OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 3 அக்டோபர், 2011

மக்களைப் பாழ்படுத்தும் புதிய அனல் மின் நிலையங்களை நிறுத்துக!



மின்பற்றாக்குறை, 2–ஜி ஸ்பெக்ட்ரம், ஈழத்தில் தமிழின அழிப்பு இவையே தி.மு.க. அரசு எதிர்க்கட்சி தகுதியைக் கூட சட்டப்பேரவையில் இழந்து நிற்பதற்கான முக்கிய மூன்று காரணிகள் எனக் கூறப்படுகிறது. இவற்றில் தமிழ்நாடு மக்களின் தன்னலன் சார்ந்த முதன்மைப் பிரச்சனையாக, ஊடகங்களிலும் அரசியல் கட்சி மேடைகளிலும் அதிகம் பேசப்பட்டது மின் பற்றாக் குறையே. தமிழ்நாட்டின் மின் உற்பத்திக்கும் தேவைக்கும் இடையிலான பற்றாக்குறை, 3000 மெகாவாட் என இன்றளவும் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசும், இப்பற்றாக்குறையை உடனடியாகப் போக்கும் வகையில் நடுவண் தொகுப்பிலிருந்து 1000 மெகாவாட் அளவிலான மின்சாரத்தை வழங்க வேண்டுமெனக் கேட்டுள்ளது.
thermal_power_station_360தமிழகத்தில் தற்பொழுது நான்கு புதிய மின் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. தேசிய அனல்மின் கழகமும், தமிழ்நாடு மின்வாரியமும் இணைந்து சென்னை அருகேயுள்ள வல்லூரில், மூன்று யூனிட்கள் கொண்ட 1500 மெகாவாட் அனல் மின் நிலையத்தை அமைக்கிறது. இந்நிலையத்திலிருந்து அக்டோபர் முதல் 375 மெகாவாட் மின்சாரம் முதற்கட்டமாகப் பெறப்படவிருக்கிறது. மேட்டூரில் தமிழக மின்வாரியத்தின் சார்பில் 600 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றும் அமைக்கப்படவிருக்கிறது. இந்நிலையத்தின் உற்பத்தி டிசம்பர் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எண்ணுரில் 600 மெகாவாட் திறனுள்ள புதிய அனல்மின் நிலையமும், நடுவண் அரசுடன் தமிழக மின்வாரியமும் இணைந்து 9,083 கோடி ரூபாய் மதிப்பில் 1600 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் உடன்குடியிலும் அமைக்கப்படவிருக்கின்றன. இத்திட்டங்கள் செயல்படத் தொடங்கினாலே, தேவைக்கு அதிகமான மின் உற்பத்தி 5100 மெகாவாட் கொண்ட மாநிலமாக தமிழகம் மாறும்.
இந்நிலையில் நடுவண் அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நடுவண் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை, அனல்மின் நிலையங்களில் நிலக்கரியின் பயன்பாட்டு அடிப்படையில் ஆய்வு நடத்தி, சில வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. கொதிகலன் செயல்பாடு, குளிர்விப்பில் வெளியேறும் தண்ணீரின் வெப்பநிலை மற்றும் வெளியேறும் புகை ஆகியவற்றில், நடுவண் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை வகுத்த அளவை விடக் குறைவான அளவை நடுவண் சுற்றுச் சூழல் துறை நிர்ணயித்துள்ளது. இந்த வழிகாட்டுதலின்படி, நடுவண் வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அனுமதிகளை நிறுத்தி வைத்துள்ளது.
இந்திய மின் நிலையங்களின் கொதிகலன்கள் (பாய்லர்கள்) 100 சதவிகிதம் இந்திய நிலக்கரி அல்லது 30 சதவிகிதம் வெளிநாட்டு நிலக்கரியுடன் சேர்த்து பயன்படுத்தும் திறனிலேயே தயாரிக்கப்படுகின்றன. ஆனால், வடசென்னை அனல்மின் நிலையத்திற்கான 1200 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகளுக்கும், மேட்டூரின் 600 மெகாவாட் யூனிட்டுக்கும் நடுவண் அரசு நிலக்கரி அனுமதிக்கான உறுதியளிப்புக் கடிதம் தந்திருந்தாலும், ஒரிசா மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவன கூட்டத்தில், உறுதியளிக்கப்பட்ட அளவில் 50 சதவிகிதம் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது, கொதிகலன்களின் திறன் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறையின் சூழல் விதிமுறைகளைப் பாதிப்பதாக இருக்கும். நடுவண் அரசின் நிலக்கரி அனுமதியையும் சுற்றுச் சூழல் அனுமதியையும் சமன் செய்து பெற வேண்டிய நிலையில், 11 மற்றும் 12 ஆம் அய்ந்தாண்டு மின் உற்பத்தித் திட்டங்கள் நடைமுறைக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் நடுவண் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன், இதற்கான அனுமதிகளை வழங்கி விடுவார். இன்னும் ஆறுமாத காலத்தில் மேற்கண்ட திட்டங்கள் நடைமுறைக்கு வருவதும், தமிழகத்தின் மின் பற்றாக்குறை நீங்கி உபரித் திறன் இருக்கும் என்பதும் கண்கூடு. நடைமுறையிலிருக்கும் அனல்மின் திட்டங்களால் சுற்றுக்சூழலும், மக்களின் ஆரோக்கியமும் சீர்கெட்டுப் போயிருக்கின்றன. மின் உற்பத்திக்கான மாற்று முறைகளைப் பற்றிய நடவடிக்கைகளில் மேற்கத்திய நாடுகள் இறங்கிவிட்டன. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளோ, சூரியஒளி, காற்றாலை போன்ற இயற்கை வழி உற்பத்திக்கான வாய்ப்புகள் அதிகமிருந்தும், அணு மற்றும் அனல் மின் திட்டங்களையே சார்ந்து நிற்கின்றன. புவிப்பரப்பிற்கும் வாழிட மக்களுக்கும் பேராபத்துகளைத் தருவிக்கும் தொழிற் நுட்பங்களையும் திட்டங்களையும் நம்பியே பாழ்படுகின்றன.
தமிழகத்தில் இயங்கி வரும் மின் உற்பத்தித் திட்டங்கள் தற்போதைய தேவைகளை நிறைவு செய்யும் நிலையில், எதிர்காலத் தேவைக்கான மின் ஆற்றலை காற்றாலை, சூரிய ஒளி மற்றும் குப்பைக் கழிவுகளிலிருந்து உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளையும் நவீன தொழிற்நுட்பத் திட்டங்களையும் மட்டுமே நாட வேண்டும். நுகர்வோரான மக்களும் அரசுகளிடம் இதை வலியுறுத்த வேண்டும். மக்கள் நலனில் அக்கறையற்ற ஊழல் அரசுகள் ஒருபுறம், பொது நோக்கு சிந்தனையற்ற அசட்டையான மக்கள் மறுபுறம் என, தவறான கொள்கைத் திட்டங்களில் நாடு வீழ்ந்து கிடக்கிறது.
இந்த அவலமான சூழலில் தான் தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் 9 மற்றும் தூத்துக்குடியில் ஒன்று என புதிய அனல்மின் நிலையங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் முதற்கட்ட அனுமதியை வழங்கியிருக்கின்றன. இத்திட்டங்களைக் கைவிடக் கோரியும், புதிய அனல் மின் நிலையங்களுக்கான அடுத்தகட்ட அனுமதிகளை வழங்கக் கூடாதென வலியுறுத்தியும் நாகை மாவட்ட மக்கள் போராடி வருகின்றனர். மாநில அரசு தொடர்ந்து அனல் மின் நிலைய முதலாளிகளுக்கு ஆதர வாகவே செயல்பட்டு வருகிறது.
மீனவர்கள், தலித்துகள் மற்றும் நாகை காரைக்கால் வாழ் முஸ்லிம்கள் எனப் பலதரப்பட்ட மக்களும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக அனல் மின் நிலைய எதிர்ப்பு கூட்டியக்கம்' என்ற பெயரில் பல்வேறு அமைப்புகளின் கூட்டு முயற்சியில் மக்கள் அடுத்த கட்டப் போராட்டங்களுக்கு அணியமாகி வருகின்றனர். 19.07.2011 அன்று, மயிலாடுதுறையில் ஏறத்தாழ ஆயிரம் பேர் பங்கேற்ற வாழ்வுரிமை மாநாடு' இக்கூட்டியக்கத்தினரால் நடத்தப்பட்டது. இதையொட்டி பகுதிவாழ் மக்கள் மற்றும் மாவட்ட அரசு நிர்வாகத்தின் கருத்தறிய உண்மையறியும் குழு ஒன்று, தான் ஆய்வில் கண்டவற்றிலிருந்து அளித்த அறிக்கையின் சாராம்சமான பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. இக்கட்டுரை அச்சில் இருக்கும் காலத்தில், நாகை மாவட்டத்தில் மூன்று அனல் மின் நிலையங்களுக்கு மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அனுமதி வழங்கியிருப்பதை அறிகிறோம். அவற்றில் ஒன்று மிகவும் பிரச்சனைக்குரிய, தரங்கம்பாடி பகுதி மீனவ மக்களின் வாழ்வை நிர்மூலமாக்கப் போகும் செட்டிநாடு அனல்மின் கழகம்' நிறுவியிருக்கும் நிலையமாகும்.
செட்டிநாடு' முதலாளியான ஏ.சி. முத்தையா அண்மையில் அ.தி.மு.க. அரசினால், தமிழ்நாடு மாநில திட்டக் குழு (தொழிற்துறை) உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவர், முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய நட்பு வட்டத்திலும், அதிகார மய்யத்திலும் நீண்டகாலமாகக் கோலோச்சுபவர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவரைப் போன்றவர்கள் முறைகேடாக நிலங்களை மட்டுமல்ல, அரசாங்கத்தையே கூட விலைக்கு வாங்கலாம். துணிச்சலான மக்கள் போராட்டங்களை விலை பேச முடியுமா? தேவைக்கு அதிகமான உபரி மின்சாரத்தை உற்பத்தி செய்து, பிற மாநிலங்களுக்கு விற்று, கொள்ளை லாபம் ஈட்டும் நோக்கத்துடன் களம் இறங்கியிருக்கும் தனியார் முதலாளிகளுக்காக, விவசாய நிலங்கள் திட்டமிட்டே தரிசாக்கப்பட்டும் அடிமாட்டு விலைக்கு ஆக்கிரமிக்கப்பட்டும் வருகின்றன.
வரும் காலத்தில் 115 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (2011 – 12) கூறுகிறது. விவசாய நிலங்கள் மனைகளுக்கும் தொழிற் பூங்காக்களுக்கும் கையகப்படுத்தப்பட்டால், உணவு உற்பத்தி செய்யப்படுவது எப்படி? வேளாண் குடிகளான தலித் மக்களும், கடலோர வாழ் மீனவக் குடிகளும் தங்கள் பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, உள்நாட்டு அகதிகளாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படுமா?
இளம்பரிதி
**** 
கடலோர மக்களின் வாழ்வை சூறையாடும் அனல் மின் நிலையங்கள்
உண்மை அறியும் குழுவின் அறிக்கையிலிருந்து சில பகுதிகள் 
சமய ஒற்றுமை, மீன்வளம், விவசாயம், சுற்றுலா ஆகியவற்றிற்குப் பெயர்போன மாவட்டம் நாகப்பட்டினம். நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலுள்ள சுமார் 220 கி.மீ. நீளமுள்ள கடற்கரையை ஒட்டி 61 கிராமங்கள் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ளன. 16 நதிகள் கடலில் கலக்கும் கடைமடை விவசாய நிலங்களை நம்பி ஏராளமான விவசாயிகளும், தலித் மக்களும் வாழ்கின்றனர். வேளாங்கன்னி, நாகூர், திருக்கடையூர் முதலான புகழ்மிக்க சமயத் தலங்களில் சுற்றுலாத் தொழில்களை நம்பிப் பல சிறு வணிகர்கள் வாழ்கின்றனர்.
வரலாற்று முக்கியத்துவமிக்க இம்மாவட்டத்தில் வாழ்கிற மக்கள் மத்தியில், இன்று தம் எதிர்காலம் குறித்த மிகப் பெரிய அச்சம் உருவாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 15 ஆண்டுகளாக திருக்கடையூரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிள்ளை பெருமாள்நல்லூர் பவர் லிமிடெட்'இன் அனல்மின் நிலையம் தவிர, மேலும் ஒன்பது அனல்மின் நிலையங்கள் இங்கு வரப்போகின்றன. ஏற்கனவே காரைக்காலில் செயல்பட்டு வரும் மார்க்' தனியார் துறைமுகம் தவிர, மேலும் மூன்று துறைமுகங்களும் அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரியை ஏற்றிவரும் கப்பல்களிலிருந்து கரியை இறக்கும் பல ஜெட்டி'களும் கட்டப்பட உள்ளன.
தமிழகத்தில் இன்று நிலவுகிற மின்சாரப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி அரசும், கார்ப்பரேட்டுகளும் தமது செயல்பாடுகளை நியாயப்படுத்துகின்றனர். மீன்பிடித் தொழிலும், விவசாயமும் அழிந்தாலுங்கூட, புதிய மின் நிலையங்களில் வேலை வாய்ப்பளிக்கப்படும் என மக்கள் நடுவில் இவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.
திருக்கடையூரில் செயல்பட்டு வரும் பி.பி.என். மின் நிலையத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் :
1998 முதல் பிள்ளைப்பெருமாள் நல்லூரிலிருந்து செயல்பட்டு வருகிற இம்மின் நிலையத்தில், 330 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாப்தலின் மற்றும் திரவ எரிவாயுவால் இது இயக்கப்படுகிறது. பரங்கிப்பேட்டையில் இருந்து கடல் ஊடாகச் சுமார் 75 கிலோ மீட்டர் நீளத்திற்கு நிறுவப்பட்டுள்ள குழாய் வழியாக எரிவாயு கொண்டு வரப்படுகிறது. மின் நிலைய இயக்கத்திற்கென கடலில் இருந்து குழாய்கள் மூலம் நீர் உறிஞ்சப்படுகிறது. பயன்படுத்தப்பட்டுச் சூடேற்றப்பட்ட நீர் மீண்டும் கடலுக்குள் விடப்படுகிறது.
கடந்த 13 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிற இம்மின் நிலையத்தால் தங்களுக்கு மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ள தாக வெள்ளக்கோயில் குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, மாணிக்கப்பங்கு, புதுப்பேட்டை முதலான ஊர்களைச் சேர்ந்த மீனவ மக்கள் எங்களிடம் கூறினர். இந்த ஒவ்வொரு ஊரிலும் பொது இடத்தில் கூடியிருந்த மீனவ மக்களின் பிரதிநிதிகள் கோ. சரவணன், த. குமார், ஆ. பாஸ்கர், நா. தவமணி, ந. தங்கப் பொண்ணு, சு. தங்கவேலு, க. சித்திரவேலு, ர. பரசுராமன், சே. சிவகுமார், கு. விஜயேந்திரன், கி. குணசேகரன் ஆகியோர் கூறியவற்றிலிருந்து :
1. கடல் உள்ளே அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் சிக்கி வலைகள் கிழிந்து விடுகின்றன. டிராய்லர் படகுகள் குழாய்களைச் சுற்றித்தான் செல்ல வேண்டியுள்ளது. நாப்தா கொண்டு வரும் கப்பல்களில் மாட்டியும் வலைகள் கிழிகின்றன. ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலை கிழிந்தால் ரூ. 10,000 என்ற அளவிலேயே அதுவும்கூட ஒரு சிலருக்கு மட்டும் இத்தகைய இழப்பீடுகள் தரப்பட்டுள்ளன. ஸ்நேகா' என்கிற தொண்டு நிறுவனம் செய்துள்ள ஆய்வின்படி, 13 ஆண்டுகளில் தரங்கம்பாடியைச் சுற்றியுள்ள எட்டு கிராமங்களில் உள்ள மீனவர்களுக்கு 5.14 கோடி ரூபாய் இழப்பு இவ்வகையில் ஏற்பட்டுள்ளது.
2. சூடேற்றப்பட்ட நீர் மீண்டும் கடலில் கலக்கப்பட்டு வருவதால் பெரிய அளவில் மீன்வளம் குறைந்துள்ளது. தண்ணீர் கலக்கின்ற இடத்தைச் சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மீன்களே கிடையாது. மீன்களின் கருவளத்தையும் இது பாதிக்கிறது. இறால் மற்றும் காணாங்கெழுத்தி, கட்லா முதலான மீன்கள் மிகவும் குறைந்துவிட்டன.
3. கடல் அரிப்பும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 100 வீடுகளாவது இடம்பெயர்ந்து செல்ல வேண்டியுள்ளது.
4. மழை அளவும்கூட இப்பகுதியில் குறைந்துள்ளது. 8 அடி ஆழத்தில் கிடைத்து வந்த நிலத்தடி நீர், தற்போது 20 அடி ஆழத்திற்கு இறங்கி உள்ளது. நிலத்தடி நீரின் உப்புத் தன்மையும் அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாகக் காரைக்காலில் செயல்பட்டு வருகிற மார்க் துறைமுகம் கட்டப்படும்போது, நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு இது பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்படவில்லை. இன்று இந்தோனேசியாவிலிருந்து பெரிய அளவில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு பெல்ட் முதலான கருவிகள் பயன்படுத்தப்படாமல், மனித உழைப்பின் மூலமாகவே கரைக்குக் கொண்டு வந்து வெட்ட வெளியில் கொட்டப்படுகிறது. காற்று வீசும் திசையில் நிலக்கரி தூசு பறந்து இயற்கை வளங்களையும், உப்பனாற்று மீன் வளத்தையும் பாதித்து உள்ளது. வாஞ்சூர், நாகூர், பட்டணம், நிரவி, பட்டினஞ்சேரி ஆகிய ஊர்மக்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டு குறை வளர்ச்சியுடன் கூடிய குழந்தைகள் பிறப்பதாகவும், மரம், செடி, கொடிகள் அழிவதாகவும், இப்பகுதியில் விளையும் வாழை இலையில் உணவு உண்ண இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நாங்கள் சந்தித்த ஜா. சாதிக், அ. கப்பாபா ஆகியோர் கூறினர். எதிர்ப்புகளைக் காட்டும்போது உடனடியாக அழைத்துப் பேசி சில சலுகைகளைச் செய்வதை நிர்வாகம் தந்திரமாக மேற்கொள்கிறது. வரலாற்று முக்கியத்தும் மிக்க நாகூர் தர்கா நிலக்கரித்தூளால் பாழ்படுவதைப் பற்றி தர்கா நிர்வாகம் கவலை தெரிவித்தபோது, அக்கட்டடத்திற்கு வெள்ளை அடித் துத் தந்து நிர்வாகம் சமாதானம் செய்தது ஓர் எடுத்துக்காட்டு.
மேற்குறித்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள பி.பி.என். மின் நிலையம் 330 மெகாவாட் திறனுடையது. நாப்தா மற்றும் திரவ எரிவாயுவால் இயங்குவது. ஆனால், தற்போது அமைக்கப்பட உள்ள அனல் மின் நிலையங்கள் நிலக்கரியால் இயங்கக்கூடியவை. ஒவ்வொன்றும் சுமார் 1000 மெகாவாட் வரை திறனுடையவை.
நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட அனல் மின் நிலையங்கள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து மிக விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்துத் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுவதன் சுருக்கம் :
1. ஓசோன் படலம் துளையாதல், பூமி வெப்பமாதல் ஆகியவற்றிற்குக் காரணமான வாயுக்கள் பெரிய அளவில் உருவாகும். ஒவ்வொரு 500 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையமும் நாள் ஒன்றுக்கு 105 டன்கள் சல்பர்டைஆக்சைடு வாயுவை உற்பத்தி செய்யும். இது, சுவாச மற்றும் இருதய நோயை மக்களுக்கு ஏற்படுத்தும். மேகங்களில் கலந்து அமில மழையை உருவாக்கி மரம், செடி, கொடிகளையும் விவசாயத்தையும் அழிக்கும்.
2. ஒவ்வொரு 500 மெகாவாட் திறனுள்ள அனல்மின் நிலையமும் நாள் ஒன்றுக்கு இரண்டு டன் தூசுகளை உருவாக்கும். உலோகத் தன்மையுடைய இத்தூசுகள் நுரையீரலைப் பாதிக்கும். இருதயத் துடிப்பையும் மாற்றி அமைக்கும். மண்ணின் சத்துக்களை அழிக்கும். மரம், செடி, கொடிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
3. இதுதவிர, உடலில் மிகப்பெரிய தீங்குகளை விளைவிக்கக்கூடிய பாதரசம் வெளிப்படும். ஓராண்டில் நீரில் ஒரு கிராம் அளவு பாதரசம் கலந்தால் பத்து ஹெக்டேர் பரப்பில் உள்ள மீன்கள் விஷத்தன்மை அடையும். ஒவ்வொரு 100 மெகாவாட் அனல்மின் நிலையமும் ஆண்டொன்றுக்கு 11 கிராம் பாதரசத்தை வெளித்தள்ளும் என்றால், பாதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
பரிந்துரைகள் :
1. அறிவிக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையங்கள் மற்றும் துறைமுகத் திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலப்பறிப்பு, அவற்றால் ஏற்பட்டுள்ள மக்கள் பாதிப்பு, திட்டங்களால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு, மீன் வளப் பாதிப்பு ஆகியவை குறித்து ஆராய நீதிபதி ஒருவர் தலைமையிலான விசாரணை ஆணையம் ஒன்றை நியமிக்க வேண்டும். நிலப்பறிப்பில் விதிகளை மீறி கார்ப்பரேட்டுகளுக்கு ஒத்துழைத்த அதிகாரிகள், ஊராட்சித் தலைவர்கள் ஆகியோர் மீது வழக்குத் தொடர வேண்டும். சிதம்பரம்பாக்கம் என்கிற கிராமமே இல்லை எனச் சொன்ன நீரி' நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. சாதி வெறியுடன் தலித் மக்களைத் தாக்கிய காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சாமிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு தொடர வேண்டும். எருக்கட்டாஞ்சேரியைச் சேர்ந்த 14 பேர்கள் மீதும் போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். அவ்வூர் மக்களுக்கும் ஊர்த் தலைவர் செல்வத்திற்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தொலைநோக்கில் :
தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுவதும், தொடர்ந்து மின் தேவை அதிகரித்து வருவதும் எல்லோருக்கும் கவலை அளிக்கக்கூடிய ஒரு நிலையே. இதற்கு உடனடிப் பரிகாரம் அவசியம் என்பதும் உண்மையே. நம்முடைய தற்போதைய மின் தேவை சுமார் 11 ஆயிரம் மெகாவாட் எனக் கூறப்படுகிறது. ஆனால், இன்று தமிழகம் முழுவதும் நடைமுறையில் உள்ள மின் நிலையங்களின் உற்பத்தி திறன் 15,800 மெகாவாட். இந்த மின் நிலையங்களின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, பராமரிப்புப் பணிகளை ஒழுங்காகச் செய்தால், மின் சிக்கனம், விநியோகம் முதலியவற்றின் திறன் சார்ந்த முறைகளைக் கையாளுதல் ஆகியவற்றின் மூலம் உடனடி மின் பற்றாக்குறையைக் களைய முடியும். பன்னாட்டு நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் நமது தற்போதைய மின் பற்றாக்குறையைக் கணக்கில் கொள்ளாமல், ஏராளமாக மின்சாரத்தை அளிக்க ஒப்புதல் கொடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்வதை அரசு நிறுத்த வேண்டும்.
உண்மை அறியும் குழுவினர்
v      பேராசிரியர் அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், சென்னை
v      பேராசிரியர் அரசமுருகுபாண்டி யன், டி.பி.எம்.எல். கல்லூரி, பொறையார்
v      வழக்குரைஞர் தய். கந்தசாமி, தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைப்பூண்டி
v      சமூக ஆய்வாளர், எழுத்தாளர் கா.இளம்பரிதி, மதுரை
v      பொறியாளர் மு. ஹரிஸ்முகம்மது
v      தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு
v      சமூக ஆர்வலர் செ. முகம்மது மரைக்காயர், நாகை
(தலித் முரசு ஜூலை 2011 இதழில் வெளியானது)

2 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இயற்க்கை சக்திகளான காறறாலை மற்றும் சூரிய சக்திகளைக் கொண்டும், நீர் மின்நிலையஙக்ள மட்டும் அதிக முக்கியத்துவம் கெர்டுத்து அரசு செயல்பட வேண்டும்.

சுற்றுச்சூழலையும் மக்களையும் பாதிக்கும் இதுபோன்ற அனல் மின் நிலையங்களை அரசு கவனித்து செயல்படுத்த வேண்டும்