OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 31 அக்டோபர், 2011

இது விமர்சனமல்ல - ஆறு அறிவும் இல்லாதவர்களுக்கே, ஏழாம் அறிவு


ஏழாம் அறிவு படத்தின் முடிவில் கதாநாயகன் சூர்யா சொல்வார்: "தமிழர்களுக்கு வரலாறு தெரியாததால், அறிவியல் கண்டுபிடிப்புகளை இழந்து விட்டார்கள்." உண்மை தான். 

தமிழர்களுக்கு வரலாறு தெரியாததால் தான், ஏழாம் அறிவு போன்ற வரலாற்றை திரிக்கும் பிரச்சாரப் படங்களை எடுத்து வியாபாரம் செய்ய முடிகின்றது. போதி தர்மர் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் சரி தானா, என்ற சர்ச்சை ஒரு புறம் இருக்கட்டும். படத்தின் முக்கிய கதைக்கரு, உயிரியல் யுத்தம் (Biological warfare) பற்றியது. 6 ம் நூற்றாண்டில் "தமிழனான" போதி தர்மர், சீனா சென்றிருந்த சமயத்தில், அங்கு பரவிய வைரஸ் தொற்று நோயை தடுக்கும் மருந்தை கண்டுபிடித்துக் கொடுத்திருந்தார். இன்றைய சீனர்கள், அதே வைரசை இந்தியாவில் பரப்பி, இந்திய மக்களை கொல்வதற்கு முனைகின்றனர். இதுவரை நடக்காத கற்பனைக்கதை தான். இருப்பினும், "வரலாற்றின் முக்கியத்துவம்" உணர்ந்த இயக்குனர், உண்மையான வரலாற்றுக் கதையை எடுத்து படமாக தயாரித்திருக்கலாம். "உயிரியல் யுத்தம், இருபத்தியோராம் நூற்றாண்டிற்கான நவீன போரியல் முறை" என்று இயக்குனரே நினைத்துக் கொண்டிருக்கலாம். "பயங்கரவாத எதிர்ப்பு போர்" குறித்து அமெரிக்கா பிரச்சாரம் செய்த மிகைப் படுத்தப் பட்ட அச்சமூட்டல்களின் பாதிப்பில் அவ்வாறு நினைக்கிறார் போலும். சீனாவும், இந்தியாவும் ஏற்கனவே உயிரியல் போரினால் பாதிக்கப் பட்ட நாடுகள் தான். இவை பற்றிய தகவல்களை வரலாற்று நூல்களில் இருந்து எடுத்து படமாக தயாரித்திருந்தால், "ஏழாம் அறிவின்" உயரிய நோக்கத்தை நாம் பாராட்டலாம். 


ஏழாம் அறிவை தயாரித்தவர்களின், முதலாம் அறிவில் உள்ள அரசியல் சார்புத் தன்மை, கடந்த நூற்றாண்டின் வரலாற்றை கூட பின்னோக்கிப் பார்க்க விடாது தடுக்கின்றது. இன்றைய நவீன உலகில் மட்டும் தான், பரிசோதனை சாலைகளில் உருவாக்கப்படும் நோய்க் கிருமிகள் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப் படுகின்றது, என்று நினைப்பது தவறு. பண்டைய காலங்களில், நச்சுப் பாம்புகளை பிடித்து விடுவதும் உயிரியல் போர் முறைக்குள் அடங்கும். இருப்பினும், ஐரோப்பிய காலனிய காலகட்டத்தின் பொழுது தான், பெருந்தொகையான மக்களை அழிக்கும் நோய்க் கிருமிகள் வேண்டுமென்றே பரப்பப் பட்டன. அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்த செவ்விந்திய பூர்வகுடிகளின் அழிவுக்கு காரணம், ஐரோப்பியர் காவிக் கொண்டு சென்ற கிருமிகள் என்பது வரலாற்றுத் தகவல். வெளி உலகில் இருந்து தனிமைப் படுத்தப்பட்ட கண்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு, அந்த நோய்களை எதிர்க்கும் சக்தி இருக்கவில்லை. ஆரம்பத்தில் தற்செயலாக அந்த கிருமிகள் தொற்றியிருந்தாலும், பிற்காலத்தில் இனவழிப்பு செய்யும் நோக்கில் வேண்டுமென்றே பரப்பப் பட்டன.

நம்மில் பலருக்கு, சின்னம்மை என்ற நோய் தொற்றியிருக்கலாம். அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத காலத்தில், பாமர மக்கள் அதனை "அம்பாளின் சீற்றத்தால் தொற்றும் நோய்" என்று நம்பியதால் தான், அதற்கு "அம்மை நோய்" என்று பெயர் வந்தது. சின்னம்மை பண்டைய தமிழர் சமுதாயத்தில் இல்லாத நோய். காலனிய காலத்தில் ஆங்கிலேயரால் கொண்டு வந்து பரப்பப் பட்டது. இந்த உண்மை இன்று எத்தனை தமிழருக்கு தெரியும்? ஏழாம் அறிவு திரைப்படத்தின் கதை அதுவாக இருந்திருந்தால், தமிழர்களுக்கு ஒரு வரலாற்று உண்மையை எடுத்துச் சொன்ன பெருமை கிடைத்திருக்கும். "ம்...வந்து... ஆங்கிலேயர்கள் அதனை உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தவில்லை." என்று சப்பைக் கட்டு கட்டலாம். இந்தியாவில் அம்மை நோயை வேண்டுமென்றே பரப்பியதற்கான வரலாற்று ஆவணம் எதுவும் இது வரை கிடைக்கவில்லை. அமெரிக்க கண்டத்தை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் அங்கே அம்மை நோயை பரப்பியதற்கான ஆதாரங்கள் உள்ளன.

1763
ம் ஆண்டு, அதாவது இந்தியாவை காலனிப் படுத்திக் கொண்டிருந்த அதே காலத்தில், வட அமெரிக்காவில் காலனிய போர் நடந்து கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், பிரெஞ்சு ஏகாதிபத்தியமும், இன்று கனடா என்று அறியப்படும் நிலத்திற்காக போரிட்டுக் கொண்டிருந்தன. அப்போது அங்கே வாழ்ந்த செவ்விந்திய பழங்குடி மக்களை இனவழிப்பு செய்வது ஆங்கிலேயரின் நோக்கமாக இருந்தது. வட அமெரிக்காவில் பிரிட்டிஷ் படைகளின் தலைமைத் தளபதியான Sir Jeffrey Amherst, இவ்வாறு கூறினார்:"... சின்னம்மை நோய்க் கிருமிகளை ஏவி விட்டாவது, இந்த செவ்விந்திய இனங்களை குறைக்க வேண்டும்." அவரின் உத்தரவின் பேரில், சின்னம்மை நோய்க் கிருமிகள் உள்ள போர்வைகள், செவ்விந்திய மக்களுக்கு கிடைக்கும் வண்ணம் வீசப் பட்டன. அதனால், பல ஆயிரம் செவ்விந்தியர்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க சுதந்திரப்போர் காலத்திலும் சின்னம்மை நோய் வேண்டுமென்றே பரப்பப் பட்டது. ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற புதிய அமெரிக்க அரசு, உயிரியல் ஆயுதத்தை மேலும் விரிவாக்கியது. 1942 ம் ஆண்டு, அமெரிக்காவில் 400 கறுப்பின கைதிகள் பரிசோதனை எலிகளாக பயன்படுத்தப் பட்டனர். அவர்களுக்கு தெரியாமலே, மலேரியா நோய்க் கிருமிகள் தொற்ற வைக்கப் பட்டன. பிற்காலத்தில், ஜெர்மனியில் நியூரன்பேர்க் போர்க்குற்ற நீதிமன்றத்தில், நாஜி வைத்தியர்கள் அதனை தமது தரப்பு சாட்சியமாக முன் வைத்தார்கள்.

இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜப்பானின் உயிரியல் ஆயுத விஞ்ஞானியாக இருந்தவர் Dr. Shiro Ishii. அவர் ஜப்பான் சக்கரவர்த்தியின் படைகளின் ஆக்கிரப்பில் இருந்த சீனாவின் மஞ்சூரியா மாநிலத்தில் பணியாற்றினார். அங்கிருந்த சீன, ரஷ்ய, அமெரிக்க கைதிகளின் மீது உயிரியல் கிருமிகளை தொற்ற வைத்து பரிசோதனை நடத்தினார். 1931 ம் ஆண்டு, ஜப்பான் மஞ்சூரியா மாநிலத்தை ஆக்கிரமித்ததில் இருந்து, 580000 சீனர்கள் உயிரியல் ஆயுதங்களால் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். இது, Dr. Shiro Ishii யின் குழுவினால் பக்டீரியா தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கையாகும். அமெரிக்கர்களிடம் ஜப்பான் சரணடைந்த பின்னர், Dr. Shiro Ishii க்கு மன்னிப்பு வழங்கப் பட்டது.

இலட்சக்கணக்கான சீன மக்களை படுகொலை செய்த கொலைகாரன், சுதந்திரமாக திரிய விடப்பட்டான். அநேகமாக, அமெரிக்காவின் உயிரியல் ஆயுத திட்டத்திற்கு, அவரின் உதவி பெறப் பட்டிருக்கலாம். Dr. Shiro Ishii வின் குழுவை சேர்ந்த சிலரை, சோவியத் இராணுவம் கைது செய்திருந்தது. உயரியல் ஆயுத பரிசோதனையால் பாதிக்கப்பட்ட சீன மக்களின் சாட்சியங்களை ஆதாரமாக கொண்டு, அவர்கள் மேல் வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால், அமெரிக்காவின் அன்றைய தூர கிழக்காசிய கட்டளைத் தளபதி மக் ஆர்தர், இவையெல்லாம் "கம்யூனிசப் பொய்கள்" என்று கூறினார். சில வருடங்களின் பின்னர், மக் ஆர்தரின் படைகள், கொரியாப் போரின் போது உயிரியல் ஆயுதங்களை பிரயோகித்தன. சீனாவில் கம்யூனிசப் புரட்சியின் பின்னர், இரகசியமாக ஊடுருவிய அமெரிக்க விமானங்கள் விசிறிய கிருமிகள், பயிர்களை அழித்து நாசமாக்கின. நிச்சயமாக, அமெரிக்கா இன்று வரை இந்த உண்மைகளை மறுத்து வருகின்றது.

1971
ம் ஆண்டு, கியூபாவில் பன்றிக் காய்ச்சல் என்ற புது வகை நோய் பரவியது. பல தசாப்தங்களுக்குப் பின்னர், பல உலக நாடுகளில் அந்த தொற்று நோய் பரவியிருந்ததை பலர் அறிந்திருப்பீர்கள். அன்று, பனாமாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த காஸ்ட்ரோ எதிர்ப்பு கியூபர்களிடம், பன்றிக் காய்ச்சல் கிருமிகளை கொடுத்ததாக, ஒரு சி.ஐ.ஏ, அதிகாரி பின்னர் ஒத்துக் கொண்டார். 1981 ம் ஆண்டு, கியூபாவிலும், (சோஷலிச) நிகராகுவாவிலும் ஒரு புதிய வகை தொற்று நோய் பரவியது. கியூபாவில் 188 பேர் மரணமடைந்தனர். நிக்கராகுவாவில் சுமார் 50000 பேருக்கு நோய் தொற்றி இருந்தது. 1988 ல், கியூப எதிர்ப்புரட்சியாளரான Eduardo Arocena , சி.ஐ.ஏ.யின் பணிப்பின் பேரில் நோய்க் கிருமிகளை கியூபாவினுள் கடத்திச் சென்றதாக தெரிவித்தார். 1996 ம் ஆண்டு, கிருமிநாசினி தெளிக்கும் அமெரிக்க விமானங்கள், கியூப வான்பரப்பில் தென்பட்டன. இதன் விளைவாக, உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை பாதிக்கப் பட்டது. இந்த சம்பவம் குறித்து, கியூபா ஐ.நா. மன்றத்தில் முறையிட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர், இந்தியாவிலும், இலங்கையிலும் பரவியிருந்த சிக்கின்குனியா போன்ற மர்மமான தொற்று நோய்கள் கூட, உயிரியல் போரினால் ஏற்பட்டிருக்கலாம். இவை குறித்த தகவல்களை, ஏழாம் அறிவு போன்ற திரைப்படத்தில் எடுத்துக் கூறியிருந்தால், அது தமிழ் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஊட்டியிருக்கும். மாறாக, அமெரிக்க அரசின் வெளிவிவகார கொள்கைக்கு இசைவாக எடுக்கப்படும் ஹாலிவூட் படங்களின் பாணியில் எடுக்கப் பட்டுள்ளது. தமிழனுக்கு, இந்திய தேசிய வெறி ஊட்டுவதற்காக தயாரிக்கப் பட்டது தான், ஏழாம் அறிவு. அதிகார வர்க்கத்தின் நலன் சார்ந்த அரசியல் பிரச்சாரத்தை, வரலாறு என்று கற்றுத் தருகின்றது. ஆறு அறிவும் இல்லாதவர்களுக்கே, ஏழாம் அறிவு தேவைப் படுகின்றது.
Thanks to :- Mujeebur rahman fasi   (thanks for kalaiyakam)

செவ்வாய், 25 அக்டோபர், 2011

உங்களின் வெற்றிக்கு ஆடையின் பங்களிப்பு!!


Dress Codeசமூகத்தில் ஒரு மனிதனின் வெற்றியை, மதிப்பை, ரசனையை தீர்மானிக்கும் அம்சமாக ஆடை விளங்குகிறது. நாம் வேலைக்கு செல்லும் போதும் அல்லது கல்லூரிக்கு செல்லும் போதும் நம்மில் பலர் தங்களின் ஆடைகளை கவனம் செலுத்துவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்!. இவர்களின் இந்த செயபாடுகள், அவர்களின் வளர்ச்சியை தீர்மானிப்பதாக உள்ளது.
“ஆடையில்லாத மனிதன் அரை மனிதன் || ஆள் பாதி, ஆடை பாதி” என்பது ஏறத்தாழ அனைவருமே கேள்விப்பட்ட பொன்மொழிகள்.
நன்றாக உடை உடுத்துவதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை மற்றும் வெற்றிக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் சிலர் கூற கேட்டிருப்போம். இந்த ஆலோசனைகளை மாணவர்கள் ஒருபோதும் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம். ஏனென்றால், ஒரு மனிதனின் உயர்வுக்கு சிறப்பாக ஆடை அணிவதும் முக்கிய காரணமாகும்.
மிடுக்காக உடையணிவது உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உங்களின் தோற்றப் பொலிவை மேம்படுத்தும். ஒரு நேர்முகத் தேர்வுக்கு செல்கையில், மிடுக்காக உடையணிந்து செல்லும் நபர் தனது வேலைக்கான உத்திரவாதத்தை அதிகப்படுத்திக் கொள்கிறார். நல்ல முறையில் உடையணிந்திருக்கும் நபர் பலரின் கவனத்தைக் கவர்ந்து, அவர்களால் விரும்பப்படுகிறார்.
Celebrities – பிரபலங்களும் – ஆடைகளும்
சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் தங்களின் ஆடை விஷயத்தில் அக்கறையாகவும், கவனமுடனும் இருக்கிறார்கள். பல அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை இதற்கு உதாரணமாக கூறலாம். ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் பில் கிளிண்டன், மறைந்த ஈராக் அதிபர் சதாம் உசேன், முன்னாள் லிபிய அதிபர் கடாபி, முன்னாள் இந்தியப் பிரதமர்கள் நேரு மற்றும் இந்திரா காந்தி போன்ற பலரை உதாரணமாக கூறலாம்.
தொழிலதிபர்களில் பில்கேட்ஸ், விஜய் மல்லையா, அசிம் பிரேம்ஜி, ரத்தன் டாட்டா மற்றும் லஷ்மி மிட்டல் போன்ற பலரை உதாரணமாக கூறலாம். மேற்கூறிய வெற்றிகரமான மனிதர்கள், தங்களின் ஆடை விஷயத்தில் எப்போதுமே கவனமாக இருப்பவர்கள். ஏனெனில், அவர்களின் புறத்தோற்றத்தைப் பேணுவது அவர்களுக்கு முக்கியமான ஒன்று. ஆளுமை என்பது முக்கியமாக ஒரு மனிதனின் மனோநிலையை குறிப்பது என்றாலும், புறத்தோற்ற அம்சங்களும் ஆளுமையில் ஒரு பகுதிதான். அந்த வகையில், ஆடை அலங்காரம் என்பது ஒரு மனிதனின் ஆளுமையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
எதை மனம் விரும்புகிறது?
Campus_Students
சிலவகை மனிதர்கள் நல்லவிதமான ஆடைக்கு செலவழிப்பதை தண்டச் செலவு என்கின்றனர். ஆனால் பல மனிதர்கள், நல்ல ஆடைக்கு செலவு செய்வதை சிறந்த முதலீடு என்கின்றனர்.
பொதுவாக, அழகிய விஷயங்களையே மனித மனம் விரும்புகிறது. நன்றாக மலர்ந்த, நல்ல மனமுள்ள மலர்கள் பெரும்பான்மையோருக்குப் பிடிக்கும். இதேபோன்ற நிறைவடைந்த அம்சங்களையே இவ்வுலகம் விரும்புகிறது. ஒரு மனிதன் நன்றாக ஆடை அணிவதும் ஒரு நிறைவான அம்சம்தான்.
பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றில் நன்றாக உடையணியும் மாணவர்கள் தனி கவனத்தைப் பெற்று பாராட்டுகளையும் பெறுகிறார்கள். மேலும், பல தனியார் நிறுவனங்களில் மிடுக்கான ஆடையணியும் ஊழியர்கள் பாராட்டுதல்களுக்கு உள்ளாவதோடு, பரிசுகளையும் பெறுகிறார்கள்.
ஒரு பணிக்காக நேர்முகத் தேர்வுக்கு செல்கையில், ஒருவரின் ஆடை அலங்காரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆண்களைப் பொறுத்தவரை, சவரம் செய்த முகத்துடன், நல்ல நிறப் பொருத்தத்துடன், நல்ல பெல்ட்டுடன் ஆடை அணிந்து, காலில் ஷ¤ அணிந்து சென்றால், அவரின் தோற்றமே அவரின் வேலைக்கான உத்திரவாதத்தை ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அளித்துவிடும். தலை முடியை சீர்செய்திருப்பதும், நகங்களை வெட்டியிருப்பதும் நல்லது. வேலைக்கான நேர்முகத் தேர்வுகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த வேலைக்கேற்ற ஆடைகளை அணிந்து செல்லலாம்.
அலுவலகங்களைப் பொறுத்தளவில், அலுவலகத்தின் தன்மை, அது அமைந்துள்ள இடம் போன்ற பல அம்சங்கள், அதனுடைய பணியாளர்களின் ஆடை விஷயங்களைத் தீர்மானிக்கின்றன.
நீங்கள் இதையும் மனதில் வைத்துகொள்ளுங்க!
மிடுக்கான ஆடை என்றாலே, அதிக விலையுள்ள ஆடை என்ற அர்த்தமல்ல. அனைவராலும் ஆடைகளுக்கென்று அதிக பணம் செலவழிக்க இயலாது என்பது நடைமுறை உண்மை. நம்மால் முடிந்தளவு செலவுசெய்து எடுக்கும் ஆடையை நல்லவிதமாக பராமரித்து, அதை சரியான விதத்தில் அணிந்தாலே மிடுக்கான தோற்றம் கிடைக்கும். இருப்பதை வைத்து சிறப்பாக செய்வதே புத்திசாலித்தனம். அதேசமயம் நல்ல ஆடைக்காக செலவுசெய்வதே வீண் என்று நினைப்பதும் தவறு. “நல்லவிதமான ஆடை மட்டுமே வெற்றியைத் தந்துவிடாது, ஆனால் வெற்றியில் ஆடைக்கும் ஒரு பங்கு உண்டு”.