OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

எது நேர்மை? எது நியாயம் ??? எங்கே போனார்கள் இந்த தமிழ்வாதிகள்..............



1991  மே மாதம் 21 ஆம் நாள், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் இறுதியாக  உச்ச நீதிமன்றம் நளினிமுருகன், சாந்தன், பேரறிவாளன்  ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

மேற்கண்ட தூக்கு தண்டனை கைதிகள் தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள். முதலில் இவர்களின் கருணை மனு ஆளுனரால் நிராகரிக்கப்பட்டு, பின்னர் தூக்கு தண்டனை கைதிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்குகள் தொடுத்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 25.11.1999 அன்று வழங்கிய தீர்ப்பில், மனுதாரர்கள் தொடுத்த வழக்குகளை ஏற்று கருணை மனுக்களை நிராகரித்த ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்து, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்குமாறு அறிவுறுத்தியது. 

இதனடிப்படையில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகிவிடும் என்று அன்றைய முதல்- அமைச்சர் கருணாநிதி தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது.

கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில் நளினி நீங்கலாக சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்த மூன்று நபர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை தமிழ்நாடு அரசு மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் மீது மத்திய அரசின் உள்துறை, தனது 12.8.2011 நாளிட்ட கடிதத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் இந்த கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தது. இதையடுத்து இந்த மூவருக்கும் செப்டம்பர் 9 ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில்ராமதாஸ்-வைகோ-திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு  அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் இந்த மூவரையும் தூக்கிடக் கூடாது என்ற கோஷத்துடன் களமிறங்கி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்த விஷயத்திற்காக தீக்குளித்து மாண்ட சம்பவங்களும் நடந்தேறின. இந்த தூக்குத் தண்டனை கைதிகள் விஷயத்தில் எனக்கு எந்த அதிகாரமுமில்லை என்று ஆரம்பத்தில் கூறிய முதல்வர் ஜெயலலிதா, பின்னர் 'நமக்கேன் வம்பு' என்ற பாணியில், இவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ் ஆர்வலர்களின் கோபத்திலிருந்து தன்னைக் காத்துக் கொண்டார்.

காஷ்மீர் மாநில முதல்மந்திரி உமர் அப்துல்லா இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
''
ராஜீவ் கொலைக் கைதிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி கோரி தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். அதேபோல், பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த அப்சல் குருவுக்கும் கருணை காட்டும்படி காஷ்மீர் சட்ட சபையில் தீர்மானம் போட்டால் அரசியல் கட்சியினரும் மற்றவர்களும் மவுனமாக இருப்பார்களா? இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்'' என்று அவர் டுவிட்டர் இணைய தளத்தில் கேட்டு உள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியென்றால்உமர்  அப்துல்லாஹ் கேள்வியும் நியாயம் தானே? 
மற்றொருபுறம்  இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இவர்களின் தண்டனையை  எட்டு  வாரங்களுக்கு  தள்ளி வைத்து தீர்ப்பளித்துள்ளது. இந்த மூவர் தூக்குத் தண்டனை விஷயத்தில் மட்டுமல்லாது ஒட்டு மொத்தமாக தூக்குத்   தண்டனையே  கூடாது என்ற கருத்து இன்று வலுப்பெற்றுள்ளது.

முதலாவதாக தூக்குத் தண்டனை கூடாது என்று இன்று கோஷம் போடுபவர்கள் உண்மையில் தூக்குத் தண்டனைக்கு எதிரானவர்கள் என்பது உண்மையானால், அவர்களின் கோஷம் இவ்வளவு நாள் எங்கே மறைந்திருந்தது? ஏனெனில் இந்தியாவில் தூக்குத் தண்டனை முதன் முதலாக இந்த மூவருக்குத் தான் விதிக்கப்பட்டுள்ளதாஇதுவரை எவருக்குமே தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட வில்லையா? அந்த தண்டனைகள் நிறைவேற்றப் பட்டதில்லையா? சமீபத்தில் கூட குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 31 பேரில் 11 பேருக்கு  தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதே! அப்போது இந்த மனித உரிமை போராளிகள்[?], '' தூக்குத் தண்டனையா? கூடாது. இந்த தீர்ப்பு செல்லாது. நீதிமன்றமே! தீர்ப்பை மாத்திச் சொல்லு என்று குதிக்கவில்லையே? காரணம் அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பதாலாதகுந்த சான்றுகளின்றி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல்குரு கருணை மனுவையும் ஜனாதிபதி நிராகரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதே! அந்த வகையில் அப்சலின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு அவருக்கு தூக்குத்தண்டனை உறுதிப் படுத்தப்படும்போது இதே போன்று இந்த மனிதநேயர்கள்[?] அப்சலை தூக்கில் போடாதே என்று போராடுவார்களோ?

மேலும் ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்டவர்கள் அனைவருமே தூக்கு கயிறை எதிர்நோக்கியிருக்க, இவர்களோ இந்த மூவரை மட்டும் முன்னிலைப் படுத்தி போராடுவதன் மூலம் இவர்களின் நோக்கம் என்பது தூக்குத்தண்டனையை ஒழிப்பதல்ல; மாறாக விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான மூவரை காப்பதே என்று புலப்படுகிறது. மேலும் இந்த மூவரின் உயிர் பற்றி இரக்கம் காட்டும் இவர்கள், இந்த மூவரின் தலைவரான பிரபாகரனின் விடுதலைப்புலிகள் இலங்கையில் முஸ்லிம்களை கருவருத்தபோது, இன்று மனிதநேயம் பேசும் இந்த வைகோ சீமான் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் வாய்திறந்ததுண்டா? ஏன் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லையா? அப்போது இவர்களுக்கு தமிழ் உணர்வு எங்கே போனது? ஒரு விசயத்தில் இவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதாவது பாதிக்கப்படுவது தமிழனே என்றாலும் அவன் இந்துவாக இருக்க வேண்டும் அல்லது விடுதலைப் புலியாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த தமிழ் ஆர்வலர்கள் ஆர்த்தெழுவார்கள். ஏனெனில் இவர்களில் ஒருவர், பால்தாக்கரேயை வைத்து 'இலங்கை இந்துத் தமிழர் பாதுகாப்பு மாநாடு' நடத்தியவர்தானே!

அடுத்து இந்த மூவரின் தூக்குத் தண்டனையை எதிர்ப்பவர்கள் வைக்கும் வாதம் என்னவெனில், இந்த மூவரும்  ஏற்கனவே இருபது ஆண்டுகளை கடந்து சிறையில் தண்டனை அனுபவித்துள்ள நிலையில் தூக்குத் தண்டனை என்பது அவர்களுக்கு விதிக்கும் இரண்டாவது தண்டனையாகும் என்கிறார்கள். இது மேலோட்டமாக பார்க்கும் போது சரியானதாக இருந்தாலும், இந்த தாமதம் என்பது அவர்கள் சட்டத்தின் சலுகைகளை பயன்படுத்தி கருணை மனுக்கள்  அனுப்பியதால் ஏற்பட்டதே என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும். சரி! குற்றவாளிகள் என்றும் அதிலும் தூக்குத்தண்டனை குற்றவாளிகள் என்றும் உறுதிப்படுத்தப்பட்ட இம்மூவரின் சிறை ஆண்டை கணக்கிடும் இவர்கள், வெறும் விசாரணைக் கைதிகளாக முஸ்லிம்கள் பல ஆண்டுகள் சிறையில் கழித்ததை என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா? அவர்களுக்காக குரல் கொடுத்ததுண்டா? மேலும் இந்த மூவரின் தண்டனை நிறைவேற்றப்படும் விசயத்திலே ஏற்பட்ட தாமதம் குறித்து, ராஜீவ் காந்தி படுகொலையை விசாரித்த சி.பி.ஐ-யின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன்ஒரு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில்,          

'ராஜீவ் காந்தியைக் கொலை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறையில் இருந்தது ஒரு தண்டனை. தற்போது விதிக்கப்பட்டு இருக்கும் மரண தண்டனை இரண்டாவது தண்டனை. இது எப்படி நியாயம்?
'1991 முதல் எட்டு வருடங்கள் விசாரணை நடந்தது. தீர்ப்பு கிடைத்தது. அதன் பிறகு மாநில மத்திய அரசுகளிடம் குற்றவாளிகள் தரப்பில் கருணை மனுப் படலம் 12 வருடங்கள் நடந்தது. இவர்கள் மட்டும் அல்ல... இந்தியா முழுவதும் வெவ்வேறு காலகட்டத்தில் கருணை மனு போட்ட மரண தண்டனைக் கைதிகள் இப்படித்தான் காத்திருக்கிறார்கள். எனவே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மட்டும் கால தாமதம் ஏற்படவில்லை. கருணை மனு மீதான இறுதி முடிவு தெரியும் வரை தண்டனை பெற்ற குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சிறையில் இருப்பதுதான் முறை. அதுதான் இங்கேயும் நடந்தது' என்று கூறியுள்ளார். இதன் மூலம் ஏதோ இந்த மூவர் விசயத்தில் தான் இரண்டு தண்டனை என்ற தோற்றம் உண்டாக்கப் படுவதை இந்த அதிகாரியின் கூற்று தவிடு பொடியாக்குகிறது.
அதே நேரத்தில் இன்னொன்றையும் இங்கே கவனிக்கவேண்டும். ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விசயத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்த பின், ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணைமனு உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டிருந்தால், தாமதமின்றி உரிய தண்டனை நிறைவேற்றப் பட்டிருந்தால் அன்றைக்கு மக்களும் ஏற்றிருப்பார்கள். காலம் மனிதனை மறக்கச் செய்யும் ஆற்றல் படைத்தது என்பதால் ராஜீவ்காந்தி மட்டுமன்றி 15 பேர் படு கோரமாக ரத்தச் சகதியாக கொல்லப்பட்ட காட்சிகள் மக்கள் மனதிலிருந்து மறைந்து, இன்றைக்கு குற்றவாளிகள் மீது இரக்கப்படும் மனநிலையை உண்டாக்கி விட்டது. ஜனாதிபதியின் கூடுதல் தாமதம் சிலரை குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசவும்- போராடவும் வாய்ப்பை உண்டாக்கி தந்துள்ளது. மனிதர்களுக்கு இரக்கம் காட்டலாம் அது மனிதநேயம்; ஆனால் மனிதம் மறந்து மனிதனைக் கொல்லும் எவருக்கும் கடுகளவும் இரக்கம் காட்டக் கூடாது. அதனால்தான் இஸ்லாம் பாதிக்கப்படவன் இடத்திலிருந்து ஒரு செயலை அணுக சொல்கிறது. ஒரு உயிர் அநியாயமாக கொல்லப்பட்டால் அந்த உயிரைக் கொன்ற கொலைகாரனையும்  கொலை செய்யவேண்டும் என்று கட்டளையிடுகிறது இஸ்லாம். ராஜீவோடு கொல்லப்பட்ட 15 பேரின் குடும்பத்தாரிடம், உங்கள் குடும்ப நபரை கொன்றவர்களுக்கு என்ன தண்டனையளிக்க  வேண்டும் என்று அன்றைய தினம் கேட்கப்பட்டிருக்குமானால் அவர்கள் சொல்வார்கள்; இவ்வளவு கொடூரமாக கொன்ற அந்த பாவிகளை பொது இடத்தில்  கண்டம் துண்டமாக  வெட்ட வேண்டும் என்று. அதைத்தான் இஸ்லாமும் சொல்கிறது.
நல்லறிவாளர்களே!  கொலைக்குப் பழி  தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். [அல்-குர்'ஆன் 2:179 ]
அதே நேரத்தில் இன்னொரு வழிமுறையையும் இஸ்லாம் காட்டித்தருகிறது;
ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.[அல்-குர்'ஆன் 2:178]
அதாவது கொல்லப்பட்டவரின் வாரிசுகள் உரிய நஷ்டஈட்டுத்தொகை பெற்றுக்கொண்டு கொலையாளியை மன்னித்தால் அந்த கொலையாளியை தண்டிக்க வேண்டாம் என்றும் சொல்கிறது இஸ்லாம். இறைவேதத்தின் இந்த வழிகாட்டுதல் அடிப்படையில் ராஜீவ்காந்தி மற்றும் 15  பேரை கொன்ற கொலையாளிகளை மன்னிக்கும் தகுதி ராஜீவ் குடும்பத்திற்கும், கொலையுண்ட ஏனையவர்களின் குடும்பத்திற்கும் மட்டுமே உரித்தானது. ஆனால் இந்திய சட்டப்படி கொலையுண்டவருக்கு எந்தவகையிலும் சம்மந்தமில்லாத ஆளுநருக்கும்- ஜனாதிபதிக்கும் கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம் வழங்கியதுதான் குற்றவாளிகள் தப்பிப்பதற்கும், பிரச்சினைகள் உருவாவதற்கும் பிரதான காரணமாக உள்ளது.
எனவே என்ன  தான் மனிதன் மூளையை கசக்கி சட்டம் இயற்றினாலும், அது எல்லா நேரத்திலும் உரிய தீர்வைத் தராது. எல்லாம் வல்ல இறைவன் வகுத்த சட்டமே எல்லாநேரமும், எல்லா விசயத்திற்கும் முழுமயான தீர்வை தரும் என்பது  ராஜீவ் கொலை வழக்கு மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. மேலும், மரணதண்டனை நடைமுறையில் இருக்கும்போதே பயமின்றி ஒரு பிரதமரை கொத்துக்கறியாக கொடூரமாக கொன்றவர்கள் இருக்கும் நாட்டில், மரணதண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டால் நாடு என்னாகும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே மரணதண்டனை விஷயத்தை அரசியலாக்கி குளிர்காயும் அரசியல் சூழ்ச்சியை இனங்கண்டு மக்கள் விழிப்படைவது  நல்லது.

1 கருத்து:

Mohamed Faaique சொன்னது…

சரியானதொரு ஆய்வும் பதிவும். அழகான முறையில் விளக்கி இருக்கிறீர்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும்.