OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 24 ஜனவரி, 2012

கடலூர்:புயலால் இடம்பெயர்ந்த பறவைகள்




"தானே' புயல் கடலூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான வீடுகளைச் சிதைத்து, மக்களைப் புகலிடம் இன்றி தவிக்க விட்டதைப்போல், மரங்கள் அனைத்தையும் சிதைத்து பறவைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கி விட்டது.
பறவைகளுக்கு புயல் நிவாரணம் வழங்க எந்த அரசால் முடியும்? எனவே அவை கடலூர் மாவட்டத்தை விட்டே இடம் பெயர்ந்து சென்றுவிட்டன.
"தானே' புயலில் கடலூர் மாவட்டத்தில் 3.5 லட்சம் வீடுகளுக்கு மேல் சேதம் அடைந்தன. வீடுகளின் கூரைகள் பலவும் காணாமல் போய்விட்டன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் புகலிடம் இன்றி தவித்தனர்.
அரசு புயல் நிவாரணம் வழங்கி, மக்களின் துயரத்தை ஓரளவேனும் துடைத்து இருக்கிறது.   மரங்கள்தான் பறவைகளின் வாழ்விடங்கள். பகல் நேரங்களில் இரைத்தேடி வானில் சிறகடித்து அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தாலும், இரவில் பாதுகாப்பு கருதியும், கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யவும், ஏதேனும் மரக்கிளைகளைத்தான் அவை தஞ்சம் அடைகின்றன. புயலில் கடலூர் மாவட்டத்தில் 2 கோடி மரங்களுக்கு மேல் சாய்ந்து விழுந்து, விறகாகி விட்டன.
இதனால் பறவைகளின் புகலிடங்களும், புயலுக்குப் பலியாகி விட்டன. இந்நிலையில்,  "தானே' புயல் தாக்கத்தையும் தாங்கி, கிளைகளை இலைகளை இழந்து நிற்கும் சில மொட்டை மரங்கள்தான் இன்று, பறவைகளின் சரணாலயங்களாக மிஞ்சி நிற்கின்றன. மொட்டை மரங்களில் பகலில் பறவைகளுக்கு நிழலும் இல்லை, இரவில் கடும் குளிரில் இருந்து பாதுகாப்பும் இல்லை என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
மொட்டை மரங்கள் எந்த அளவுக்கு பறவைகள் கூடுகட்ட வசதியாக இருக்கும் என்று தெரியவில்லை.புயலில் கடலூரில் ஏராளமான பறவைகள் இறந்தும், கூடுகள் சிதைந்தும் இருக்கக் கூடும் என்றும், புயலுக்குப் பின் புகலிடம் இன்றியும், இனப்பெருக்கம் செய்வதற்கு வசதியாக கூடுகள் கட்ட மரங்கள் கிடைக்காமலும், பிற மாவட்டங்களுக்கு அவை இடம் பெயர்ந்து சென்று விட்டதாகவும் பறவை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் எந்த சூழ்நிலையிலும் வாழும் சக்தி கொண்ட காகங்களைத்தான் இப்போது மாவட்டத்தில் எங்கும் பார்க்க முடிகிறது. மற்ற பறவைகளை பெரும்பாலும் பார்க்க முடியவில்லை.

கருத்துகள் இல்லை: