நாம் உயிர் வாழக் காரணாக இருக்கும் இந்த பூமி 70% தண்ணீரால் (கடலால்) சூழப்பட்டுள்ளது. நம்மை முழுவதுமாக சுற்றியுள்ள தண்ணீரில் 97% கடல் நீராகவும், 2% பனிக்கட்டியாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மீதமுள்ள 1% நன்னீரைதான் மனித இனம் தன் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்த முடியும்.
உலகில் உள்ள 700 கோடி மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களும் இந்த தண்ணீரை நம்பியே வாழ்கின்றன. மேலும், உலகம் தோன்றிய நாளில் இருந்து இன்று வரையில் உலகத்தில் உள்ள நல்ல தண்ணீரின் அளவு மாறவில்லை.
உலகம் தோன்றியதிலிருந்து நாளது வரை பல மாற்றங்களையும், பல வகை உயிரினங்கள் தோன்றியும், முழுவதுமாக அழிந்தும் வந்திருக்கின்றன. மாறாமல் இருப்பது தண்ணீர் மட்டுமே. தண்ணீரை புதிதாக உற்பத்தி செய்ய இயலாது, உருமாற்ற மட்டுமே முடியும்.
மனித நாகரிகங்களுக்கும் தண்ணீரே மையமாக உள்ளது. ஆதி காலத்தில் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்த 'மழை நாகரிக'த்தில் இருந்து, இந்த நவீன கணினி உலகம் வரை வேளாண்மைக்கும் தண்ணீர்தான் ஆதாரமாக உள்ளது. அதற்கான மோதல்களும் உலகளவிலும், உள்நாட்டு அளவிலும் நடைபெற்ற வண்ணம் உள்ளன.