பெண்கள் எவரிடமும்
கொஞ்சிப்பேசக்கூடாது என்பதல்ல! உங்கள் கணவரிடம்
எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சிப்பேச வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அதைவிட
அதிகமாகக்கூட கொஞ்சிப்பேசலாம். கொஞ்சிப்பேசுங்கள் கெஞ்சிப்பேசுங்கள்... இது
தம்பதிகளின் இல்வாழ்க்கை செழித்தோங்க உதவும். குழந்தைகளிடமும்.. ஏன் உங்கள் தாயாரிடமும்
சகோதரிகளிடமும் கூட கொஞ்சிப்பேசுவதில் தவறில்லை. அது குடும்பத்தில் பாசத்தை
வளர்க்கும்.
ஒரு பெண்ணிடத்தில் உரையாடுகின்ற எந்த
ஒரு ஆடவனும் முற்றிலும் துறந்த முனிவனாகப் பேச மாட்டான். அப்படிப்பட்ட இயல்பில்
மனிதன் படைக்கப்படவும் இல்லை.
ஒரு பெண்ணிடம் பேசும் போது அவளின்
கண் சாடை கிடைக்காதா? செவ்விதழ்கள்
விரித்து சிரிக்க மாட்டாளா? என
சிரிப்புக்காக தவம் கிடப்பான். சிரித்து விட்டால் போதும் அது தனது காமப் பசியைத்
தீர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு என்று எடுத்துக் கொண்டு அடுத்தக்கட்ட
நடவடிக்கையில் இறங்கி விடுவான். இந்நிலையில்
பெண்கள் கொஞ்சிப்பேசினால் என்னவாகும் என்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம். எனவே ஒரு பெண் எப்போதும் ஆடவனிடம்
கண்டிப்பாகவும், கடுமையாகவும்
இருக்க வேண்டும்.
ஒரு பெண் ஓர் ஆணிடம் எப்படி நடந்து
கொள்ள வேண்டும் என்று நாம் வாழும் சமுதாய அமைப்பு முறை மேற்கண்டவாறு கோடிட்டுக்
காட்டுகின்றது. ஆடவனிடம் பெண்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்ற நிலைபாட்டை
சமுதாயம் அங்கீகரிக்கின்றது. காரணம் இதைச் சமுதாயம் தன் அனுபவத்தின் மூலம்
உணர்ந்திருக்கின்றது.
இஸ்லாமிய மார்க்கம் இதைத் தான்
வஇயுறுத்திக் கூறுகின்றது. பெண்கள் ஆண்களிடம் குழைந்து, கொஞ்சி, நயந்து பேசினார்கள் என்றால் அது
அவர்கள் சபல உணர்வுகளுக்குக் காட்டும் பச்சைக் கொடியாகி விடும் என்று
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.
''நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும்
போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது
உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்''. (அல்குர்ஆன் 33:32)
அதுவும் அல்லாஹ் யாரை நோக்கிக்
கூறுகின்றான்? சதாவும்
வஹீயின் பாதுகாப்பில் இருந்து கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்
மனைவியரை நோக்கிக் கூறுகின்றான் எனும் போது மற்றவர்களின் நிலைமை எம்மாத்திரம்? அல்லாஹ்
பெண்களை வியாபாரம், தொழில், கல்வி, குடும்ப விவகாரங்கள் தொடர்பாக வெளியே செல்வதைத்
தடுக்கவில்லை. ஆனால் இந்த விவகாரங்களில் வரைகளையும், வரம்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறான். ஆனால்
இந்த வரம்புகள் இன்று காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.