OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

உலகில் உள்ள 700 கோடி மனிதர்கள்

நாம் உயிர் வாழக் காரணாக இருக்கும் இந்த பூமி 70% தண்ணீரால் (கடலால்) சூழப்பட்டுள்ளது. நம்மை முழுவதுமாக சுற்றியுள்ள தண்ணீரில் 97% கடல் நீராகவும், 2% பனிக்கட்டியாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மீதமுள்ள 1% நன்னீரைதான் மனித இனம் தன் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்த முடியும்.

உலகில் உள்ள 700 கோடி மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களும் இந்த தண்ணீரை நம்பியே வாழ்கின்றன. மேலும், உலகம் தோன்றிய நாளில் இருந்து இன்று வரையில் உலகத்தில் உள்ள நல்ல தண்ணீரின் அளவு மாறவில்லை.

உலகம் தோன்றியதிலிருந்து நாளது வரை பல மாற்றங்களையும், பல வகை உயிரினங்கள் தோன்றியும், முழுவதுமாக அழிந்தும் வந்திருக்கின்றன. மாறாமல் இருப்பது தண்ணீர் மட்டுமே. தண்ணீரை புதிதாக உற்பத்தி செய்ய இயலாது, உருமாற்ற மட்டுமே முடியும்.

மனித நாகரிகங்களுக்கும் தண்ணீரே மையமாக உள்ளது. ஆதி காலத்தில் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்த 'மழை நாகரிக'த்தில் இருந்து, இந்த நவீன கணினி உலகம் வரை வேளாண்மைக்கும் தண்ணீர்தான் ஆதாரமாக உள்ளது. அதற்கான மோதல்களும் உலகளவிலும், உள்நாட்டு அளவிலும் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

நன்னீர்:
உலகில் உள்ள நீர்நிலைகளை, கடலில் உள்ள நீரை 'உவர் நீர்' என்றும், ஆறு, ஏரி, குளம், நீர்நிலைகள், சதுப்பு நிலங்களில் உள்ளதை 'நன்னீர்' என்றும் நீரியலாளர்கள் இரு வகையாக பிரித்துள்ளனர்.
ஆறு, ஏரி, குளங்கள், நீர்நிலைகளில் காணப்படும் இந்த 1% நன்னீரைதான் குடிநீராகவும், விவசாயத்துக்கும், கால்நடைகளுக்கும், இதர தேவைகளுக்கும் பயன்படுத்துகிறோம். ஆனால் முறையாக பயன்படுத்துகிறோமா என்று கேட்டால், இல்லை என்றுதான் கூற வேண்டும். தான் மட்டுமே அனைத்து வளங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற தீராத ஆசையின் விளைவாக, மற்ற உயிரினங்களுக்கும், அடுத்த தலைமுறைக்கும் நன்னீர் நிலைகளே இல்லாத ஒரு சூழல் உருவாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாம் காரணமாகி இருக்கிறோம்.
தமிழகத்தில் பல பத்தாண்டுகளுக்கு முன்பு வரை 39,000 ஏரிகள் இருந்தன. அவற்றில் 25,000க்கும் மேற்பட்டவை வானம் பார்த்த ஏரிகளாக இருந்துள்ளன. இன்றைக்கு தமிழகத்தில் 12,000க்கும் குறைவான ஏரிகளே உள்ளன. இருப்பவையும் குப்பை மேடாகவும், கழிவு நீர் குட்டைகளாகவும் காணப்படுகின்றன.

இவை தவிர, 53 ஆற்றுப்படுகைகளும், 18,26,906 கிணறுகளும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பருவமழை மூலம் ஆண்டுதோறும் 2,400 கோடி கனமீட்டர் தண்ணீரும் தமிழகத்துக்குக் கிடைக்கிறது. மீண்டும் ஊற்றுப்பெருக்கு எடுக்கும் வாய்ப்புள்ள மொத்த நிலத்தடி நீரின் அளவு 2,640 கோடி கனமீட்டர். இதில் ஆண்டுதோறும் 1,320 கோடி கன மீட்டர் நீரை நாம் பயன்படுத்தி வருகிறோம். ஊற்றுப் பெருக்கெடுக்கும் வாய்ப்புள்ள நிலத்தடி நீரையும் சேர்த்து உறிஞ்சுவதுடன், நீரையும் மாசுப்படுத்தி மீண்டும் பயன்படுத்த முடியாத சூழலை சந்தித்து வருகிறோம்.

சதுப்புநிலங்களும் மழைக்காடுகளும்
நம்முடைய நன்னீர் நிலைகளுக்கு சரியான உதாரணமாக சதுப்பு நிலங்களையும், மழைக்காடுகளையும் குறிப்பிடலாம். சதுப்பு நிலமென்றால் என்ன என்று கேட்கிறீர்களா?

நம் உடலில் உள்ள சிறுநீரகத்தை போல், அழுக்கை உறிஞ்சி தண்ணீரை சுத்தப்படுத்தும் பணியை ஈரநிலங்கள் எனப்படும் சதுப்பு நிலங்கள் செய்து வருகின்றன. சென்னைக்கு அருகில் அமைந்துள்ள 'பள்ளிக்கரணை' அழகியதோர் சதுப்பு நிலக் காடு ஆகும். ஒரு காலத்தில் 5,000 ஹெக்டேருக்கு பரந்து விரிந்திருந்து, வெறும் 50 ஆண்டுகளில் 500 ஹெக்டேராக சுருக்கப்பட்டுவிட்டது பள்ளிக்கரணை. இன்று அது அடைந்திருக்கும் மோசமான நிலையை சென்னையில் இருப்போர் அறிவர்.

ஒரு ஹெக்டேர் ஈரநிலம், ஒரு ஹெக்டேர் வெறும் நிலத்தை போல் 58 மடங்கு பயனுள்ளது. மீன்கள், பூச்சியினங்கள், நுண்ணுயிரிகள் போன்றவற்றுக்கு சதுப்புநிலம் ஏற்ற உறைவிடமாக அமைந்துள்ளது. இவற்றை உணவாக உண்ண வருகை தரும் பல வகை பறவைகளுக்கும் சதுப்புநிலம் பாதுகாப்பளிக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு சதுப்பு நிலங்கள் பெரும் பங்காற்றுகின்றன. 'பள்ளிக்கரணையை' காப்பாற்றியிருந்தால், சென்னையின் தற்போதைய குடிநீர் பஞ்சத்தை தவிர்க்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும்.

நன்னீரையும், சதுப்பு நிலங்களை நாம் மாசுபடுத்துவது, குப்பை மேடாக்குவது, கழிவுநீர் குட்டையாக்குவதால், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 35% மீன் வகைகளை இழந்துள்ளோம். கிட்டதட்ட 41% விதவிதமான மீன்கள் 1% நன்னீரையே நம்பியுள்ளன. அத்துடன், கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் 'வளர்ச்சி' என்ற பெயரில் 50% சதுப்பு நிலங்களை நாம் இழந்துள்ளோம். உலகில் உள்ள தண்ணீரின் அளவு, இன்று வரை மாறாமல் இருந்து வருகிறது என்பதை, இத்துடன் இணைத்து ஞாபகப்படுத்தி பார்த்துக் கொள்ள வேண்டும்.

'மழைக்காடு' என்றால் என்ன? பூமத்திய ரேகையின் இருபுறமும் இருக்கும் இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில், மழை அதிகம் பெய்யும் இடங்களில் (வருடத்திற்கு 150 செ.மீக்கு மேல்), பல்லூழி காலமாக வளர்ந்து அடர்ந்து செழித்திருக்கும் மரங்கள் சூழ்ந்த காடுகளே மழைக்காடுகள் என்றழைக்கப்படுகின்றன. தமிழில் 'சோலைக் காடுகள்' என்று அழைக்கிறோம். மாஞ்சோலை, களக்காடு, டாப்ஸ்லிப், சோலையாறு, வால்பாறை போன்ற தமிழக மலைப்பகுதிகளில் 'சோலைக்காடுகள்' காணப்படுகின்றன.

ஒரு 40 ஹெக்டேர் உள்ள காடு ஒன்று, மனிதத் தலையீட்டால் அழியும்போது 1,500 வகை பூக்கும் செடி, கொடிகளும், 700 வகை மரங்களும், 150 வகை பூச்சி, புழுக்களும், 100 வகை ஊர்வனவும், 60 வகை நீர்நில வாழ்விகளும் அழிந்து போகின்றன என்பதை உணரும்போது தண்ணீரும், அவற்றை நம்பி வாழும் சிறு உயிரினங்களின் வாழ்விடம் அழிவதையும் எப்படி நாம் ஆதரிக்க முடியும்..?

ஒரு மழைக்காட்டின் மரம் 400 வகைப் பூச்சிகளுக்கு வாழிடமாக இருக்கிறது என்று ஐ.நா.வின் சுற்றுச்சூழல் அறிக்கை சுட்டிக்காட்டும்போதும், ஒட்டுமொத்த பூமியும் தண்ணீரை நம்பித்தான் இயங்குகிறது என்னும் போது, தண்ணீரை முதற் படிநிலையில் நம்பி இந்தப் பூச்சிகள் அனைத்தும் இயங்குகின்றன என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அளவுக்கு அதிகமான தண்ணீரை வீணடிப்பதுடன், மாசுப்படுத்துவதால் தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழலை உருவாக்கி வருகிறோம். தண்ணீர் மாசுபடுவதாலும், அழிக்கப்படுவதாலும், நீர்நிலையை வாழிடமாக கொண்டுள்ள எண்ணற்ற மீன் இனங்கள், புழு, பூச்சிகள், நுண்ணுயிரிகள், நீர்நில வாழ்விகள் அழிவை சந்திக்கின்றன. தொடர்ச்சியாக இவற்றை உணவாக உண்டு வாழும் பறவைகளும் அழிவை சந்திக்கும்போது, பறவைகள் அற்ற உலகை சிறிது கற்பனை செய்து பாருங்கள்.

'மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளால் வாழ முடியும். பறவைகள் அற்ற உலகில் மனிதனால் வாழவே இயலாது' என்ற முதுபெரும் பறவையியலாளர் சலிம் அலியின் வார்த்தையை கவனத்தில் கொள்வோம். அடுத்த தலைமுறைக்கு 'தண்ணீர் இல்லாத தேச'த்தை கையளிக்கப் போகிறோமா என்பதை ஒரு நிமிடம் நம்மை நாமே கேட்டுக் கொள்வோம்.

நம்மிடையே இருக்கின்ற நன்னீர் நிலைகளையும், சதுப்பு நிலங்களையும், சோலைக்காடுகளையும், உவர்ப்பு நீர்நிலைகளையும் காக்க வேண்டியது நம்முன் இருக்கும் முதன்மையான பணி

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

this information is much more important to each and every people.my heartfelt thanks for your valuable information