல் முகமையின் ஒப்புதலை அது கோர வேண்டும் என அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அணு ஆயுத ஒப்பந்தத்தில் சம்பந்தப்படாத மூத்த அறிவியாலாளர்களுடன் ஒப்பந்தத்தின் ஷரத்துகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அணு ஆற்றல் முகமையின் தலைவர் பி.கே. ஐயங்கார், அணு ஆற்றல் ஒழுங்குபடுத்தும் வாரியத்தின் முன்னாள் தலைவர் கோபால கிருஷ்ணன் மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் எ.என்.பிரசாத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் சமீபத்தில் சுனாமி காரணமாக ஏற்பட்ட ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின், உலக அளவில் அணு மின் நிலையங்கள் குறித்த பயமும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் தான், கூடங்குளத்தில் மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள்அணுமின் உலைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகிறது.

இந்தியாவும், பிரான்சிடமிருந்து புதிதாக வாங்க உள்ள அணு உலைக்கு இத்தகைய மறுசோதனை மற்றும் தகுதிச் சான்றிதழை வலியுறுத்தி உள்ளது. ஆனால், கூடம்குளத்தைப் பொறுத்தவரை, ஃபுகுஷிமா சம்பவத்துக்குப் பிறகும், ஒரு மேலோட்டமான சோதனையே நடத்தப்பட்டு உள்ளது. இது திருப்தியளிப்பதாக இல்லை.

எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, நம்பகத்தன்மை கொண்ட நிபுணர் குழு பரிசோதித்து சான்றிதழ் வழங்க வேண்டும். அணுசக்தி துறை மற்றும் தேசிய அணுமின் கழகத்திற்கு அப்பாற்பட்ட சுயேச்சையான நிபுணர் குழு வெளிப்படைத் தன்மையோடு செயல்பட்டு சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தேவைப்படும் ஆய்வு பயிற்சி போன்றவை அணு சக்தி துறையாலும் தேசிய அணு மின் கழகத்தாலும் முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். அத்துடன், கூடங்குளம் அணுமின் நிலையத்தை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அணுசக்தி விபத்து பொறுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.

இந்த அணுமின் நிலையத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்கிற மக்களின் கவலை குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இவற்றைத் திருப்திகரமாக செய்து முடிக்கும் வரை, கூடங்குளம் அணு மின்நிலையத்தில் மின் உற்பத்தி துவங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு: கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் இதனை சிந்திப்பார்களா>>>>>>>>>>>>>>>
நன்றி நண்பர்: சிராஜ்.B.S

கருத்துகள் இல்லை: