OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

அவனை நிறுத்த சொல் நான் நிறுத்துகிறேன்

 
க்களை பாதுகாக்க வேண்டிய அரசே, அந்த மக்களை மரணப் படுகுழிக்கு தள்ளும் பாழாய்ப்போன மது வியாபாரத்தை செய்து வருகிறது. மது விற்பனையின் மூலம் கோடிகள் கஜானாவை நிறைப்பதால், என்னதான்  பூரண மதுவிலக்கு கோஷங்கள் எழுப்பப்பட்டாலும் மது எனும் பொன் முட்டையிடும் வாத்தை அறுக்க அரசு தயாராக இல்லை. நேரடியாக பூரண மதுவிலக்கு இல்லை  என்று சொல்ல திராணியின்றி,  அரசு  பல்வேறு நொண்டிச் சாக்குகளை இந்த விசயத்தில் சொல்லி வருகிறது. அதில்  ஒன்றுதான் ''பக்கத்து மாநிலங்கள் மதுவிலக்கு கொண்டு வந்தால்தான் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர முடியும்' என்ற அமைச்சரின் பதில்.  
 
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பா.ம.க. எம்.எல்.ஏ. கலையரசு (அணைக்கட்டு தொகுதி) பேசும்போது, ''தமிழக அரசின் நிதி நிலையைப் பற்றி கவலைப்படாமல் லாட்டரி சீட்டை ஒழித்ததுபோல, பூரண மதுவிலக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பேச,
 
இதற்கு பதிலளித்த  மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், ''மக்கள் உயிரோடு விளையாடும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மதுவின் தீமையை இந்த அரசு உணராமல் இல்லை. அதில் மாற்றுக் கருத்தும் கிடையாது. இருந்தபோதிலும், பக்கத்து மாநிலங்கள் மதுவிலக்கை கொண்டு வராத நிலையில், தனித்தீவு போல நாம் மட்டும் மதுவிலக்கு கொண்டு வந்தால் வெற்றி கிடைக்காது. பக்கத்து மாநிலங்களில் மதுவிலக்கை அமல்படுத்தினால்தான், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை கொண்டு வர முடியும். இல்லாவிட்டால், கள்ளச்சாராயத்திற்கும், சமூக விரோத செயல்களுக்கும் அது வழிவகுத்துவிடும்'' என்று கூறியுள்ளார். 
 
அமைச்சரின் பதிலை கூர்ந்து கவனித்தால் எவ்வளவு நகைச்சுவையானது என்பது புலப்படும். அண்டை மாநிலங்களில் பூரணமதுவிலக்கு அமுல்படுத்தப்படாமல் தமிழகத்தில் மட்டும் 
அமுல்படுத்தப்பட்டால் கள்ளச்சாராயத்திற்கும், சமூக விரோத செயல்களுக்கும் அது வழிவகுத்துவிடும் என்கிறார். அமைச்சரின் கூற்றுப்படி,  தமிழகத்தில் தற்போது 'டாஸ்மாக்' மூலம் மதுவிற்பனை அமலில்  இருக்கையில் கள்ளச்சாராயம் அறவே இல்லாமல் இருக்க வேண்டுமல்லவா? ஆனால் இருக்கிறது என்றும் ''மக்கள் உயிரோடு விளையாடும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் இதே அமைச்சர் கூறுகிறார். இதிலிருந்து புரிவது என்ன? மது விற்பனை அமலில் இருந்தாலும், பூரண மதுவிலக்கு அமலில் இருந்தாலும் கள்ளச்சாராயம் விற்பனை என்பது ஆங்காங்கே நடக்கும் என்பதுதான். எனவே பூரண மதுவிலக்கை அமலாக்கினால் அண்டை மாநிலங்கள் வாயிலாக கள்ளசாராயம் பெருகிவிடும் என்ற அமைச்சரின் கூற்று  அர்த்தமற்றது என்பது தெளிவாகிறது.
 
எனவே உப்புச்சப்பில்லாத காரணங்கள் கூறி மதுவிற்பனையை தொடர அரசு நினைப்பதைவிட, பூரண மதுவிலக்கை அமுல்படுத்தி, கள்ளச் சாராயத்தையும் கட்டுப்படுத்தி, தமிழக அரசை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ வழிவகை காண முதல்வர் முயற்ச்சிக்கலாமே?

கருத்துகள் இல்லை: