OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 19 செப்டம்பர், 2011

யார் இந்த அப்சல் குரு ?


யார் இந்த அப்சல் குரு ?    காஷ்மீரில் தீவிரவாதம் வேர் விட்டு வளரத் தொடங்கிய நேரத்தில், இளைஞனாக இருக்கும் துரதிருஷ்டத்தை பெற்றவர்தான் இந்த அப்சல் குரு.   காஷ்மீர் சமுதாயத்தில் நிலவி வந்த அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருந்தார் மக்பூல் பட்.  தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டார் என்று 1984ம் ஆண்டு  மக்பூல் பட் தூக்கிலிடப் படுகிறார்.  ஐக்கிய முஸ்லீம்கள் கூட்டணி என்று ஒன்று அமைக்கப் பட்டு, இஸ்லாமியர்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்குகிறது.   ஐக்கிய முஸ்லீம்கள் கூட்டணி, தேர்தலில் போட்டியிட்டு பெரும் வெற்றியைப் பெறுகிறது.   தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள் கைது செய்யப் படுகிறார்கள், சிறையிலடைக்கப் படுகிறார்கள்.   கைது செய்யப் பட்ட தலைவர்கள், காஷ்மீர் மக்களை ஆயுதம் ஏந்த அழைக்கிறார்கள்.   காஷ்மீரின் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தியாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்துகிறார்கள்.   ஜீலம் பள்ளத்தாக்கு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்துக் கொண்டிருந்த அப்சல் குரு, படிப்பை கை விட்டு, ஆயுதம் ஏந்துகிறார்.  பாகிஸ்தானுக்கு சென்று ஆயுதப் பயிற்சி எடுக்கிறார்.  ஆனால், பாகிஸ்தானுக்கு சென்ற சில நாட்களிலேயே பாகிஸ்தான் அரசியல்வாதிகளும், காஷ்மீர் மக்களை வைத்து அரசியல் நடத்துகிறார்கள் என்பதை உணர்ந்து, பாதிப் பயிற்சியிலேயே காஷ்மீர் திரும்புகிறார்.   திரும்பியவர் சும்மா இருந்திருக்கலாம்.    நல்ல பிள்ளையாக வேண்டும் என்று, எல்லைப் பாதுகாப்புப் படையிடம் சரணடைகிறார்.   சரணடைந்த தீவிரவாதியின் அந்தஸ்து வழங்கப் படுகிறது.
04ndgvb01_L-G_sends_128866f

மருத்துவப் படிப்பை பாதியில் கைவிட்டதால், அறுவை சிகிச்சை கருவிகளை விற்கும் தொழிலில் ஈடுபடுகிறார்.  தொழிலைத் தொடங்கி திருமணமும் செய்து கொள்கிறார்.  ஆனால், சிறப்புப் பாதுகாப்புப் படையும், ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் நிறுவனமும், தொடர்ந்து நெருக்கடி தருகின்றன.  காஷ்மீரில் எங்கே தீவிரவாத தாக்குதல் நடந்தாலும், அப்சல் பிடித்துச் செல்லப் படுவார். அவரோடு சேர்ந்து மனம் போன போக்கில் இளைஞர்களாக தென்படுபவர்கள் பிடித்துச் செல்லப் படுவார்கள்.  அந்த முகாம்களில் சித்திரவதை தொடங்கும்.  பல வாரங்கள் இந்த சித்திரவதை தொடரும்.  இறுதியாக, சம்பந்தப் பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கையில் இருக்கும் தொகையை லஞ்சமாக கொடுத்து, மீட்டு வர வேண்டும்.   22வது ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த மேஜர் ராம் மோகன் ராய், அப்சலின் அந்தரங்க உறுப்புக்களில் மின்சாரத்தை பாய்ச்சி சித்திரவதை செய்திருக்கிறார்.   ராணுவ முகாம்களில் உள்ள கழிவறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.  அப்சல் இது போல சித்திரவதைக்கு உள்ளாகும் போது, டிஎஸ்பிக்கள் வினய் குப்தா மற்றும் தேவீந்தர் சிங் ஆகியோர், அருகில் இருந்து மேற்பார்வை செய்திருக்கின்றனர்.     சாந்தி சிங் என்ற சித்திரவதை நிபுணர் ஒரு லட்ச ரூபாயை கொடு என்று மூன்று மணி நேரம் மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்திருக்கிறார்.  இறுதியாக அப்சலின் மனைவி, நகைகளை அடகு வைத்து, அப்சலின் ஸ்கூட்டரை விற்று, ஒரு லட்ச ரூபாய் கொடுத்த பிறகே அப்சல் விடுவிக்கப் படுகிறார்.  அதையடுத்து ஆறு மாதங்கள் அப்சல் படுத்த படுக்கையாக இருக்கிறார்.  
காஷ்மீர் போலீசின் சிறப்புப் படையின் சித்திரவதை முகாம்களில் சித்திரவதைக்கு ஆளானவர்கள், காவல்துறை இட்ட பணியை மறுக்காமல் செய்வார்கள்.  மறுத்தால், அந்த சித்திரவதைக்கு மீண்டும் ஆளாக நேரிடும் என்ற அச்சமே காரணம்.  அது போல, ஒரு நாள் டிஎஸ்பி தேவீந்தர் சிங் ஒரு சிறிய வேலையை செய்து கொடு என்று கேட்கிறார்.  என்ன என்று கேட்ட போது, ஒரு நபரை டெல்லிக்கு அழைத்துச் சென்று, அவருக்கு ஒரு வீடு பார்த்துக் கொடுக்க வேண்டும்.   அவர் அறிமுகப் படுத்திய நபர், காஷ்மீரி அல்ல.  அவர் தன் பெயரை முகம்மது என்று கூறினார்.   இந்த முகம்மது, பாராளுமன்றத் தாக்குதலில் கொல்லப் பட்ட 5 பேர்களில் ஒருவர்.
டெல்லியில் இருக்கும் போது, முகம்மதுவுக்கு தேவீந்தர் சிங்கிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வரும்.  சில நாட்கள் கழித்து, முகம்மது ஒரு காரை வாங்கினார்.  காரை வாங்கி விட்டு, நான் இப்போது திரும்பிச் செல்லலாம் என்று கூறி, 35 ஆயிரம் ரூபாய் பணத்தை தந்தார்.  இது அன்பளிப்பு என்று சொன்னார்.

காஷ்மீருக்கு திரும்பிச் செல்லும் போதுதான் நான் பேருந்து நிலையத்தில்  டெல்லி போலீசாரால் கைது செய்யப் பட்டேன். என்னை பரிம்போரா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள்.     பிறகு காஷ்மீரில் உள்ள சிறப்பு முகாமுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மீண்டும் டெல்லி அழைத்து வந்தனர்.  நான் முகம்மது பற்றி எனக்குத் தெரிந்தது அனைத்தையும் சொன்னேன்.   ஆனால், ஷவுகத், அவர் மனைவி நவஜோத் மற்றும் எஸ்ஏஆர்.கிலானி ஆகிய அனைவரையும் தெரியும்ம என்று சொல்லச் சொன்னார்கள்.  இதை ஊடகங்களின் முன் சொல்ல வேண்டும் என்று சொன்னார்கள்.  நான் மறுத்த போது, என் குடும்பத்தினர் அனைவரும் காஷ்மீர் முகாமில் இருப்பதால் சொல்ல மறுத்தால் எப்போது வேண்டுமானாலும் கொல்லப் படுவார்கள் என்றனர். வெற்றுக் காகிதங்களில் என்னிடம் கையொப்பம் பெற்றார்கள்.  ஊடகம் முன்பு, நான்தான் பாராளுமன்றத் தாக்குதலுக்கு பொறுப்பு என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தேன்.   எஸ்ஏஆர்.கிலானியைப் பற்றி ஒரு கேள்வி வந்த போது, நான் அவர் நிரபராதி என்று கூறினேன்.   ராஜ்பீர் சிங் என்ற ஏசி என்னை கடுமையாக திட்டினார்.  பத்திரிக்கையாளர்களிட்ம் இதை ஒளிபரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
மறுநாள் என் மனைவியோடு பேச அனுமதிக்கப் பட்டேன்.   அவர்கள் உயிரோடு இருக்க வேண்டுமானால் போலீசாரோடு ஒத்துழைக்க வேண்டும் என்று மிரட்டப் பட்டேன்.  அதன் பிறகு, முகம்மது சென்ற இடங்கள் என்று பல்வேறு இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்றனர்.  அங்கே அவர் பொருட்கள் வாங்கிய போது, நான் உடன் இருந்தேன் என்ற சாட்சிகளைத் தயார் செய்தார்கள்.  என் குடும்பத்தினரின் பாதுகாப்பைக் கருதி, அனைத்துக்கும் ஒப்புக் கொண்டேன்.
என்னை சிக்க வைத்ததன் மூலம், டெல்லி போலீசார் நாட்டையும் மக்களையும் ஏமாற்றி விட்டனர்.  பாராளுமன்றத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பதை இறுதி வரை கண்டுபிடிக்கத் தவறி விட்டனர்.   சிறப்பு பாதுகாப்புப் படை மற்றும் டெல்லி போலீசார் என்னை பலி கடா ஆக்கி விட்டனர்.   டெல்லி போலீசாருக்கு விருதுகள் வழங்கப் பட்டன, எனக்கு தூக்கு விதிக்கப் பட்டது.
இவ்வழக்கில் நான் கைது செய்யப் பட்டு 6 மாதங்களுக்கு என்னுடைய குடும்பத்தையே பார்க்க அனுமதிக்கப் படவில்லை.   6 மாதம் கழித்து, நீதிமன்றத்தில் சிறிது நேரம் சந்திக்க அனுமதி வழங்கப் பட்டது.  எனக்காக வாதாட 4 வழக்கறிஞர்களை தேர்ந்தெடுத்தேன்.   நான்கு பேரும் வாதாட மறுத்து விட்டதாக நீதிபதி எஸ்.என்.திங்க்ரா தெரிவித்தார்.   எனக்காக நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் என்னைக் கேட்காமலேயே பல ஆவணங்களை அனுமதித்தார்.  நீதிமன்றத்தால் நியமிக்கப் பட்ட வழக்கறிஞர் என்னைப் பார்க்கக் கூட மாட்டார்.   இப்படிப்பட்ட ஒரு முக்கிய வழக்கில் எனக்காக வழக்கறிஞர் கூட வைக்காமல், எனக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக இருந்தால், எதற்காக இந்த நீதிமன்றத்தின் விசாரணை ?  விசாரணை நடத்தாமலேயே என்னைத் தூக்கிலிட்டிருக்கலாமே ?
சிறையிலும் எனது வாழ்க்கை மிகக் கொடூரமானது.  தனிமைச் சிறையில் அடைக்கப் பட்டுள்ளேன். தொலைக்காட்சி கிடையாது. வானொலி கிடையாது.  நான் வாங்கும் செய்தித்தாள் கூட, கிழித்துத்தான் கொடுக்கப் படுகிறது. நான் மட்டும் இல்லை. என்னைப் போன்ற சக காஷ்மீரிகள் இந்தியாவின் பல்வேறு சிறைகளில் வழக்கறிஞர் உதவி கூடட இல்லாமல் அடைக்கப் பட்டுள்ளனர்.  தினந்தோறும், காஷ்மீரில் திவிரவாதிகள் சுட்டுக் கொலை என்று போலி என்கவுண்டர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப் பட்டு வருகிறது.   காஷ்மீரில் இன்னும் நிலைமை மோசம்.    மொத்த காஷ்மீருமே ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக உள்ளது.  ஒரு நாகரீக சமுதாயம் எதைப் பார்க்கக் கூடாதோ, அது காஷ்மீரில் தினந்தோறும் நடந்து கொண்டு இருக்கிறது.  
ஆனாலும் நம்பிக்கை இழக்க அவசியம் இல்லாத வண்ணம், இந்த சமுதாயத்திலும், சில வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள் இந்த அநீதியை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது நிம்மதியைத் தருகிறது.
எஸ்ஏஆர்.கிலானி விடுதலை செய்யப் பட்ட போதுதான் முதன் முதலாக மக்கள் காவல்துறையின் கதையை கேள்வி கேட்கத் தொடங்கினார்கள்.   உண்மையை நேசிக்கும் மக்கள் அப்சல் குருவுக்கு அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது என்று சொல்வது இயல்பே.  ஏனெனில் அதுதானே உண்மை.
எனக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.  இதில் பாதி நாட்களுக்கு மேல் சிறையில் கழித்திருக்கிறேன்.   மேலும் ஒரு பாதியை சித்திரவதை முகாம்களுக்குள் கழித்திருக்கிறேன்.   என் ஆணுறுப்பு உள்ளிட்ட அத்தனை இடங்களிலும் மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்யப் பட்டு நான் வீட்டுக்கு திரும்பி வருகையில், என்னை அன்போடு பார்த்துக் கொண்டாள் என் மனைவி தபஸ்ஸம்.   எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.   அந்தக் குழந்தைக்கு பிரபல கவிஞர் மீர்சா காலீப் பெயரை வைத்தோம்.  என் மகன் மருத்துவராக வேண்டும் என்பதே எனது கனவு.  எனது நிறைவேறாத கனவு அது.  என் மகன், அநீதிக்கு எதிராக அஞ்சாமல் குரல் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
காஷ்மீரைப் பொறுத்தவரை, இந்திய அரசாங்கத்தின் ஊதுகுழலாக செயல்படுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்.   இந்திய அரசு எடுத்துக் கொடுக்கும் செய்திகளை, உண்மைக்குப் புறம்பான செய்திகளை, ஊடகங்கள் மறுபேச்சு பேசாமல் வெளியிடுகின்றன.   உண்மையில் பத்திரிக்கை துறையை நேசிப்பவர்களாக இருந்தால் உண்மையை விசாரித்து எழுதட்டும்.   உளவுத் துறையின் ஏஜென்டுகளாக இருப்பதை நிறுத்தட்டும். இந்திய அரசு, காஷ்மீர் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள மறுக்குமேயானால், காஷ்மீர் பிரச்சினைக்கு என்றுமே தீர்வு கிடைக்காது.
ஒரு வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட ஒரு காஷ்மீரியை எந்தவித வழக்கறிஞர் உதவியும் இல்லாமல், இந்த தேசத்தின் நீதித்துறை தூக்கிலிடுமேயானால், காஷ்மீர் மக்களுக்கு இந்தியாவின் மீது எப்படி நம்பிக்கை வரும் ?
என்னுடைய வழக்கின் ஒரே சாதனையாக நான் கருதுவது, என்  வழக்கின் மூலமாக, காஷ்மீர் சிறப்புப் படையின் சித்திரவதைக் கூடங்களை வெளியில் கொண்டு வந்ததுதான். காஷ்மீர் மக்கள் நாள்தோறும் படும் வேதனைகள் விவாதிக்கப் படுகின்றன.   எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்கின்றனர்.  காஷ்மீருக்கு வெளியே வசிக்கும் மக்களுக்கு சுத்தமாக புரியாத விஷயங்கள் இவை.
நான் இறந்த பிறகு காஷ்மீர் மக்களின் அப்சலாக நினைவு கூறப்பட விரும்புகிறேன். இந்திய மக்களுக்கும் நான் அப்சர் தான் என்றாலும், காஷ்மீர் மக்களை இந்திய ஊடகங்கள் ஏமாற்ற முடியாததால், நான் அடைந்த வேதனைகளை அவர்கள் நன்றாகவே புரிந்து கொள்வார்கள்.
இறுதியாக இந்த உலகத்துக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.   கிலானிக்கு தூக்கு தண்டனை விதிக்கப் பட்ட போது நீதிமன்றத்தில் அவர் இதைத்தான் சொன்னார்.   அமைதியும் நீதியும் வேறு வேறானது அல்ல.    நீதியோடு சேர்ந்துதான் அமைதி வரும்.  நீதி இல்லையென்றால் அமைதியும் இல்லை.    என்னை தூக்கிலிட விரும்பினால் தூக்கிலிடுங்கள்.   ஆனால் எனக்கு விதிக்கப் பட்ட தூக்கு இந்திய நீதித்துறை வரலாற்றிலும், அரசியல் வரலாற்றிலும் ஒரு கருப்புப் புள்ளியாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்” என்று அப்சல் சொன்னார்.
இது அப்சல் தன் வாயால் சொன்ன அவரின் கதை.

நன்றி : சவுக்கு 

கருத்துகள் இல்லை: