OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

தடதடக்கும் அமெரிக்கப் பொருளாதாரம்… !


அமெரிக்கா எத்தனை பலமாக தனது வேர்களை ஆழமாக உலகெங்கும் பரப்பியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இன்னுமொரு வாய்ப்பு… இந்த வாரம் கிடைத்தது.

அமெரிக்காவின் கடன் தர வரிசையை (credit rating) உலகின் முன்னணி நிதி ஆலோசக அமைப்பான ஸ்டான்டர்ட் அண்ட் புவர் குறைத்துவிட்டது. கிட்டத்தட்ட கடந்த 70 ஆண்டுகளாக அமெரிக்காவின கடன் தர வரிசை ‘AAA’ என்ற அதி உயர் தரத்தில் இருந்தது.

அதுஎன்ன கடன் தர வரிசை?

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் பாங்கு மற்றும் வசதிதான் கடன் தர வரிசை என்று சொல்லப்படுகிறது. கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவது, வாங்கிய கடனுக்கு மிகச் சிறந்த வட்டியைத் தருவது, கடனை மிகச் சரியான திட்டங்களுக்கு பயன்படுத்துவது என அமெரிக்கா எல்லா விதத்திலும் AAA என்ற அதி உச்ச நிலையில் இருந்தது அமெரிக்கா, இதுநாள் வரை.

இதனால் உலக நாடுகளும், சர்வதேச வங்கிகளும், சர்வதேச நிதி அமைப்புகளும், பெரும் நிறுவனங்களும் தங்களது பணத்தை அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்வதையே மிகவும் பாதுகாப்பானதாகக் கருதி பணத்தை முதலீடு செய்து வந்தனர். குறிப்பாக சீனா போன்ற நாடுகள், கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர்கள் வரை அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன.

ஆனால், கடந்த ஒரு மாதமாகவே அமெரிக்கா புதிய நெருக்கடியில் சிக்கியது. அதாவது அந்த நாடு எவ்வளவு கடன் வாங்கலாம் என அந் நாட்டு நாடாளுமன்றம் நிர்ணயித்த அளவை தொட்டுவிடும் அளவுக்கு வந்துவிட்டது நிலைமை.

அதாவது இந்த அளவை தாண்டிவிட்டால் புதிய கடன் வாங்குவது சிக்கலாகிவிடும். எனவே அளவை உயர்த்த வேண்டும், அல்லது கடனே வாங்கக் கூடாது. இரண்டாவது சாத்தியமில்லாத சமாச்சாரம்.

அமெரிக்காவின் கடன் அளவு 14.3 டிரில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அளவை கடந்த 2ம் தேதியே அமெரிக்கா தொட்டுவிட்டது.

இதனால் கடன் அளவை உடனடியாக உயர்த்தி நி்ர்ணயிக்க வேண்டிய நிலைக்கு அதிபர் பராக் ஒபாமா தள்ளப்பட்டார். ஆனால், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சிக்கே பெரும்பான்மை இருந்ததால், அங்கு அதற்கான தீர்மானத்தை ஒபாவால் நிறைவேற்ற முடியவில்லை.

இது தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமானால், குடியரசுக் கட்சியினரை தாஜா செய்ய வேண்டிய நிலை.

2ம் தேதிக்குள் கடன் அளவை உயர்த்தாவிட்டால், எந்த அமைப்பிடமிருந்தும் அமெரிக்காவால் நிதி திரட்ட முடியாது என்ற நிலைமை ஏற்பட்டது. அந்த நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாது, மருத்துவமனைகளுக்கு மருந்து கூட வாங்க முடியாது என்ற நிலை உருவானது.

ஒருவழியாக ஆகஸ்ட் 1ம் தேதி குடியரசுக் கட்சியினர் சமரசமாகி, மேலும் 2.5 டிரில்லியன் வரை கடன் வாங்கும் அளவை உயர்த்த ஒப்புக் கொண்டனர். ஒரு தற்காலிக நிம்மதி அமெரிக்காவுக்கு.

ஆனால் புதிதாக முளைத்துள்ள பிரச்சினை கொஞ்சமல்ல…

உலகப் பொருளாதாரத்தையே நிர்ணயிக்கும் ஒரு வல்லரசு நாடு, தனது செலவுத் திட்டங்களையும் கடன் திட்டங்களையும் கூட முறைப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதை சர்வதேச நிதி அமைப்புகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஒருவேளை குடியரசுக் கட்சியினர் விட்டுக் கொடுக்காமல் இருந்திருந்தால்.. கடந்த 3ம் தேதி முதல் அமெரிக்கா, பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டியிருக்கும். அதாவது அந்த நாட்டில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை அங்கிருந்து எடுக்க ஆரம்பித்திருப்பர். அது நடந்திருந்தால், அமெரிக்காவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீட்டு மாளிகை மாதிரி சரிந்திருக்கும்.

இதனால்தான் ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் அமைப்பு, அமெரிக்காவின் தரத்தை AAAவில் இருந்து AA+ என்ற நிலைக்கு தரம் குறைத்துவிட்டது. இனி ஏகபோகமாக அதிகாரம் செலுத்த முடியாது அமெரிக்காவால். கடன் கொடு என இத்தனை காலம் அதிகாரமாய் கேட்டு வந்த அமெரிக்கா, இனி கெஞ்ச வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார நிலைமையை இந்த தர வரிசை இறக்கம் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டதையடுத்து, உலக நாடுகள் முழுவதுமே பயம் பரவிவிட்டது.

இதன் விளைவுதான் உலக பங்குச் சந்தைகளில் பெரும் சறுக்கல்கள் தொடர்கின்றன. இந்திய பங்குச் சந்தைகளான மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் கடந்த வெள்ளிக்கிழமை பெரும் சறுக்கு சறுக்கின. இன்றும் அந்த சறுக்கல் தொடர்ந்தது.

அது ஏன் அமெரிக்காவில் தேள் கொட்டினால் இந்தியாவில் நெறி கட்டுகிறது?

அமெரிக்கா மூலம் அவ்வளவு வருமானம் ஆசிய நாடுகளுக்கு. இந்த நாடுகளைத்தானே அமெரிக்கா பல விஷயங்களுக்கு நம்பி இருக்கிறது. கொஞ்சம் பச்சையாக சொன்னால், முதலாளி சறுக்கி விழுந்தால் கூலிகளின் நிலைமை என்னாகும்… அதேதான் இப்போது நடக்கிறது!

இந்த பாதிப்பு தனி நபர்கள், நிறுவனங்களோடு நின்றுவிடுவதில்லை. இவற்றின் தாக்கம் தேசத்தின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் மீதும் இருக்கும் என்பதே உண்மை.

பங்குச் சந்தைகள் இப்படி சரிந்து கிடப்பதால், இப்போதைக்கு எல்லோருமே தங்கத்தில் முதலீடு செய்யக் கூடும். எனவே இன்னும் சில மாதங்கள் – வருடங்களுக்கு வரலாறு காணாத விலை உயர்வு என தங்கம் பற்றி செய்தி படித்துக் கொண்டிருக்க வேண்டி வரலாம்!

2 கருத்துகள்:

saravananfilm சொன்னது…

உங்கள் பதிவு நன்றாக இருந்தது

hot tamil actresses

Mohamed Faaique சொன்னது…

நல்ல பகிர்வு நன்பா..... நன்றி