OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 9 மே, 2012

யோசிப்பாரா சுப்பிரமணியன் சுவாமி?


"சேது சமுத்திர கப்பல் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்படும் ஆறாவது வழித்தடத்தில் ராமர் பாலம் இருப்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள். அதனால், அந்தப்பகுதியை தேசிய புராதன நினைவுச்சின்னமாக அறிவிக்கவேண்டும். ராமர் பாலத்துக்கு ஆதரவாக உள்ள இந்து மக்களின் உணர்ச்சி வேகத்தால், மத்திய அரசு தெளிவற்ற நிலையில் உள்ளது..." - இப்படிக் கூறியிருப்பவர் சுப்பிரமணியன் சுவாமி. சேது சமுத்திரம் திட்டம் செயல்படுத்தப்படுகிற பகுதியில்தான் ராமர் பாலம் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கும் அதே சுப்பிரமணிய சுவாமி.






சேது சமுத்திரம் திட்டம் இன்றைக்கு மீண்டும் ஒருமுறை விவாதப் பொருளாகி இருக்கிறது. வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் நாடு முழுக்க குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கியிருக்கின்றன. வேண்டும் என்று சொல்பவர்கள் அறிவியலைக் காரணம் காட்டுகிறார்கள். வேண்டாம் என்பவர்கள் ஆன்மீகத்தை துணைக்கு அழைக்கிறார்கள். சுற்றுச்சூழல் மாசுபடும் என்பதை காரணமாக முன்னிறுத்தி, திட்டத்தை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் கருத்துக்கள், கவலைகள் ஏற்றுக் கொள்ளத்தக்கவையே.

ராமர் பாலம் என்று இல்லாத ஒரு வாதத்தை, மக்களின் மத உணர்வுகளை, நம்பிக்கைகளை உசுப்பி விடக்கூடிய ஆன்மீக விஷ(ய)த்தை கையில் எடுத்துக் கொண்டு பிரச்னை செய்வதுதான், ஆபத்தான. அச்சுறுத்தலான விஷயம். சேது சமுத்திரம் திட்டத்தால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும். கடலியல் சூழல் பாதிக்கும். அங்கு வாழும் கோடிக்கணக்கான கடல் உயிரினங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று காரணங்கள் காட்டினால், மறுப்பின்றி அவற்றை ஏற்றுக் கொள்ளலாம்; தவறில்லை. ஆனால், இந்தத் திட்டத்தை முடக்குவதற்காக ராமரை துணைக்கு அழைப்பதில் எந்த நியாயமும் இல்லை.

நியாயம் இல்லை என்பது மட்டுமல்ல... அவர்கள் விடுவது கப்சாவாக இருந்தாலும், அதிலும் கூட ஒரு லாஜிக்இல்லை. ராமர் பாலத்துக்கு ஆதரவாக இந்துக்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்என்று சுப்பிரமணியன் சுவாமி சொல்லியிருக்கிறார். இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிற நானும் கூட, கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு இந்துதான். எனக்குள் அப்படியாக எந்த உணர்ச்சிக் கொந்தளிப்பும் இல்லை... ராமர் மீது சத்தியம். எனக்கு மட்டுமல்ல, என்னைச் சுற்றி இருக்கிற சக இந்து நண்பர்கள், உறவினர்கள் யாருக்கும் ராமர் மீது இருக்கிற அக்கறை, ராமர் பாலத்தின் மீது இல்லை என்பதை உறுதியாகவே இங்கு கூறமுடியும்.

ராமர் பாலத்தின் மீது இந்த அளவுக்கு அக்கறையாக இருப்பவர்கள் யார் என்று பார்த்தால்... அவர் பெயரை உச்சரித்த படியே, இந்த நாட்டில் எக்கச்சக்கமான மதக்கலவரங்களையும், மாபெரும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியவர்கள்தான் கணணுக்குத் தெரிகிறார்கள். உணர்ச்சிக் கொந்தளிப்பு, இந்த மதவாதிகளிடம், அடிப்படைவாதிகளிடம்தான் இருக்கிறதே தவிர, சாமானிய இந்துக்களிடம் இல்லை. அவர்களுக்கு அதற்கெல்லாம் கவலைப்பட நேரமில்லை. ராமர் பாலத்தையும் கடந்து, ஒவ்வொரு நாளிலும் அவர்களுக்கு ஆயிரம் பிரச்னைகள்.

ராமர் பாலம்... ராமர் பாலம் (உண்மையில் அது, ஆதம் பாலம் எனப்படுகிற மணல் திட்டு!) என்று கோஷமிடுபவர்கள், அது ராமர் பாலம் என்பதை (அறிவியல் ரீதியாக முடியாவிட்டாலும் கூட, ஆன்மீக ரீதியிலாவது) நிரூபிக்கவேண்டும். முதலாவதாக, ராமர் பாலம் என்று கருதப்படுகிற, அழைக்கப்படுகிற அந்த மணல் திட்டு, நிஜத்தில் ஒரு இயற்கை அமைப்பு. இரு பெரிய நீர்பரப்புகளை இணைக்கிற ஒரு குறுகிய நிலப்பரப்பு அது. இதுபோன்ற இயற்கை அமைப்புகளுக்கு இஸ்த்மஸ் (isthmus)’ என அறிவியல் பெயர் உண்டு.

சில இடங்களில் இவை கடல் மட்டத்துக்கு மேலாக இருக்கும். இங்கே அது கடலில் மூழ்கி இருக்கிறது. இஸ்த்மஸ்அமைப்பை ஒட்டி மணல் படிவதன் காரணமாக, அந்தப்பகுதியில் ஆழம் சற்றுக் குறைவாக இருக்கிறது. உலகின் பல கடற்பகுதிகளில் இப்படியான இஸ்த்மஸ்இணைப்பு உண்டு. வட, தென் அமெரிக்க இடையே இப்படிப்பட்ட இஸ்த்மஸ்இணைப்பை வெட்டித்தான் பனாமா கால்வாய் உருவாக்கப்பட்டது. உலகில் இன்னும் பல, பல இடங்களில் இப்படி இயற்கை மணல் திட்டுக்களை வெட்டி, வழித்தடங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ராமர் பால கோஷ்டிகளுக்கு முதலில் ஒரு கேள்வி. சீதையை மீட்டெடுப்பதற்காக, ராமேஸ்வரத்தில் இருந்து ராமரும், லட்சுமணரும், இன்னபிற வானர சேனைகளும், இலங்கைக்கு பயணப்படுவதற்காக அமைக்கப்பட்டதுதான், இந்த ராமர் பாலம் என்பது உங்கள் வாதம். ரொம்பச் சரி. முதலில், ராமரும், அவரது சகோதரர் லட்சுமணனும், வானர சேனைகளும் ராமேஸ்வரத்தை அடைந்தது எப்படி? அதை விளக்குவீர்களா?


ராமேஸ்வரம் பற்றி முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். ராமேஸ்வரம் என்பது ஒரு தீவுப்பகுதி. சகலபுறங்களும் கடலால் சூழப்பட்ட தீவுப்பகுதி. மதுரையில் இருந்து ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்பவர்கள் கவனித்திருக்கலாம். மண்டபம் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டரைக் கடந்தால், கடல் வந்து விடும். அந்தக் கடலை கடக்க ரயில் பாலமும், அடுத்ததாக பஸ் பாலமும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக்கரையில் இருந்து அந்தக்கரை வரை கடலின் நீளம் 2.7 கிலோ மீட்டர். கடலின் நடுப்பகுதி ஆழமானது. சிறிய ரக கப்பல்கள் இன்றும் கூட இந்தக் கடல்பகுதியை கடந்து சென்றும், வந்தும் கொண்டிருக்கின்றன என்பதில் இருந்து இது ஆழ்கடல் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

இப்போது விஷயத்துக்கு வருவோம். ராமர் அண்ட் கோ இலங்கைக்கு போனது அப்புறம். முதலில் படை, பரிவாரங்களுடன் அவர் எப்படி ராமேஸ்வரம் போனார்? குறிப்பாக, அந்த 2.7 கிலோ மீட்டர் நீளமுடைய கடல் பகுதியை அவர் கடந்தது எப்படி? அவருடன் சென்றவை பெரும்பாலும் வானரசேனைகளே என்றாலும், ஏறக்குறைய 3 கிலோ மீட்டர் நீளமுடைய அந்த கடலை அத்தனை வானரங்களும் ஒன்றன் பின் ஒன்றாக தாவிக் குதித்து கடப்பதெல்லாம் கஷ்டம். கார்ட்டூன் படம் எடுத்தாலும் கூட இவ்வளவு பெரிய லாங் ஜம்ப்சாத்தியமில்லாத விஷயம். வானரங்களே கடக்க கஷ்டபடுகின்றன என்றால், ராமர், லட்சுமணன் போன்ற ராஜகுமாரர்களுக்கு அது ரொம்பவும் கஷ்டம்.

ஆகவே, அந்த கடற்பரப்பை கடந்து அவர்கள் ராமேஸ்வரம் சென்றடைந்திருக்கவேண்டுமானால், நிச்சயமாக இப்போது பாம்பன் பாலம் இருக்கிற இடத்திலும் அவர்கள் ஒரு பாலம் அமைத்திருக்கவேண்டும். இல்லையா? பாலம் அமைந்திருந்தால் மட்டுமே கடலைக் கடந்து ராமேஸ்வரம் அடைந்திருக்க முடியும். ஆக, ராமர் முதன்முதலாக இந்தக் கடல் பகுதியில்தான் பாலத்தைக் கட்டியிருக்கவேண்டும். பாம்பன் பாலத்தில் ரயிலில் நீங்கள் செல்லும் போது கடலை கவனித்திருந்தால், இதற்குச் சாட்சியாக இன்னும் ஒரு விஷயம் கூட புரிந்து கொள்ளமுடியும்.

இந்தக் கடல் பகுதியில், மிதக்கிற கற்களை (Floating stones) இப்போதும் நிறையப் பார்க்கமுடியும். இந்த மிதக்கும் கற்களைத்தான், பாலம் கட்ட ராமர் பயன்படுத்தியதாக சுப்ரமணியன்சுவாமிகள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். பாலம் கட்டியதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், கையைப் பிடித்து அழைத்துப் போய், இந்தக் கற்களைத்தான் காட்டுகிறார்கள். உண்மையில் இந்த மிதக்கிற கற்கள், பாலம் கட்டுகிற / கட்டப் பயன்படுத்திய கற்கள் அல்ல. இது பவளப்பாறை (Coral Reefs) வகையைச் சேர்ந்தவை. அவ்வளவே. இந்தியாவில், மன்னார் வளைகுடா பகுதி தவிர அந்தமான், லட்சத்தீவுகள் பகுதியில் இவை எக்கச்சக்கமாய் இருக்கின்றன. பசுபிக் பெருங்கடல் பகுதியிலும் இவை உண்டு.

சரி, அந்த ஆய்வு இப்போது வேண்டாம். பாம்பன் பகுதியில் ராமர் ஒரு பாலத்தை கட்டினார். ராமேஸ்வரத்தை அடைந்தார். ஏற்கனவே பாம்பனில் பாலம் கட்டிய அனுபவம் கைகொடுக்க, மீண்டும் ஒரு மெகா பாலத்தை சிங்களத் தீவுக்கு அவர்கள் அமைத்திருக்கவேண்டும். கண்ணில் படுகிற சாட்சியாக, பாம்பன் பகுதியிலேயே ராமர் பாலம் இருக்க; அதையெல்லாம் புறந்தள்ளி விட்டு, ஆள் நடமாட்டமில்லாத, அவ்வளவு சுலபத்தில் யாரும் சென்று வர முடியாத, ஆழ்கடல் பகுதியில் ராமர் பாலம் இருப்பதாகவும், அதை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கவேண்டும் என்றும், இந்துக்கள் அங்கு சென்று பூஜைகள், புண்ணியங்கள செய்யவேண்டும் என்றும் கூறுவதும் எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்?

இவ்வளவு உறுதியான ஆதாரங்கள் இருக்கையில், சுப்பிரமணியன் சுவாமி மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துமத உணர்வாளர்கள், பாம்பன் பாலம் அமைந்திருக்கும் தற்போதைய கடல் பகுதியை ஏன் ராமர் பாலம் என்று அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தக் கூடாது? பழகிய விஷயம் என்பதால், உச்சநீதிமன்றத்திலும் கூட வழக்குத் தொடரலாமே? நிலப்பரப்பில் இருந்து பல மைல் தூரம் கடந்து சென்று, நடுக்கடலில் உள்ள ஒரு ராமர் பாலத்தை இந்துக்கள் எப்படி தரிசனம் செய்யமுடியும்? அங்கு பூஜை, புனஸ்காரங்கள் செய்யமுடியும்? படகு பிடித்து மட்டுமே போகமுடியும். அதுவும், நேரம் சரியில்லை என்றால், இலங்கை கடற்படை காரர்கள் வந்து சுட்டுத் தள்ளி, ஒரேடியாக ராமரிடம் அனுப்பி விடும் ஆபத்தும் இருக்கிறது.

சுப்பிரமணியன் சுவாமியும், அத்வானியும், சுஷ்மா சுவராஜூம் வேண்டுமானால், இந்திய கடற்படை உதவியுடன், அவர்கள் குறிப்பிடுகிற ராமர் பாலத்தை தரிசித்து வரமுடியுமே தவிர... பிற எந்த இந்துவுக்கும் அது சாத்தியப்படுகிற விஷயமே அல்ல. ஆகவே, வீண் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, அனைத்து இந்து பெருமக்களுக்கும் பயன்படுகிறது போல, இப்போது பாம்பன் பாலம் இருக்கிற பகுதியை ராமர் பாலமாக அறிவித்து, அதை தேசிய புராதனச் சின்னமாக்க கோரி போராட்டத்தை மாற்றிக் கொள்ளலாம். அப்படி மட்டும் அறிவிக்கப்பட்டால், பக்தர்கள் பாம்பனிலேயே இறங்கி, ராமர் பாலத்தை பார்த்து மகிழ்வதுடன், பூஜை, வழிபாடுகளும் நடத்திக் கொள்ளமுடியும். இன்னும் அதிகளவு சுற்றுலாப் பயணிகளும் வருவார்கள். தமிழகத்துக்கு வருவாயும் பெருகும். யோசிப்பாரா சுப்பிரமணியன் சுவாமி?
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்

கருத்துகள் இல்லை: