சி.பி.ஐ என்றழைக்கப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை பற்றி நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது. ஊர் நாட்டில் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் வீட்டிலிருந்து காணாமல் போன ஜிம்மியில்  ஆரம்பித்து லோக்கல் போலீசால் ‘கண்டு’ பிடிக்க முடியாத கோழி களவாணி வரை துப்புத் துலக்கிக் கண்டு பிடிக்கும் சூராதி சூரர்களாக இவர்களை ஊடகங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம். கருணாநிதி வீட்டில் சி.பி.ஐ விசாரணை ரெய்டு என்றும் ஏதோ இந்த சூரப்புலிகளைப் பார்த்து கருணாநிதி குடும்பமே நடுநடுங்கி வீட்டின் மூலையில் குந்த வைத்து உட்கார்ந்திருப்பது போல தினமலர் அடிக்கடி குதூகலிப்பதையும் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
தமிழ்த் திரையுலகின் தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் சூப்பர் கமாண்டோவான கேப்டன் விஜயகாந்த் பல படங்களில் டில்லி சி.பி.ஐ அதிகாரியாகத் தோன்றி பாகிஸ்தான் தீவிரவாதியிடம் தங்கத் தமிழில் லெச்சர் அடித்தே டயர்டாக்கி மடக்கிப் பிடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். மலையாளத் திரைப்படங்களிலும் கூட மம்மூட்டி மோகன்லால் வகையறாக்கள் சி.பி.ஐ அதிகாரிகளாகத் தோன்றி உள்ளூர் போலீசால் கண்டே பிடிக்கமுடியாத பல்வேறு சிக்கலான வழக்குகளைத் தீர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ஏதோ கோழியோ ஆடோ களவு போன மேட்டரில் சி.பி.ஐ விசாரணை கோரி தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் “அட விடுங்கப்பா… இவங்க எத்தனை ஊர் பஞ்சாயத்தைத் தான் தீர்க்க முடியும்” என்று சி.பி.ஐயின் மேல் கருணையோடு ஒரு நீதிபதி தீர்ப்பு கூட வழங்கியிருந்தார்.
இப்படியாக சி.பி.ஐ பற்றிய ஒரு பயங்கரமான இமேஜும், அவர்களின் விசாரணையின் மேல் மக்களிடையே ஒரு நம்பிக்கையையும் பல ஆண்டுகளாகவே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதுக்கு இத்தனை பில்டப் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. இப்படி ஊடகங்களாலும் சினிமா உலகத்தாலும் ஷெர்லக் ஹோம்சுக்கு இணையான துப்பறிவாளர்களாக ஜாக்கி வைத்து தூக்கிப் பிடிக்கப்பட்ட சி.பி.ஐ, சமீப நாட்களாக மக்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல் அல்லாமல் எதார்த்தத்தில் சீரியஸான காமெடி பீஸ்களாகத் தான் இருக்கிறார்கள் என்கிற உண்மை இப்போது அம்பலமாகியிருக்கிறது.