OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 25 அக்டோபர், 2011

உங்களின் வெற்றிக்கு ஆடையின் பங்களிப்பு!!


Dress Codeசமூகத்தில் ஒரு மனிதனின் வெற்றியை, மதிப்பை, ரசனையை தீர்மானிக்கும் அம்சமாக ஆடை விளங்குகிறது. நாம் வேலைக்கு செல்லும் போதும் அல்லது கல்லூரிக்கு செல்லும் போதும் நம்மில் பலர் தங்களின் ஆடைகளை கவனம் செலுத்துவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்!. இவர்களின் இந்த செயபாடுகள், அவர்களின் வளர்ச்சியை தீர்மானிப்பதாக உள்ளது.
“ஆடையில்லாத மனிதன் அரை மனிதன் || ஆள் பாதி, ஆடை பாதி” என்பது ஏறத்தாழ அனைவருமே கேள்விப்பட்ட பொன்மொழிகள்.
நன்றாக உடை உடுத்துவதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை மற்றும் வெற்றிக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் சிலர் கூற கேட்டிருப்போம். இந்த ஆலோசனைகளை மாணவர்கள் ஒருபோதும் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம். ஏனென்றால், ஒரு மனிதனின் உயர்வுக்கு சிறப்பாக ஆடை அணிவதும் முக்கிய காரணமாகும்.
மிடுக்காக உடையணிவது உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உங்களின் தோற்றப் பொலிவை மேம்படுத்தும். ஒரு நேர்முகத் தேர்வுக்கு செல்கையில், மிடுக்காக உடையணிந்து செல்லும் நபர் தனது வேலைக்கான உத்திரவாதத்தை அதிகப்படுத்திக் கொள்கிறார். நல்ல முறையில் உடையணிந்திருக்கும் நபர் பலரின் கவனத்தைக் கவர்ந்து, அவர்களால் விரும்பப்படுகிறார்.
Celebrities – பிரபலங்களும் – ஆடைகளும்
சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் தங்களின் ஆடை விஷயத்தில் அக்கறையாகவும், கவனமுடனும் இருக்கிறார்கள். பல அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை இதற்கு உதாரணமாக கூறலாம். ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் பில் கிளிண்டன், மறைந்த ஈராக் அதிபர் சதாம் உசேன், முன்னாள் லிபிய அதிபர் கடாபி, முன்னாள் இந்தியப் பிரதமர்கள் நேரு மற்றும் இந்திரா காந்தி போன்ற பலரை உதாரணமாக கூறலாம்.
தொழிலதிபர்களில் பில்கேட்ஸ், விஜய் மல்லையா, அசிம் பிரேம்ஜி, ரத்தன் டாட்டா மற்றும் லஷ்மி மிட்டல் போன்ற பலரை உதாரணமாக கூறலாம். மேற்கூறிய வெற்றிகரமான மனிதர்கள், தங்களின் ஆடை விஷயத்தில் எப்போதுமே கவனமாக இருப்பவர்கள். ஏனெனில், அவர்களின் புறத்தோற்றத்தைப் பேணுவது அவர்களுக்கு முக்கியமான ஒன்று. ஆளுமை என்பது முக்கியமாக ஒரு மனிதனின் மனோநிலையை குறிப்பது என்றாலும், புறத்தோற்ற அம்சங்களும் ஆளுமையில் ஒரு பகுதிதான். அந்த வகையில், ஆடை அலங்காரம் என்பது ஒரு மனிதனின் ஆளுமையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
எதை மனம் விரும்புகிறது?
Campus_Students
சிலவகை மனிதர்கள் நல்லவிதமான ஆடைக்கு செலவழிப்பதை தண்டச் செலவு என்கின்றனர். ஆனால் பல மனிதர்கள், நல்ல ஆடைக்கு செலவு செய்வதை சிறந்த முதலீடு என்கின்றனர்.
பொதுவாக, அழகிய விஷயங்களையே மனித மனம் விரும்புகிறது. நன்றாக மலர்ந்த, நல்ல மனமுள்ள மலர்கள் பெரும்பான்மையோருக்குப் பிடிக்கும். இதேபோன்ற நிறைவடைந்த அம்சங்களையே இவ்வுலகம் விரும்புகிறது. ஒரு மனிதன் நன்றாக ஆடை அணிவதும் ஒரு நிறைவான அம்சம்தான்.
பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றில் நன்றாக உடையணியும் மாணவர்கள் தனி கவனத்தைப் பெற்று பாராட்டுகளையும் பெறுகிறார்கள். மேலும், பல தனியார் நிறுவனங்களில் மிடுக்கான ஆடையணியும் ஊழியர்கள் பாராட்டுதல்களுக்கு உள்ளாவதோடு, பரிசுகளையும் பெறுகிறார்கள்.
ஒரு பணிக்காக நேர்முகத் தேர்வுக்கு செல்கையில், ஒருவரின் ஆடை அலங்காரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆண்களைப் பொறுத்தவரை, சவரம் செய்த முகத்துடன், நல்ல நிறப் பொருத்தத்துடன், நல்ல பெல்ட்டுடன் ஆடை அணிந்து, காலில் ஷ¤ அணிந்து சென்றால், அவரின் தோற்றமே அவரின் வேலைக்கான உத்திரவாதத்தை ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அளித்துவிடும். தலை முடியை சீர்செய்திருப்பதும், நகங்களை வெட்டியிருப்பதும் நல்லது. வேலைக்கான நேர்முகத் தேர்வுகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த வேலைக்கேற்ற ஆடைகளை அணிந்து செல்லலாம்.
அலுவலகங்களைப் பொறுத்தளவில், அலுவலகத்தின் தன்மை, அது அமைந்துள்ள இடம் போன்ற பல அம்சங்கள், அதனுடைய பணியாளர்களின் ஆடை விஷயங்களைத் தீர்மானிக்கின்றன.
நீங்கள் இதையும் மனதில் வைத்துகொள்ளுங்க!
மிடுக்கான ஆடை என்றாலே, அதிக விலையுள்ள ஆடை என்ற அர்த்தமல்ல. அனைவராலும் ஆடைகளுக்கென்று அதிக பணம் செலவழிக்க இயலாது என்பது நடைமுறை உண்மை. நம்மால் முடிந்தளவு செலவுசெய்து எடுக்கும் ஆடையை நல்லவிதமாக பராமரித்து, அதை சரியான விதத்தில் அணிந்தாலே மிடுக்கான தோற்றம் கிடைக்கும். இருப்பதை வைத்து சிறப்பாக செய்வதே புத்திசாலித்தனம். அதேசமயம் நல்ல ஆடைக்காக செலவுசெய்வதே வீண் என்று நினைப்பதும் தவறு. “நல்லவிதமான ஆடை மட்டுமே வெற்றியைத் தந்துவிடாது, ஆனால் வெற்றியில் ஆடைக்கும் ஒரு பங்கு உண்டு”.

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

தவறு செய்யும் அதிகார வர்க்கம் திருந்தும். அரசு நடவடிக்கை எடுக்குமா?





வருமுன் காப்போம் என்பது அரசின் தாரக மந்திரமாக இருக்கவேண்டும். ஆனால் நம்மை ஆளும் அதிகார வர்க்கத்திற்கோ நாம் சில இழப்புகளை சந்தித்தபின்தான் அவர்களுக்கு சட்டம் போடவேண்டும் என்ற என்னமோ அல்லது இருக்கும் சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்ற என்னமோ, அல்லது பாதுக்கப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற என்னமோ  ஏற்படுவதை நாம் காண்கிறோம்.  ஒரு கல்விக்கூடத்தை நடத்த வேண்டுமெனில், அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளின் படிதான் கல்வி நிலையங்கள் இயங்குகின்றதா என்பதை கடுமையாக கண்காணித்து இருந்தால் சில ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட குழந்தைகளை தீயின் கோரத்திற்கு பலிகொடுத்திருக்கமாட்டோம். அதே போல, அரசு கல்வி நிலையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் அரசு காட்டும் அலட்சியம் அப்பாவிகளின் உயிருக்கு கேடாய் முடிகிறது. அரசு பள்ளிகளின் கட்டங்களின் இஸ்திரத்தன்மை பல இடங்களில் பயமுறுத்தும் வகையில் உள்ளன. பல கல்வியங்களின் அடிப்படை பாதுகாப்பு மற்றும்  சுகாதார விஷயங்கள் பொதுப்பணித் துறையின் மெத்தனப் போக்குகளால் மாணவ- மாணவியரின் உயிருக்கு உலைவைக்கும் சம்பவங்களுக்கு காரணியாக அமைந்து விடுகிறது. அந்தவகையில், பத்திரிக்கையில் வந்த செய்தி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.  

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுமார் 900க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படிக்கும் நிரவி, கீழராஜவீதியை சேர்ந்த நைனா மரைக்காயர் மகள் மெகபூப்நிசா(வயது 18) என்ற மாணவி கல்லூரிக்கு வந்தார். காலை 9.30 மணிக்கு வகுப்புகள் தொடங்கும் என்பதால் அவர் சக மாணவிகளுடன் கல்லூரியின் 2வது மாடியில் உள்ள தனது வகுப்பறைக்கு அருகில் உள்ள வராண்டாவில் நின்று பேசிக் கொண்டிருந்தார். 
அப்போது முதல்நாள் நடைபெற்ற விருந்தின் போது மாணவிகள் சாப்பிட்டு விட்டு கீழே போட்டிருந்த உணவுப்பொருட்களை சாப்பிட குரங்குகள் கூட்டமாக அந்த பகுதிக்கு வந்தன. மாணவிகளை கண்ட குரங்குகள் திடீரென அவர்களை விரட்ட தொடங்கின.இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது கட்டைச்சுவர் அருகே நின்று கொண்டிருந்த மாணவி மெகபூப்நிசா நிலை தடுமாறி 2வது மாடியில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்தார். மாணவி விழுந்த போது முதல் மாடியில் உள்ள வகுப்பறை ஜன்னல் சன்சேடு அவரது நெற்றியில் குத்திக் கிழித்தது. அவர் தரையில் வந்து விழுந்தபோது இடது கால் முறிந்தது. தோள்பட்டையிலும் படுகாயம் ஏற்பட்டது. அவர் கீழே விழுந்ததில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. 
இது குறித்து தகவல் அறிந்த மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு ஆம்புலன்சில் அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் இன்றி மாணவி மெகபூப்நிஷா பரிதாபமாக இறந்தார்.
 
அப்போது பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள காரைக்காலுக்கு வந்திருந்த அமைச்சர் ராஜவேலு மருத்துவமனைக்கு சென்று மாணவியின் தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் கல்லூரிக்கு சென்ற அமைச்சர் ராஜவேலு, மாணவி நின்று பேசிக் கொண்டிருந்த இடம், தவறி விழ காரணமாக இருந்த கட்டைச் சுவர், கீழே விழுந்த இடம் ஆகியவற்றை பார்வையிட்டார். 
தொடர்ந்து கல்லூரி முதல்வர் அறைக்குச் சென்ற அமைச்சர் கல்லூரி முதல்வரிடம் சுவற்றின் உயரத்தை அதிகப்படுத்தி, இரும்பு ஜன்னலை வைக்க வேண்டியதுதானே? என்று கேட்டார். அதற்கு கல்லூரி முதல்வர் இது குறித்து பொதுப்பணித்துறைக்கு பல முறை கடிதம் எழுதி விட்டோம். எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை என்று கூறினார். இதைக்கேட்ட அமைச்சர் அங்கிருந்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம், உடனடியாக கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டைச்சுவர்களின் உயரத்தை அதிகப்படுத்தி, இரும்பு ஜன்னல்களை பொருத்த உத்தரவிட்டார்'' என்கிறது அந்த செய்தி.
 
இந்த சம்பவத்தில், சுவற்றின் உயரத்தை உயர்த்திடக் கோரி கல்லூரி நிர்வாகம் பலமுறை பொதுப்பணித் துறைக்கு வேண்டுகோள் விடுத்தபோதும், பொதுப்பணித் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியுள்ளனர். அதன் காரணமாகவே ஒரு அப்பாவி மாணவியின் உயிர் பறிபோயுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின் அந்த சுவற்றை உயர்த்த அதிரடியாக உத்தரவிட்ட அமைச்சரின் செயல் பாராட்டுக்குரியது எனபதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இவ்வளவு நாளாக இந்த் விஷயத்தை கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் உள்ளிட்ட அடுக்கடுக்ககன சலுகைகள் பெறும் அரசு அதிகாரிகள் அவர் தம் கடமையை செய்யத்தவறினால் அவர்களை கடுமையாக தண்டிக்க அரசு முன்வரவேண்டும். அப்போதுதான் தவறு செய்யும் அதிகார வர்க்கம் திருந்தும். அரசு நடவடிக்கை எடுக்குமா?