OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

கடலூர் மீண்டும் ஒரு போபால்!!!!!!!!! தடுக்க என்ன வழி????


கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை ரசாயனத் தொழிற்சாலைகளால், கடலூர் மற்றும் சுற்றுப்புற காற்று மண்டலத்தின் நிலை, தொடர்ந்து கவலை அளிப்பதாகவே உள்ளது.  கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை முதல் பகுதி, 2-ம் பகுதி, மற்றும் தொழிற்பூங்கா என 2,500 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளன. ஆலைகளில் பெரும்பாலானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உயிர் காக்கும் மருந்துகள், பூச்சிக் கொல்லி மருந்துகள், சாயங்கள் உள்ளிட்டவற்றைத் தயாரிப்பவை.



கடலூர் சிப்காட் ரசாயனத் தொழிற்சாலைகளால் கடலூர் மற்றும் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலம், நீர், காற்று பெருமளவு மாசுபடுகிறது.
கடலூர் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பகம், இப்பகுதி காற்றை பக்கெட் என்ற நவீன முறையில் சேகரித்து, அமெரிக்க ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி, முடிவை 2004-ல் கேஸ் ட்ரபிள் என்ற அறிக்கையாக வெளியிட்டது.÷கடலூர் காற்று மண்டலத்தில் (தொழிற்சாலைகள் பயன்படுத்தும் ரசாயனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களால்) குளோரோஃபாம், டைகுளோரோ ஈத்தேன், பென்சீன் உள்ளிட்ட, எளிதில் ஆவியாகும் கரிம வேதியல் பொருள்கள், அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட பன்மடங்கு அதிகம் இருப்பதை அறிக்கை வெளிப்படுத்தியது.
இவ்வேதியியல் பொருள்களால், கடலூர் காற்றைச் சுவாசிக்கும் மக்களுக்கு புற்றுநோய், சுவாசக் கோளாறுகள், தோல்நோய், இதயநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள்வர வாய்ப்பு இருப்பதாகவும், இவைகள் மனிதனை மெல்லச் சாகடிக்கும் தன்மை கொண்டவை என்றும், அறிக்கை எச்சரித்தது. எனவே இந்த அறிக்கையை தன்னேற்பு மனுவாக, சென்னை உயர்நீதிமன்றம் ஏற்று, விசாரணை நடத்தியது. வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே 2007-ம் ஆண்டு மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற "நீரீ' என்ற அமைப்பு, கடலூர் சிப்காட் காற்றுமண்டலத்தை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. ÷இங்குள்ள காற்றில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் 2 ஆயிரம் மடங்கு இருப்பதாக அறிக்கை தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, காற்று மாசைக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவ்வப்போது தெரிவித்தது.
ஆனால் 2009 டிசம்பர் மாதம் வெளியான மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறையின் அறிக்கை, கடலூர் சமூக ஆர்வலர்களைப் பெரிதும் அதிர்ச்சி அடையச் செய்தது.
இந்தியாவில் மோசமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட தொழில் பகுதிகளில், கடலூருக்கு 16-வது இடம் என்பதுதான் அதிர்ச்சித் தகவல். நிலம் 64 சதவீதம், நீர் 65 சதவீதம், காற்று 54 சதவீதம் பாதிக்கப்பட்டு இருப்பதாவும், மொத்தத்தில் தொழிற்சாலைகளால் கடலூர் சுற்றுச்சூழல் 77.45 சதவீதம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிக்கை தெரிவித்தது. எனவே இங்கு புதிதாக ரசாயனத் தொழில்கள் கூடாது, இருக்கும் ஆலைகளிலும் விரிவாக்கம் கூடாது என்று அறிக்கை பரிந்துரைத்தது.
ஆனால் என்ன காரணத்தாலோ இந்த நிபந்தனையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கடந்த ஏப்ரல் மாதம் விலக்கிக் கொண்டது.
இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே நீரீ மீண்டும் ஆய்வு நடத்தி, அறிக்கை ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. விவரம் வெளியாக வில்லை.÷தொடர்ந்து 15 அறிக்கைளை கடந்த ஆண்டுகளில், கண்காணிப்பகம் வெளியிட்டு உள்ளது. காற்றில் கலந்துள்ள மாசுகளில், எந்த மாற்றமும் இல்லை, ஆலைகளால் கடலூர் மக்களுக்குத்தான் ஏமாற்றம்.
மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே அவ்வறிக்கைகளின் சாராம்சம். கண்காணிப்பகம் திங்கள்கிழமை தனது 16, 17-வது அறிக்கைகளை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டது.
 2004-ல் கடலூர் காற்று மண்டலம் எத்தகைய மோசமான நிலையில் இருந்ததோ, அதேநிலையில் இன்னமும் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. சிப்காட்டில் இரு தொழிற்சாலைகள் அருகே எடுக்கப்பட்ட காற்று மாதிரிகளை ஆய்வு செய்ததில் காற்றில், 16 ரசாயனங்கள் அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட பன்மடங்கு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.÷அனுமதிக்கப்பட்ட அளவைவிட டைகுளோரோ ஈத்தேன் 7,432 மடங்கு, டைபுரோமோ மீத்தேன் 700 மடங்கு, குளோரோஃபாம் 214 மடங்கு, கார்பன் டெட்ரா குளோரைடு 45 மடங்கு, பென்சீன் 52 மடங்கு அதிகம் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
 அறிக்கையை கண்காணிப்பக ஆலோசகர் எம்.நிஜாமுதீன், ஒருங்கிணப்பாளர் அருள்செல்வன், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகழேந்தி, சிவசங்கர், ராமநாதன், ரங்கநாதன் ஆகியோர் வெளியிட்டனர்.


1 கருத்து:

காந்தி பனங்கூர் சொன்னது…

மீண்டும் ஒரு போபால் ஏற்படாமல் இருக்க இப்பவே போராடினால் தான் மக்களை காப்பாற்ற முடியும்.
முடிந்தால் என் தளம் பக்கம் வாருங்கள் நண்பா. www.panangoor.blogspot.com