OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 25 அக்டோபர், 2011

உங்களின் வெற்றிக்கு ஆடையின் பங்களிப்பு!!


Dress Codeசமூகத்தில் ஒரு மனிதனின் வெற்றியை, மதிப்பை, ரசனையை தீர்மானிக்கும் அம்சமாக ஆடை விளங்குகிறது. நாம் வேலைக்கு செல்லும் போதும் அல்லது கல்லூரிக்கு செல்லும் போதும் நம்மில் பலர் தங்களின் ஆடைகளை கவனம் செலுத்துவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்!. இவர்களின் இந்த செயபாடுகள், அவர்களின் வளர்ச்சியை தீர்மானிப்பதாக உள்ளது.
“ஆடையில்லாத மனிதன் அரை மனிதன் || ஆள் பாதி, ஆடை பாதி” என்பது ஏறத்தாழ அனைவருமே கேள்விப்பட்ட பொன்மொழிகள்.
நன்றாக உடை உடுத்துவதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை மற்றும் வெற்றிக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் சிலர் கூற கேட்டிருப்போம். இந்த ஆலோசனைகளை மாணவர்கள் ஒருபோதும் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம். ஏனென்றால், ஒரு மனிதனின் உயர்வுக்கு சிறப்பாக ஆடை அணிவதும் முக்கிய காரணமாகும்.
மிடுக்காக உடையணிவது உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உங்களின் தோற்றப் பொலிவை மேம்படுத்தும். ஒரு நேர்முகத் தேர்வுக்கு செல்கையில், மிடுக்காக உடையணிந்து செல்லும் நபர் தனது வேலைக்கான உத்திரவாதத்தை அதிகப்படுத்திக் கொள்கிறார். நல்ல முறையில் உடையணிந்திருக்கும் நபர் பலரின் கவனத்தைக் கவர்ந்து, அவர்களால் விரும்பப்படுகிறார்.
Celebrities – பிரபலங்களும் – ஆடைகளும்
சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் தங்களின் ஆடை விஷயத்தில் அக்கறையாகவும், கவனமுடனும் இருக்கிறார்கள். பல அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை இதற்கு உதாரணமாக கூறலாம். ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் பில் கிளிண்டன், மறைந்த ஈராக் அதிபர் சதாம் உசேன், முன்னாள் லிபிய அதிபர் கடாபி, முன்னாள் இந்தியப் பிரதமர்கள் நேரு மற்றும் இந்திரா காந்தி போன்ற பலரை உதாரணமாக கூறலாம்.
தொழிலதிபர்களில் பில்கேட்ஸ், விஜய் மல்லையா, அசிம் பிரேம்ஜி, ரத்தன் டாட்டா மற்றும் லஷ்மி மிட்டல் போன்ற பலரை உதாரணமாக கூறலாம். மேற்கூறிய வெற்றிகரமான மனிதர்கள், தங்களின் ஆடை விஷயத்தில் எப்போதுமே கவனமாக இருப்பவர்கள். ஏனெனில், அவர்களின் புறத்தோற்றத்தைப் பேணுவது அவர்களுக்கு முக்கியமான ஒன்று. ஆளுமை என்பது முக்கியமாக ஒரு மனிதனின் மனோநிலையை குறிப்பது என்றாலும், புறத்தோற்ற அம்சங்களும் ஆளுமையில் ஒரு பகுதிதான். அந்த வகையில், ஆடை அலங்காரம் என்பது ஒரு மனிதனின் ஆளுமையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
எதை மனம் விரும்புகிறது?
Campus_Students
சிலவகை மனிதர்கள் நல்லவிதமான ஆடைக்கு செலவழிப்பதை தண்டச் செலவு என்கின்றனர். ஆனால் பல மனிதர்கள், நல்ல ஆடைக்கு செலவு செய்வதை சிறந்த முதலீடு என்கின்றனர்.
பொதுவாக, அழகிய விஷயங்களையே மனித மனம் விரும்புகிறது. நன்றாக மலர்ந்த, நல்ல மனமுள்ள மலர்கள் பெரும்பான்மையோருக்குப் பிடிக்கும். இதேபோன்ற நிறைவடைந்த அம்சங்களையே இவ்வுலகம் விரும்புகிறது. ஒரு மனிதன் நன்றாக ஆடை அணிவதும் ஒரு நிறைவான அம்சம்தான்.
பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றில் நன்றாக உடையணியும் மாணவர்கள் தனி கவனத்தைப் பெற்று பாராட்டுகளையும் பெறுகிறார்கள். மேலும், பல தனியார் நிறுவனங்களில் மிடுக்கான ஆடையணியும் ஊழியர்கள் பாராட்டுதல்களுக்கு உள்ளாவதோடு, பரிசுகளையும் பெறுகிறார்கள்.
ஒரு பணிக்காக நேர்முகத் தேர்வுக்கு செல்கையில், ஒருவரின் ஆடை அலங்காரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆண்களைப் பொறுத்தவரை, சவரம் செய்த முகத்துடன், நல்ல நிறப் பொருத்தத்துடன், நல்ல பெல்ட்டுடன் ஆடை அணிந்து, காலில் ஷ¤ அணிந்து சென்றால், அவரின் தோற்றமே அவரின் வேலைக்கான உத்திரவாதத்தை ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அளித்துவிடும். தலை முடியை சீர்செய்திருப்பதும், நகங்களை வெட்டியிருப்பதும் நல்லது. வேலைக்கான நேர்முகத் தேர்வுகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த வேலைக்கேற்ற ஆடைகளை அணிந்து செல்லலாம்.
அலுவலகங்களைப் பொறுத்தளவில், அலுவலகத்தின் தன்மை, அது அமைந்துள்ள இடம் போன்ற பல அம்சங்கள், அதனுடைய பணியாளர்களின் ஆடை விஷயங்களைத் தீர்மானிக்கின்றன.
நீங்கள் இதையும் மனதில் வைத்துகொள்ளுங்க!
மிடுக்கான ஆடை என்றாலே, அதிக விலையுள்ள ஆடை என்ற அர்த்தமல்ல. அனைவராலும் ஆடைகளுக்கென்று அதிக பணம் செலவழிக்க இயலாது என்பது நடைமுறை உண்மை. நம்மால் முடிந்தளவு செலவுசெய்து எடுக்கும் ஆடையை நல்லவிதமாக பராமரித்து, அதை சரியான விதத்தில் அணிந்தாலே மிடுக்கான தோற்றம் கிடைக்கும். இருப்பதை வைத்து சிறப்பாக செய்வதே புத்திசாலித்தனம். அதேசமயம் நல்ல ஆடைக்காக செலவுசெய்வதே வீண் என்று நினைப்பதும் தவறு. “நல்லவிதமான ஆடை மட்டுமே வெற்றியைத் தந்துவிடாது, ஆனால் வெற்றியில் ஆடைக்கும் ஒரு பங்கு உண்டு”.

கருத்துகள் இல்லை: