கடல்வளமும், நிலவளமும் கார்பரேட் கைகளில்...?
கடந்த திமுக அட்சியின் போது கடலூர் மாவட்டம் துவங்கி நாகை மாவட்ட எல்லைவரை உள்ள கடற்கரை பகுதிகளை மொத்தமாக இந்திய பெரு முதலாளிகளிடமும், பன்னாட்டு நிறுவனங்களிடமும் விற்பனை செய்த அவலம் நடந்தது. இந்த பகுதிகளில் பல்வேறு நிறுவனங்களை தங்களது கடுமான பணிகளை துவங்கி உள்ளனர். விவசாய நிலங்களும், கடற்கரையும் இந்த நிறுவனங்களால் ஆக்ரமிக்கபட்டன. குறிப்பாக கடலூரில் இந்த ஆக்ரமிப்பு அதிகம் நடத்தது. கிட்டதட்ட 7000 ஏக்கர் மேல் நிலங்கள் பல நிறுவனங்களால் வாங்கப்பட்டது. அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்ட இந்த நிலங்கள் ஏதோ எதற்கும் பயன்படாத நிலங்கள் அல்ல. சவுக்கை, முந்திரி, மணிலா, நெல் என பல வகை சாகுபடிகள் நடந்த இடங்களாகும்
மற்றொரு பார்வையில் இது விவசாயிகளுக்கும் நிறுவனங்களுக்குமான வியாபாரம் மட்டுமல்ல. இந்த நிலங்களை நம்பி வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாய கூலித்தொழிலாளிகள், மீனவர்கள் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டதும் ஆகும். ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. கடலூரில் இரவு 12 மணிவரை பத்திர பதிவு அலுவலகங்கள் இயங்கிய அவலம் நடந்தது. தங்கள் தாய்மடியான நிலத்தை கொடுக்க மறுத்த விவசாயிகள் காவல்துறை மிரட்டலுடன் அடக்கப்பட்டனர், அவர்களுக்கும் அடங்காதவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் மிரட்டப்பட்டனர். இன்று கடலூர் மாவட்ட கடற்கரையோரம் நாளைய வாழ்க்கையை தொலைத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் என்று விரட்டப்படுவோம் என தெரியாமல் அலைந்து வருகின்றனர்.
வரும் நிறுவனங்கள்:
1270 ஏக்கர் பரப்பளவில் கடலூர் பவர் கார்பரேஷன் லிமிட்டெட் என்கிற அனல் மின்நிலையம் தியாகவெளி, நொச்சிகாடு, நடுதிட்டு, சித்திரப்பேட்டை ஆகிய கிராமங்களை உள்ளடக்கி வருகிறது. 1380 ஏக்கர் பரப்பளவில் எஸ்.ஆர்.எம் அனல் மின்நிலையம் பூவாலை, பால்வாத்துன்னான், வேலங்கிப்பட்டு, அலமேலுமங்காபுரம், மணிக்கொள்ளை ஆகிய கிராமங்களை உள்ளடக்கி வருகிறது. 1210 ஏக்கர் பரப்பளவில் நாகார்ஜுனா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பெரியகுப்பம், பேட்டை நகர், அய்யம்பேட்டை ஆகிய கிராமங்களை உள்ளடக்கி வருகிறது. 730 ஏக்கர் பரப்பளவில் குட் எர்த் கப்பல் கட்டும் தொழிற்சாலை வேலங்கிராயன் பேட்டை, புதுக்குப்பம், கரிகுப்பம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி வருகிறது. 400 ஏக்கர் பரப்பளவில் சைமா டெக்ஸ்டைல் பார்க் கோபாலபுரத்தருகில் வருகிறது. 1181 ஏக்கர் பரப்பளவில் ஐ.எல் & எப்.எல் அனல்மின் நிலையம் கொத்தட்டை, அரியகோஷ்டி, வில்லியநல்லூர், பரங்கிப்பேட்டை ஆகிய பஞ்சாயத்துகளில் பல கிராமங்களை உள்ளடக்கி வருகிறது.
ஏற்கனவே கடலூர் முதுநகர் துறைமுகத்தினை தொடர்ந்து சிப்காட் 1 இல் கிட்டதட்ட 600 ஏக்கரில் 25 மருந்து மற்றும் இரசாயன கம்பெனிகள் இயங்கி வருகின்றன. இதுவல்லாமல் கியூஸெக்ஸ், கிளாரியண்ட், பயோனியர், பாண்டியன் கெமிகல்ஸ், பாயர், ஆரோகிமா நிறுவனங்களும், சிப்காட் 2 இல் 200 ஏக்கர் பரப்பளவில் கெப்ம்ளாஸ்ட் கெமிக்கல் கம்பெனியும் இயங்கி வருகின்றன. இதுவல்லாமல் 100 ஏக்கர் பரபளவில் ஈ.ஐ.டி பாரி கம்பெனி நிலத்தை வளைத்துள்ளது.
ஆக மொத்தத்தில் இரசாயணம், மருந்துவகைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அனல் மின்நிலையம் ஆகியவைகள் கடலும் கடல் சார்ந்த விவசாய நிலங்களையும் கைகளில் வைத்துள்ளன. கடலூர் முதுநகரிலிருந்து பரங்கிப்பேட்டை வரை உள்ள 100 சதுர கிலோமீட்டர் இவர்களது ஆளுகைக்குள் வந்துள்ளது அல்லது வரப்போகிறது. அதாவது கிட்டதட்ட 75 கிராமங்கள் அடியோடு விரட்டப்படும் நிலை விரைவில் உருவாகும்.
வேலை வாய்ப்பு உருவாகிறது?
அதாவது தமிழக இளைஞர்களுக்கு ஒரு நாள் கூலி 300 எனில் வடமாநில இளைஞர்கள் ஒரு நாளைக்கு 100 ரூபாய்தான் பெருகின்றனர். குறைந்த கூலிக்கு வட மாநில இளைஞர்களை புரோக்கர்கள் பிடித்து வருவதால் இப்பகுதி இளைஞர்களுக்கு அதுக்கூலி வேலைக்கூட கிடைப்பதில்லை. ஆயிரக்கணக்கில் கடலூரின் கடற்கரையோர கிராமங்களில் வடமாநில இளைஞர்கள் தங்கி உள்ளனர். இந்த உழைப்புச் சுரண்டல் கடுமையான சமூக முரண்பாடுகளை கடலூர் மாவட்டத்தில் உருவாக்குகிறது. மொத்த கம்பெனிகளும் பல்லாயிரம் மக்களை விரட்டிவிட்டு, நிலங்களை எடுத்து வேலை கொடுப்பது மிகவும் சிலருக்கே. கேட்டால் திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கமுடியும் என்ற வாதம் அறிவுஜீவிகளால் முன்வைக்கப்படுகிறது. அவர்களிடம் உள்ள மீன்பிடிக்கும் திறமையும், விவசாய சாகுபடி திறமையும் கட்டாயமாக பிடுங்கப்படுவது ஏன் கணக்கில் கொள்ளப்படுவது இல்லை. சராசரியாக ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் பத்து பேருக்கு வேலை கிடைக்கும் என்றால் இப்பகுதியில் பிடுங்கபட்டுள்ள நிலங்களில் எவ்வுளவு மக்கள் பிழித்திருப்பார்கள் என்பதையும், 20 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் எவ்வுளவு பேர் வேலையிழக்கப் போகிறார்கள் என்பதையும், இப்படி வேலை இழப்பவர்கள் மாவட்டத்தின் நகர்புறங்களை நோக்கி புலம்பெயரும் போது ஏற்படும் சமூக மாற்றங்களும் மிகவும் சிக்கலை உருவாக்கும் தன்மை சார்ந்தவை.
விவசாயிகளுக்கு இழப்பீடு!
ஆரம்பத்தில் மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்த விவசாயிகள் பல சங்கங்களை அமைத்து போராடத்துவங்கினர். இதில் பல கருத்துக்கள் உள்ள அமைப்புகள் உள்ளது. சில அமைப்புகளின் நோக்கம் கூடுதல் பணம். சில அமைப்புகள் விவசாயத்திற்கு என்று வாங்கப்பட்ட நிலங்களில் கம்பெனியை அனுமத்திக்க முடியாது என்று கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் அவர்கள் சார்ந்த பிரச்சனையாக மட்டுமே இப்பிரச்சனை அணுகப்பட்டது. ஆனால் இந்த நிலங்களை நம்பி வாழ்ந்த நிலமற்ற தொழிலாளிகள், குத்தகை விவசாயிகள் அவர்களது குடும்பங்கள், கடலோரத்தில் வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரம் போன்றவை பொது வெளியில் விவாதத்திற்கு வரவில்லை. அவை தற்போதுதான் பேசப்படுகிறது.
தமிழநாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய தொழிற் சங்க மையம், வாலிபர், மாதர், போன்ற அமைப்புகள் அங்கம் வகிக்கக்கூடிய "கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம்" என்ற அமைப்பின் சார்பில் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொளபடுகிறது.
தொழில்மயமும் சுற்றுசூழலும்..
தொழிற்சாலைகள் வருவதை யாரும் வரவேற்கவே செய்வார்கள். ஆனால் அது என்ன தொழிசாலை, எவ்வுளவு பேருக்கு வேலை கொடுக்கும், என்ன உற்பத்தி செய்யும், எத்துனை பேரின் வாழ்வை அழிக்கும், சுற்றுசூழலை எப்படி பாதிக்கும் போன்ற பக்க விளைவுகளை பார்க்காமல் தொழிற்சாலை வந்தால் வேலைவாய்ப்பு பெருகும் என்று கூறுவதால் எந்த பயனும் இல்லை. உலகமயம் மூலதனம் லாப வேட்டைக்காக எந்த கொடூர செயலுக்கும் தயாராக இருக்கும். ஒருப்பக்கம் அத்துகூலிகளாக தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டி மற்றொரு பக்கம் எந்திரங்களை புகுத்தி முடிந்த அளவு ஆட்களை குறைக்கும். இயற்கை வளங்களின் மீது எந்தவித அக்கரையும் இல்லாமல் சுரண்டுவார்கள்.
கடலூர் கடற்கரையோரம் இரசாயணம், மருந்து, எண்ணெய், நிலக்கரியை பயன்படுத்தும் அனல் மின்நிலையம், கப்பல்கட்டும் தொழிற்சாலை போன்றவை வரிசையாக வருவதால் இனி கடலூர் கடற்கரை மீன்பிடிக்க இயலாமல் போகும். மேற்கண்ட அத்துனை கம்பெனிகளின் கழிவுகளும் கடலில்தான் கலக்கும். அனல் மின்நிலையங்களின் கொதிநீர் கடலில் கலந்துக் கொண்டே இருக்கும். மற்றொரு பக்கம் மக்கள் நெருக்கமாக வாழும் 75 கிராமங்களுக்குள் அருகருகில் மூன்று அனல் மின்நிலையங்கள் வருவதால் அவைகளின் சாம்பம் மற்றும் மாசு கிராமங்களை போர்வை போல பரட்ந்து போர்த்தும். இராட்சச ஆழ்துளை குழாய்கள் மூலம் நிலத்தடி நீர் உரிஞ்சு எடுக்கப்படுவதால் கடல்நீர் விவசாய விளைநிலங்களை நோக்கி ஈர்க்கப்படும்.
ஆக மீன்வளம், நீர்வளம், நிலவளம், மனிதவளம் இவைகள் மொத்தமாக புறக்கணிக்கப்படும் தொழில்மயம் யாருக்காக? முலதனம் மேலும் மூலதனத்தை பெருக்க மக்களை சுரண்டுகிறது. வளர்ச்சி என்ற பெயரில் இதை ஆதரிப்பதா அல்லது உற்பத்தி சாதனங்களை இழந்த மக்களின் வாழ்வாதரத்தை பாதுகாக்க அவர்கள் பக்கம் நிற்பதா? நீங்கள் மூலதனத்தின் பக்கமா அல்லது உழைக்கும் மக்கள் பக்கமா? என்ற முரண்பாடு முற்றி வருகிறது.
நன்றி: B.S.Siraj - Blog
2 கருத்துகள்:
//வடமாநில இளைஞர்கள் வேண்டாம் என்பதல்ல இப்பகுதி இளைஞர்களின் கோரிக்கை. அவர்களை அடிமை போல நடத்துவதும். சமவேலைக்கு சமகூலி கொடுக்காமல் சுரண்டுவதும் தங்களை பாதிக்கிறது என்கிறார்கள்//
மனதை பாதிக்கிறது...
நல்ல பதிவு.. உழைப்பே தனிமனித மூலதனம்...
இந்த விவசாய பூமியில் இருந்துகொண்டு உணவுக்காக கையேந்தும் நிலை வரபோகிரத்தை எண்ணி வேதனையடைகிறேன்.
பாதுக்காக்க வேண்டிய அரசாங்கமே கூட்டிக் கொடுக்கும் போது நாம் என்ன செய்ய???
கருத்துரையிடுக